Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM
தமிழகத்தின் பல பகுதிகளில் ஐயனார் கோயில்களைப் பார்க்கிறோம். மேலும் சாஸ்தா, ஹரிஹரன் போன்ற தெய்வங்களைப் பற்றி பரவலாகப் பேசுகிறோம். ஆனால், இவை அனைத்தும் யாரைக் குறிக்கின்றன தெரியுமா? புத்தரை.
சாத்தன் அல்லது சாத்தனார் என்ற பெயர் சாஸ்தா என்ற வடமொழிப் பெயரின் திரிபுதான். உண்மையில் சாஸ்தா என்பது புத்தரின் பெயர்களுள் ஒன்று. சாத்தன், சாஸ்தா என்பதற்குச் சாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவர் என்று அர்த்தம்.
பண்டைத் தமிழகத்தில் சாத்தன் என்ற பெயர் புத்தரையே குறித்தது. அக்காலத் தமிழ்ப் பௌத்தர்கள் தங்கள் பையன்களுக்கு இப்பெயரைச் சூட்டினர். சாத்தன் என்ற பெயர் சங்க நூல்களிலும் பதிவாகியுள்ளது. பௌத்த நூலாகிய மணிமேகலையை இயற்றியவர் பௌத்த மதத்தைச் சேர்ந்த சீத்தலைச் சாத்தனார்.
கன்னடத் துளு பகுதியில் உள்ள சாஸ்தாவு குடி, சாஸ்தா வேஸுவரம், சாஸ்தாவுகள என்ற பெயரில் அமைந்த கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்து இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன என்கின்றன ஆராய்ச்சிகள். கேரளத்தில் இப்போதும் சாஸ்தா கோயில்கள் உள்ளன. இவற்றுக்குச் சாத்தன் காவுகள் என்று பெயர். காவு அல்லது கா என்பதற்குத் தோட்டம், பூஞ்சோலை என்று அர்த்தம். பண்டைத் தமிழகத்தில் பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளுக்கு நடுவே அமைந்திருந்தன. எனவே, இந்தச் சாத்தன் காவுகளும் பௌத்தக் கோயில்களாக இருந்தவையே.
சாத்தனார் என்ற பெயருக்கு மலையாளத்தில் ஐயப்பன் என்ற அர்த்தமும் உண்டு என்கிறார் பௌத்த அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.
ஆனால் பௌத்த மதத்தை இந்து மதம் சுவீகரித்துக்கொண்டபோது, பல புராணக் கதைகள் உருவாகின. வைணவர்கள் புத்தரைத் திருமாலின் அவதாரம் என்கின்றனர். சைவ சமயத்தினரோ, புத்தரைத் திருமாலுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தை என்றே கூறிவிட்டனர். தேவாரத்தில் அப்பர் அப்படிச் சொல்லியுள்ளார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் முன்பு இருந்த புத்தர் உருவச் சிலைக்கு சாஸ்தா என்றே பெயர். ஐந்து அடி உயரத்தில் புத்தர் நின்றவாறு உபதேசம் செய்வது போலிருந்த அந்தச் சிலை தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
சாஸ்தா, சாத்தன் என்ற சொற்களுக்கான தமிழ்ச் சொல் ஐயன் அல்லது ஐயனார். இதற்குக் குரு, ஆசான், உயர்ந்தவர் என்று அர்த்தம். பிற்காலத்தில் சாத்தனார், ஐயனார், அரிஹரபுத்திரர் என்றழைக்கப்பட்ட இந்தத் தெய்வம் கிராமத் தெய்வமாக மாற்றப்பட்டுவிட்டது.
வேறு சில இடங்களிலோ புத்தர் சிலை முனீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறது. புத்தருக்கு சாக்கிய முனி என்றொரு பெயர் உண்டு. அதிலிருந்தே முனீஸ்வரன் என்ற பெயர் வந்திருக்க வேண்டும். அந்தச் சிலைகளைக் கூர்ந்து பார்த்தாலே, அவை புத்தர் சிலை என்பதையும், பௌத்த வழி வந்த அடையாளங்களையும் உணர முடியும்.
தற்போது பல இடங்களில் இருக்கும் தர்மராஜா கோயில்களும் பண்டைய பௌத்தக் கோயில்களாக இருந்திருக்க வேண்டும். தர்மன் அல்லது தர்மராஜன் என்பது புத்தரின் பெயர்களில் ஒன்று. பிங்கல நிகண்டிலும் திவாகரத்திலும் புத்தரின் பெயர் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்தக் கோயில்கள் மதிப்பிழந்த காலத்தில், பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான தர்மனின் கோயில்களாக அவை மாற்றப்பட்டுவிட்டன. புகழ்பெற்ற மாமல்லபுரம் சிற்பத் தொகுதிகளில் ஒன்றான பஞ்ச பாண்டவர் ரதம் வளாகத்தில் உள்ள ஒரு கோவிலின் பெயர் தர்மராஜா கோயில். இந்தச் செய்திகள் அனைத்தும் ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல்களில் காணக் கிடைக்கின்றன.
பொதுவாகத் தர்மராஜா கோயில்களில் புத்தர் ஞானோதயம் பெற்ற, பௌத்தர்கள் போற்றக்கூடிய போதி எனப்படும் அரச மரங்கள் இருப்பதைப் பார்க்கலாம். தமிழகத்தில் அரச மரத்துக்கு இன்றைக்கும் பெரும் மதிப்பு கொடுக்கப்படுவதற்கான காரணத்தை, இந்த அம்சத்திலிருந்து தேடிக் கண்டடையலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT