Published : 02 Oct 2014 01:51 PM
Last Updated : 02 Oct 2014 01:51 PM
விஜயதசமி - பாபா சமாதி நாள்
ஷீர்டி சாயிபாபா, 1918-ம் ஆண்டு விஜயதசமி நாளில் சித்தி அடைந்தார்.சாயிபாபா பக்தர்கள் இந்த நாளை பாபாவின் மகாசமாதி நாளாக வழிபடுகின்றனர். நவராத்திரி - விஜயதசமி நாளில் சாயிபாபா ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அன்றைய தினம் பாபா ஆலயங்களில் விஷேச பூஜைகளும், அபிஷேக ஆரத்திகளும் நடைபெறும்.
சாயியே வருக
இந்திய ஆன்மிகத்தில் ஷீர்டி சாயிபாபா ஒரு புரிந்து கொள்ள முடியாத புதிர். அவர் ஒரு முஸ்லிம் என்றும் இந்து என்றும் இன்றும் வாத பிரதிவாதங்கள் தொடர்கின்றன. அவரது பிறப்பு பற்றி யாரும் அறிய முடியாததாகவே உள்ளது. சாந்த்பாய் பாட்டீல் என்பவர் வீட்டுத் திருமண கோஷ்டியுடன் அவர் பதினாறு வயது இளைஞனாக ஷீர்டிக்குள் வந்த போது கண்டோபா கோவில் பூசாரியும் பின்னாட்களில் பாபாவின் மிக நெருங்கிய அடியவராகவும் ஆன பகத் மஹல்சாபதியால் ‘ஆவோ சாயி’ என்று வரவேற்கப்பட்டார். ‘சாயியே வருக’ என்பதே அதன் அர்த்தம்.
இங்கிருந்துதான் பாபாவின் அதிகாரப்பூர்வ ஷீர்டி வரலாறு தொடங்குகிறது. தொலைதூரத்தில் இருந்து வந்து, தரிசனம் செய்து ஆசி பெற்றுச் சென்றனர்.பாலகங்காதர திலகரின் உதவியாளர் கிருஷ்ண கபர்டே போன்றவர்கள் குடும்பத்தோடு மாதக் கணக்கில் தங்கியிருந்து பாபாவைத் தரிசனம் செய்ததுண்டு.
பாபா கொடுத்த முன்குறிப்பு
1916-ம் ஆண்டு பாபா தம் ஆயுளை முடித்துக் கொள்வது தொடர்பான ஒரு குறிப்பையும் கொடுத்திருந்தார். ஆனால், அதை அப்போது யாரும் புரிந்து கொள்ளவில்லை.
அன்று விஜயதசமி தினம். ஷீர்டியில் சீமொல்லங்கன் எனப்படும் எல்லை தாண்டும் நிகழ்ச்சி அன்றைய தினத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த ஆண்டும் அதுபோல நடந்தது. அதன் இறுதிக்கட்டமாக கிராம எல்லையிலிருந்து கிராமத்திற்குள் செல்வார்கள். அப்படி நிகழ்ச்சி முடிந்து கிராமத்திற்குள் திரும்பும்போது, பாபா திடீரென கோபாவேசம் அடைந்தார்.
அவருக்குத் திடீரென வந்த கோபத்தில் தாம் அணிந்திருந்த கஃப்னி, லங்கோடு மற்றும் தலையில் கட்டியிருந்த துணியையும் கழற்றி வீசி எறிந்தார். அப்படி வீசி எறிந்ததோடு நிற்காமல் அவற்றைக் கிழத்துத் துண்டு துண்டாக்கி அப்படியே அங்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பிலும் போட்டார். அவர் நெருப்பில் துணிகளைப் போட்டதும் அது பிரகாசமாய்க் கொழுந்துவிட்டு எரிந்தது.
அப்போது பாபாவின் இரண்டு கண்களும் அதுவரையில் இல்லாத வகையில் சிவந்து காணப்பட்டன. பாபா அங்கிருந்தவர்களிடம், “ஓ... ஜனங்களே! இப்போது என்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் இந்துவா, முஸ்லிமா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என்று உரத்த குரலில் கத்தினார்.
பாபாவின் இந்த ஆவேசத்தைப் பார்த்த ஜனங்கள் பெரிதும் பயந்து போய் விட்டனர். அவர் அருகே செல்ல யாருக்கும் தைரியம் இல்லை. பாபாவின் கோபத்தைக் கட்டுப்படுத்தி அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று கவலைப்பட்டனர்.
இந்நிலையில் பாபாவின் அடியவரான பாகோஜி ஷிண்டே மட்டும் கொஞ்சம் தைரியத்துடன் பாபா அருகே சென்றார். இந்த அடியவருக்குத் தொழுநோய் இருந்தது. அதை பாபா தம் கரங்களால் சுத்தம் செய்து குணமாக்கியதால், அவர் பாபாவே கதி என்று அவர் பாதங்களிலேயே விழுந்து கிடந்தார். அதனால் அவரால் பாபாவை எளிதாக அணுக முடிந்தது.
“என்ன பாபா இதெல்லாம். இன்று சீமொல்லங்கன் நாள். நீங்கள் இப்படி இருக்கலாமா?’’ என்று பாகோஜி ஷிண்டே, பாபாவிடம் தைரியமாய்க் கேட்க பாபா மேலும் கோபம் அடைந் தவராய்த் தமது கைகளில் எப்போதும் வைத்திருக்கும் சட்காவை எடுத்துத் தரையில் வேக வேகமாய் அடித்தபடியே ‘‘இன்று எனக்குச் சீமொல்லங்கன்” என்றார். அதாவது அவர் தம் ஆயுளைப் பிரிந்து போகக்கூடிய நாள் என்கிற அர்த்தத்தில் பாபா சூட்சுமமாக அப்படிக் கூறினார். 1918-ம் ஆண்டு விஜயதசமி அன்று அவர் உடலை விட்டுப் பிரியப்போவதை 1916-ம் ஆண்டு விஜயதசமி அன்றே பாபா குறிப்பால் உணர்த்தினார்.
பாபாவின் இறுதி நிமிடங்கள்
பாபாவின் இறுதிநாட்களில் ஒன்றில் அவர் அமர்ந்திருந்த மசூதியில் அவர் கை வைத்து அமர ஏதுவாக ஒரு செங்கல் இருந்தது. பாபா பல நேரங்களில் அதன் மீது சாய்ந்து கொண்டுதான் உட்காருவார்; எழுவார். பல ஆண்டுகளாக பாபா இவ்விதமாக அந்தச் செங்கல்லைப் பயன்படுத்தி வந்தார். மசூதியில் ஒருநாள் பாபா இல்லாத சமயத்தில் அங்கு தரையைப் பெருக்கிக் கொண்டிருந்த ஒரு பையன் செங்கல்லை எடுத்து விட்டு அந்த இடத்தையும் சுத்தப்படுத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக அந்தச் செங்கல் உடைந்து விட்டது.
அப்பையனின் கைதவறி உடைந்ததால் செங்கல் இரண்டு பாகங்களாகி விட்டது. பிறகு மசூதிக்கு வந்து உடைந்த செங்கல்லைப் பார்த்த மாத்திரத்தில் பாபாவின் மனமும் உடைந்துவிட்டது. மிகவும் கவலைபடர்ந்த முகத்துடன் பாபா உடைந்த செங்கல்லைப் பார்த்தார். பிறகு அவரே அதைக் குனிந்து எடுத்து. ‘‘உடைந்தது செங்கல் அல்ல; எமது விதியே துண்டுகளாக உடைந்துவிட்டது. அது எனது ஆயுட்கால நண்பன். அதன் ஸ்பரிசத்துடன்தான் நான் எப்போதும் ஆன்ம தியானம் செய்தேன்.
அது என் உயிரைப் போன்று அவ்வளவு பிரியமானது. இன்று அது என்னை விட்டு நீங்கிவிட்டது” என்று கூறி வருத்தப்பட்டார் பாபா. லெக்ஷ்மிபாய் ஷிந்தே பாபாவுடன் இருந்து உணவு பரிமாறி சேவை செய்தவர். அதை நினைவுபடுத்திக்கொண்ட பாபா அவரை அருகே அழைத்து முதுலில் ஐந்து நாணயத் தையும், பிறகு மீண்டும் நான்கு நாணயத்தையும் அளித்து ஆசிர்வதித்தார்.
அதன் பிறகு பாபா, மசூதி தமக்கு சௌகரியமாக இல்லை என்றும், பூட்டி கட்டி வைத்த தகடிவாடா (இருப்பிடம்) விற்கு தம்மை அழைத்துச் சென்றால் சரியாகிவிடும் என்றும் கூறிக் கொண்டே பய்யாஜி கோதேயின் மேனியில் சாய்ந்து உயிரை விட்டார்.
பாபாவின் மூச்சு நின்று போனதை அறிந்த பாகோஜி அருகில் இருந்த நானாசாஹேப் நிமோன்கரிடம் அதுபற்றிப் பதற்றத்துடன் கூறினார். உடனே நிமோன்கர் சிறிது நீர் எடுத்து வந்து அதை பாபாவின் வாயில் ஊற்றினார். ஆனால், அந்நீர் உடனே வெளியே வந்துவிட்டது.
ஷீர்டி மக்களுக்குள் கருத்துவேறுபாடு
பாபாவின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக ஷீர்டி மக்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு சிலர் அவர் உடலைத் திறந்தவெளியில் அடக்கம் செய்து சமாதி கட்ட வேண்டும் என்றும், பெரும்பாலானோர் கிருஷ்ணர் சந்நிதி அமைய ஒதுக்கப்பட்ட வாதாவிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர். இப்பிரச்சினை சுமார் 36 மணி நேரம் நீடித்தது. இதனால் கிராம மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பும் நடந்தது.
அதன் பிறகு பாபாவின் உடல் ஊர்வலமாக அங்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாலா சாஹேப் பாடே, உபாசினி ஆகியோரால் பாபாவிற்கான இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
பாபா அடக்கம் செய்யப்பட்ட அந்த இடம் ஷீர்டியில் இன்று சமாதி மந்திராக உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்கள் மட்டுமன்றி அயல்நாடுகளிலும் அதிக அளவில் உருவாகியுள்ளன.சென்னை மேற்கு மாம்பலம் பாபா தரிசன மையத்தில் இது வரையிலும் வேறெங்கும் இல்லாத அதிசயமாகப் பச்சை வண்ண மார்பிளில் பாபா சிலை உள்ளது. இங்கும் தமிழ்நாட்டு ஷீர்டி எனப்படும் மயிலாப்பூர் பாபா ஆலயம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிற பாபா ஆலயங்களிலும் நவராத்திரியும் குறிப்பாக, விஜயதசமி தினம் சாயிபாபா மகா சமாதி -புண்யதிதி தினமாக வழிபடப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT