Published : 16 Oct 2014 12:59 PM
Last Updated : 16 Oct 2014 12:59 PM
ஒரு கிராமத்தில் வயோதிகர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் மிகவும் ஏழை. ஆனால் அவரிடம் அழகிய வெள்ளைக் குதிரை ஒன்று இருந்தது. அந்த வெள்ளைக் குதிரையால் அரசர்கள்கூட அந்த வயோதிகர் மீது பொறாமைப்படும் நிலை இருந்தது. அத்தனை எழில் கொண்ட குதிரை அது. பெரும் பணக்காரர்கள் அந்தக் குதிரைக்காக பொன், பொருள்களைக் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தனர்.
“இது என்னைப் பொறுத்தவரை ஒரு பிராணி அல்ல. அவன் என் நண்பன். உடைமை அல்ல. ஒரு நண்பனை நான் எப்படி விற்கமுடியும்” என்று மறுத்துவிடுவார். அந்த வயோதிகரோ மிகவும் ஏழை. அவர் தன் குதிரையை விற்பதற்கு எல்லாக் காரணங்களும் இருந்தன. ஆனால் அவர் விற்கவேயில்லை.
ஒரு நாள் அந்தக் குதிரை லாயத்தில் இருந்து காணாமல் போனது. ஒட்டுமொத்த கிராமத்தினரும் முதியவரிடம் வந்தனர். “ நீ ஒரு முட்டாள் கிழவன். இந்தக் குதிரை என்றாவது ஒருநாள் காணாமல் போகும் என்று எங்களுக்குத் தெரியும்.
இவ்வளவு அரிய குதிரையை உன்னால் எப்படிப் பாதுகாக்கமுடியும்? அதை நல்ல விலைக்கு விற்றிருக்கலாம்.” என்றனர். குதிரை தொலைந்து போனது கிழவருக்கு வரும் துரதிர்ஷ்டத்தின் அறிகுறி என்றும் அவர்கள் கூறினார்கள்.
“குதிரை தொலைந்துவிட்டது மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் உங்களது முடிவுகளே. நீங்கள் உடனடியாக எந்தத் தீர்ப்பையும் சொல்ல வேண்டியதில்லை” என்று கிழவர் மறுத்தார்.
கிராமத்து மக்களோ, “ எங்களை முட்டாளாக்க வேண்டாம். உங்களிடம் இருந்த அரிய உடைமை ஒன்று தொலைந்து போய்விட்டது. அது துரதிர்ஷ்டம் தானே” என்று நியாயம் கற்பித்தனர்.
கிழவர் உறுதியாக இருந்தார். “லாயத்திலிருந்து குதிரை தொலைந்துபோய்விட்டது. லாயம் தற்போது காலியாக உள்ளது. மற்றது எதைப் பற்றியும் எனக்குத் தெரியாது. அது அதிர்ஷ்டமாக இருக்கலாம். துரதிர்ஷ்டமாக இருக்கலாம். அதை வைத்து முழுமையான முடிவுக்கு வந்துவிட முடியாது” என்றார்.
கிராமத்தினர் சிரித்தனர். கிழவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக எண்ணினார்கள்.
பதினைந்து நாட்களுக்குப் பிறகு வெள்ளைக் குதிரை திரும்ப வந்தது. அது திருடப்படவில்லை. அது காட்டுக்கு ஓடிப்போய் விட்டது. வரும்போது ஒரு டஜன் குதிரைகளை அழைத்துக் கொண்டு வந்தது.
மறுபடியும் கிராமத்தினர் கிழவர் வீட்டின் முன்னால் கூடினார்கள். “ கிழவரே, நீர் சொன்னது சரியாகிவிட்டது. குதிரை காணாமல் போனது நல்லதற்குதான். உங்களுக்கு ஆசீர்வாதம்தான். நாங்கள் சொன்னதுதான் தவறு” என்று மன்னிப்பு கோரினார்கள்.
கிழவர் மீண்டும் அவர்களை மறுத்தார். “ மறுபடியும் நீங்கள் அவசரமாகப் பேசுகிறீர்கள். குதிரை திரும்ப வந்துவிட்டது. 12 குதிரைகளோடு திரும்பவும் வந்துவிட்டது. இதுமட்டுமே தற்போதைக்கு மெய்.” என்றார்.
அந்தச் சமயத்தில் கிராமத்தினருக்குப் பதில் அளிக்க எதுவும் இல்லை. அவர்கள் அமைதியாக இருந்தனர். வெள்ளைக் குதிரை தன்னுடன் அழைத்துவந்த குதிரைகள் மதிப்புவாய்ந்தவை. சிறிய அளவு பயிற்சி அளித்தால் போதும், நல்ல விலைக்கு விற்கலாம் என்று அவர்கள் அறிந்திருந்தனர்.
முதியவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் அந்தக் காட்டுக் குதிரைகளுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினான். ஒரு குதிரையின் மீது ஏறி சவாரிக்கு முயலும்போது, அவனது கால்கள் முறிந்துவிட்டன. மறுபடியும் கிராமத்தினர் கூடினார்கள். திரும்பவும் அவர்கள் அவசரப்பட்டனர். “நீங்கள் சொன்னது சரியே. 12 குதிரைகள் வந்தது நல்லதல்ல. உங்கள் பையனுக்கு அவற்றால் கால்கள் முறிந்துவிட்டது.” என்றனர்.
மறுபடியும் கிழவர் கூறினார். “எனது மகனுக்குக் கால்கள் முறிந்துள்ளன. அது நல்லதல்ல என்று யார் முடிவுசெய்வது.” என்றார்.
இது நடந்து சில நாட்களில் இரு ராஜ்ஜியங்களுக்கு இடையே போர் தொடங்கியது. கிராமத்திலிருந்த இளைஞர்கள் எல்லாரும் வலுக்கட்டாயமாகப் போருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் முதியவரின் மகனுக்கோ கால்கள் முறிந்திருந்ததால் சண்டைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.
கிராமத்தினர் அழுது புலம்பியபடி மீண்டும் கிழவரிடம் வந்தனர். “ சண்டைக்குப் போன எங்கள் புதல்வர்கள் திரும்பி வரும் வாய்ப்பே இல்லை. உங்கள் மகனுக்குக் கால்கள் முறிந்ததால் தப்பித்துவிட்டான். நீங்கள் சொன்னது சரியே. இந்த முறையும் உங்களுக்கு அதிர்ஷ்டமே நிகழ்ந்துள்ளது” என்றனர்.
“உங்கள் மகன்கள் வலுக்கட்டாயமாகப் போருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனது மகன் போருக்குப் போகவில்லை. அது மட்டுமே உண்மை. அது நல்லதற்கா, கெட்டதற்கா என்று கடவுள் மட்டுமே சொல்லமுடியும்” என்றார்.
துயரம் சூழ்ந்த இருண்ட பள்ளத்தாக்கில் மனிதர்கள் இருக்கிறார்கள். தங்கள் இருண்ட பள்ளத்தாக்கில் இருந்து புத்தர் மீது கூட தீர்ப்பளித்து விடுகிறார்கள். அவர்களின் தீர்ப்புக்குப் புத்தர் கூட தப்புவதில்லை. கிறிஸ்துவுக்குத் தீர்ப்பளித்து அவரைச் சிலுவையிலும் அறைந்து விட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT