Published : 30 Oct 2014 11:26 AM
Last Updated : 30 Oct 2014 11:26 AM
பெயர்ச்சி ஆவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே சனீஸ்வரன் பலன்களை அளிக்கத் தொடங்கி விடுவார். அதிலும் நற்பலன்களை அளிப்பதில் மிக வேகமாகச் செயல்படுபவர். கர்மவினைக்கு ஏற்ப அமையும் தீயபலன்களை மந்தன் என்ற தன் பெயருக்கு ஏற்ப மெதுவாகவே அளிப்பார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நிகழவிருக்கும் சனிப் பெயர்ச்சி சுப நிகழ்ச்சிகளையே அதிகம் விளைவிக்கும் வகையில் அமைய உள்ளது.
ஆயினும், சனி பகவானைப் போற்றி வந்தால், கர்ம வினையைத் தாங்கும் மன சக்தி அதிகம் கிடைக்கும். அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள கோயில்களில் சனி பகவான் சந்நிதியில் அர்ச்சனை செய்து, எள் தீபம் இட்டு பிரார்த்தித்துக் கொண்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
காரைக்காலுக்கு அருகில் உள்ளது சனீஸ்வர தலமான திருநள்ளாறு. இங்குள்ள சனி பகவானைத் தரிசித்து, தோஷ நிவர்த்தி செய்துகொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
திருக்கோயில்
மூலவராக தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசன் ஆகிய பெயர்களில் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறார். அம்பாளின் திருநாமங்கள் பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள். தலவிருட்சம் தர்ப்பையாக உள்ள இந்தத் திருக்கோயிலைச் சுற்றியுள்ள தீர்த்தங்கள் பல. அவை நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம், அன்ன தீர்த்தம், கங்கா தீர்த்தம், அஷ்டதிக் பாலகர்கள் தீர்த்தம் ஆகியன. பொதுவாக நள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வதையே பக்தர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். திருக்கோயிலுக்கு அருகில் உள்ள வாணி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் கல்வி, கேள்விகளில் சிறப்புற்று விளங்கலாம்.
மழலைப்பேறு
திருமாலுக்கு மன்மதன் என்ற பிள்ளைப்பேற்றை அளித்தவர்கள் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் என்கிறது தல புராணம். அதனால் மழலைப்பேறு பெற இத்திருத்தலத்துக்குப் பக்தர்கள் வருகை தருகிறார்கள். தியாகவிடங்கருக்கு இங்கு தனிச் சந்நிதி உண்டு. மேலும் இத்திருக்கோயிலில் உள்ள மரகத லிங்கத்துக்குப் பாலும் பழமும் நிவேதனம் செய்கிறார்கள். இந்தப் பிரசாதத்தை உண்டால் பிள்ளைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.
சனிப் பெருமை
திருநள்ளாறு திருக்கோயிலில் மட்டுமல்ல அனைத்துக் கோயில்களிலும் முதலில் ராஜகோபுரத்தை வணங்க வேண்டும். தரிசனம் முடிந்த பின் திருக்கோயிலை விட்டு வெளியே வரும்போதும் ராஜ கோபுரத்தை வணங்க வேண்டும். ஏனெனில் கோபுர தரிசனம் கோடி புண்ணியம். அதிலும் திருநள்ளாறில் இவற்றை முறையாகச் செய்ய வேண்டும். இத்திருக்கோயிலுக்கு உள்ளே சென்றால், சனீஸ்வரன் சந்நிதி சிறியதாக அமைந்துள்ளது. கர்மவினைப் பயனைக் குறைவுபடாமல் நிறைவேற்றுபவர் என்பதால் சனி பகவானுக்கு ஈஸ்வர பட்டம் அளித்தவர் ஈசன். சனீஸ்வரனை வணங்கினால் சனி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
முறையான வழிபாடு
நள தீர்த்தத்தில் உடுத்திய உடையுடன் நீராட வேண்டும். அப்போது மகாலட்சுமி வாசம் செய்யும் நல்லெண்ணெய் தேய்த்து, மகாவிஷ்ணு வாசம் செய்யும் சீயாக்காய்ப் பொடி தேய்த்து நீராட வேண்டும். குளங்கள் பொது இடம். அதிலும் திருக்கோயில் குளம் புனிதமானது. பல் தேய்த்தல், எச்சில் துப்புதல் ஆகியவற்றைத் திருக்குள நீரில் செய்யக் கூடாது.
இவை போன்ற காலைக் கடமைகளை வெளியிலேயே முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால் புண்ணியம் தேடப் போய் பாவம் தேடிக் கொண்டதாக ஆகிவிடும். இவ்வாறு புனித நீரைக் களங்கப்படுத்தாமல் நீராடிய பின், காய்ந்த உடை உடுத்தி, ஈரத் துணியை குளக்கரையில் ஓரமாகப் போட்டுவிட வேண்டும்.
குளக்கரையில் நள விநாயகருக்குச் சிதறுகாய் உடைக்க வேண்டும். அப்போது பரிகாரம் நல்ல முறையில் நிறைவேற பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று மூலவரையும், அம்பாளையும் தரிசிக்க வேண்டும். தியாகவிடங்கர், மரகத லிங்கம் ஆகியவற்றை வணங்கிய பின் சனி பகவானை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும். எள் தீபம் ஏற்ற வேண்டும். மனமாற செய்யப்படும் பிரார்த்தனையே அனைத்து விதமான தோஷங்களையும் தீர்க்கும். கோயிலில் பிற பக்தர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு சண்டை போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கடவுளை வேண்டுவோம், காரியம் யாவினும் வெற்றி பெறுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT