Published : 25 Aug 2016 12:03 PM
Last Updated : 25 Aug 2016 12:03 PM
அன்றாடம் மாலை நேரத்தில் திருவாய்மொழி விரிவுரை நிகழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் “ஒழிவில்காலமெல்லாம்” என்ற திருவாய்மொழிப் பதிகத்தின் ஆழ்பொருளை விவரித்து வரும்போது, “சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அந்தமில் புகழ்க்காரெழில் வண்ணனே” என்ற பாசுரப் பகுதியில் மிக உள்ளம் ஈடுபட்டுப் பரவசராயிருந்தார்.
தம்முடைய திரு முன்னர் அமர்ந்து பாசுர விரிவுரை கேட்ட சிஷ்யர்களை நோக்கித் திருமலையேறித் திருநந்தவனம் உண்டாக்கித் திருவேங்கடமுடைய பெருமானுக்குப் பிரீதியாக மலர்மாலைகளைக் கட்டி அணிவிப்பார் யாரேனும் முன் வருவார்களோ? என்று வினவினார்.
அந்தக் கோஷ்டியில் அப்போதுதான் வந்து சேர்ந்திருந்த அனந்தாழ்வான் தாம் உடனே திருமலைக்குச் செல்வதாக சம்மதித்தார். அவரை ராமானுஜர் “நீரே ஆண்பிள்ளை!” என்று பாராட்டினார். அவரையே ‘அனந்தாண்பிள்ளை’ என்று கோஷ்டியில் பாராட்டினார். அவரும் திருமலையில் தங்கியிருந்து மலர்த்தோட்டம் அமைத்துத் திருவேங்கடமுடையானுக்குக் கைங்கர்யம் செய்து வருவதைக் கேள்விப்பட்ட ராமானுஜர் அவருடைய கைங்கரியத்தைப் பாராட்டவும் திருவேங்கமுடையானை சேவிப்பதற்கும் விரும்பித் திருமலை யாத்திரையை மேற்கொண்டார்.
இது எங்கு போகும் வழி
யாத்திரை நடுவில் திருக்கோவலூர் சென்று திருவிக்கிரமமூர்த்தியை மங்களாசாசனம் செய்து புறப்பட்டு வருகையில் ஊருக்கு வெளியே இரண்டு வழிகள் பிரிவதைக் கண்டு திகைத்தார். அப்போது ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் நிற்பதைக் கண்டு “இது எங்கு போகும் வழி?” என்று வினவினார்.
அவர்களும் “இந்த வழி யஜ்ஞேசர் (எச்சான்) என்பவரிடம் போய்ச் சேர்க்கும். அவர் நல்ல பணக்காரசாமி. அந்த வழி பருத்திக் கொல்லையம்மான் வீட்டுக்குப் போய்ச் சேரும். அவர் பரம சாதுவானசாமி” என்று பதில் சொன்னார்கள்.
ராமானுஜரும் சாதுக்களுக்கு மிகவும் இஷ்டமானவர். ஒரு சாதுவான மகான் இருப்பிடத்துக்கு வழிகாட்டிய ஆடு மேய்க்கும் சிறுவனைக் கைகூப்பி வணங்கி, அங்கிருந்து பருத்திக் கொல்லையம்மான் என்று அழைக்கப்பட்ட உஞ்சவிருத்தி பண்ணி ஜீவிக்கும் ஏழைச் சாதுவான வரதாசாரியர் குடிசையை அடைந்தார்.
எளியவனுக்கு வணக்கம்
ஸ்ரீராமானுஜர் பருத்திக் கொல்லையம்மான் என்று அழைக்கப்பட்ட உஞ்சவிருத்தி அந்தணர் இல்லத்தில் தங்கி விடைபெற்றுக் காஞ்சிபுரம் சென்று தேவப்பெருமாளைத் திருக்கச்சிநம்பி துணையுடன் சேவித்து அங்கிருந்து திருமலை திருப்பதி நோக்கிப் புறப்பட்டார்.
“சென்று வணங்குமினோ சேண் உயர்வேங்கடத்தை” என்ற திருமழிசையாழ்வார் பாசுரவரிகளை நினைத்துக் கொண்டே அடியார்கள் புடை சூழத் திருமலை நோக்கிப் புறப்பட்டார்.
வழி நடுவில் பல பாதைகள் சந்திக்கும் இடம் குறுக்கிட்டதும், ராமானுஜர் எவ்வழியில் செல்வது என்று திகைத்தார். அப்போது ஒரு கழனியில் ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த எளிய விவசாயியைக் கண்டு “ஐயா! திருமலைக்கு வழி எங்கே?” என்று வினவினார்.
அந்தத் தோட்டக்காரன் ஏற்றத்திலிருந்து இறங்கி வந்து சரியான வழியைக் காட்டினான். உடனே ராமானுஜர் தம்முடைய சிஷ்யர்களைப் பார்த்து “கண்டீர்களா! விரஜா தீரத்தில் அமானவன் என்கிற தேவன் வைகுந்தம் புகுவதற்கு வழிகாட்டுவது போல் இன்று இந்த ஏற்றக்காரன் நமக்குத் திருமலை செல்ல வழிகாட்டினான்” என்று மிகவும் உகந்து அந்த ஏற்றமிறைப்பவனை, தேவனாகவே மதித்து இருகரம் கூப்பித் தொழுது விடைபெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT