Published : 04 Aug 2016 10:34 AM
Last Updated : 04 Aug 2016 10:34 AM
கேட்டவர்களுக்கு எல்லாம் கேட்ட வரம் அளிக்கும் வரப்பிரசாதியாய் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் சிறுவாச்சூரில் குடிகொண்டிருக்கும் அன்னை மதுரகாளி என்பது நம்பிக்கை. காளி என்றதும் கோபக் கனலாக இருப்பாளோ என்ற நினைப்பு வேண்டாம். பெயருக்கு ஏற்ற மாதிரி முகத்தில் சாந்தமும், கருணையும் ததும்ப வீற்றிருக்கிறாள் இந்த மாகாளி .
சிலப்பதிகார நாயகி கண்ணகிதான் இங்கு மதுர காளியம்மனாக வீற்றிருக்கிறாள் என்பது செவிவழிச் செய்தி. பிரம்மேந்திராள் சக்கரத்தை இந்தத் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது பக்தர்களின் பெரும் நம்பிக்கை.
சிலிர்க்கவைக்கும் உடுக்கை
ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் வடக்கு நோக்கிய மதுர காளியம்மன் திருக்கோயிலில் காலை 11 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் பகல் 1.30 மணியளவில் தங்கக் கவச அலங்காரத்துடன் மகா தீபாராதனை செய்யப்பட்டு நிறைவடைகிறது. மகா தீபாராதனைக்கு முன் உடுக்கை அடிப்பவர்கள் உடுக்கை ஒலிக்க அன்னையை உரத்த குரலிட்டு அழைக்கின்றனர். உடுக்கை சத்தத்தைக் கேட்கும்போது பக்தர்களின் உடலும் உள்ளமும் சிலிர்த்துவிடும். அப்படி அழைக்கும்போது அன்னை மலையை விட்டுக் கோயிலுக்குள் பிரவேசிப்பதாக நம்பப்படுகிறது.
அகிலம் காத்த அன்னை
ஆதியிலே சிறுவாச்சூரில் செல்லியம்மனே வழிபடும் தெய்வமாக விளங்கினாள். அனைவருக்கும் தாயான அவளை நோக்கித் தவம் செய்த ஒரு மந்திரவாதி பல அரிய சக்திகளைப் பெற்றான். தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பதுபோல அன்னை அளித்த மந்திர சக்தியால் அன்னையையே கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்கு உட்படுத்தினான் அவன். மந்திரவாதியின் கொடுமையால் அவதிப்படும் தன் மக்களைக் காக்க ஒரு வெள்ளிக்கிழமை இரவு இத்தலம் வந்து தங்க செல்லியம்மனிடம் அனுமதி கேட்கிறாள் மதுர காளியம்மன். மந்திரவாதிக்குப் பயந்து இடம்கொடுக்க மறுக்க, அனைத்தும் உணர்ந்த அன்னை, அன்றிரவு அங்கேயே தங்கினாளாம்.
அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான். அகிலத்தைக் காக்க பல அசுரர்களையே வதம் செய்த அகிலாண்ட நாயகியை அற்ப மந்திரவாதியால் என்ன செய்துவிட முடியும்? அவனது செருக்கையழித்து, வதம் செய்தாள் அன்னை மதுர காளியம்மன்.
செல்லியம்மனின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்திலேயே கோயில் கொண்டாள் அன்னை. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோயில் கொண்டாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே இப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகிறது. பூஜையின்போது தீபாராதனை முதலில் மலை நோக்கிக் காட்டப்பட்டு, பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டப்படுகிறது.
மதுரை காளியம்மன் என்ற திருநாமமே மருவி மதுரகாளியம்மனாக மாறியது என்றும் சினங்கொண்டு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு அருளுவதால் மதுர காளியம்மன் (மதுரம் - இனிமை) என்ற திருநாமம் கொண்டாள் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன.
கோயிலுக்குள்ளேயே மாவிளக்கு
சிறுவாச்சூருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னிதி திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலேயே தங்குவதாக நம்பிக்கை. காலை ஆறு மணிக்கு சன்னிதி திறக்கப்படுகிறது. இரவு எட்டு மணிவரை அன்னையைத் தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக் காப்பு அலங்காரமும் செய்யப்படுகிறது. பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும், நவராத்திரி நாட்களிலும் மதுரகாளியம்மனைத் தரிசிக்கலாம்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் செல்லியம்மனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். பக்தர்கள் அங்க பிரதட்சிணம் செய்வதுண்டு. அம்மனுக்குக் கோயில் வளாகத்துக்குள்ளேயே அரிசியை ஊறவைத்து மாவு தயாரித்து, நெய் தீபமிடுகின்றனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு அடுத்து சுமார் 6 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோயில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT