Published : 04 May 2017 10:27 AM
Last Updated : 04 May 2017 10:27 AM
மன்னார்குடி என்றாலே கலாச்சாரச் சிறப்பு மிக்க ஊர் என்பது பலருக்கும் தெரியும். தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட சில காலங்களிலேயே கட்டப்பட்ட மன்னார்குடி பெரிய கோயில் இங்குள்ள கலாச்சாரப் பெருமைகளில் ஒன்று. இந்து மதத்துக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய ஏனைய பெருமதங்களும் மன்னார்குடியில் வலுவாகக் காலூன்றியிருக்கின்றன. பழமையான ஜைனக் கோயிலும் இங்கே இருக்கிறது. ஒருவகையில் இந்தியாவின் பன்மைத்துவத்தின் சிறு மாதிரி மன்னார்குடி.
எனினும் மன்னார்குடியின் வரலாறு, கலாச்சாரம் எல்லாம் பாமணி ஆற்றுக்குத் தென்திசையில் உள்ள பகுதியையே பிரதானப்படுத்தியிருக்கின்றன. ஊரின் எல்லையில் பாமணி ஆற்றின் வடகரையைத் தாண்டியும் செழிப்பான கலாச்சாரம் இருப்பது வரலாற்றில் முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை. அப்படிப்பட்ட செழிப்பான கலாச்சாரத்தின் அடையாளம்தான் மன்னார்குடியின் மாதாக்கோவில் தெரு என்றழைக்கப்படும் கர்த்தநாதபுரத்தின் புனித சூசையப்பர் தேவாலயம்.
கிறிஸ்தவம் இங்கே வந்த 350-ம் ஆண்டு நிறைவையும் தேவாலயம் கட்டப்பட்ட 175-ம் ஆண்டு நிறைவையும் தஞ்சை மறைமாவட்டத்தைச் சார்ந்த இந்தப் பங்கு சமீபத்தில் கொண்டாடியிருக்கிறது. இந்தச் சிறப்புகளுடன் கூடுதலாக இன்னொரு சிறப்பும் இந்தப் பங்குக்கு இருக்கிறது. இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழல் என்று அவரது வாழ்க்கையின் பாடுகளைச் சொல்லும் ‘பாஸ்கா’ நாடகம் இங்கு 151 ஆண்டுகளாக நடிக்கப்பட்டுவருகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த நாடகத்தின் நடிகர்கள் பெரும்பாலானோர் கர்த்தநாதபுரத்தின் தெருவாசிகளே.
350 ஆண்டுகள் தொன்மை
இந்தப் பங்கு, தேவாலயம், பாஸ்கா ஆகியவற்றின் வரலாறு குறித்து பங்குத்தந்தை எம்.எல். சார்லஸிடமும் உதவித்தந்தை விட்டல் பிரசாதிடமும் கேட்டோம்.
“2011-ல் நான் மன்னார்குடி பங்குக்கு வந்தபோது இந்தத் தேவாலயத்தின் தொன்மை பற்றிய சில தகவல்களை அறிந்து வியப்புற்றேன். இந்தப் பங்கும் தேவாலயமும் பழமையானவை என்பது தெரிந்தாலும் முறையான வரலாற்றுப் பதிவுகள் அப்போது தென்படவில்லை. ஆகையால், பிரான்ஸ், பெங்களூரு, கொடைக்கானல் ஆகிய இடங்களில் உள்ள ஆவணக் காப்பகங்களில் மேற்கொண்ட தேடல்களின் விளைவாக இந்தப் பங்கின் வரலாறு பற்றிய பல ஆவணங்களும் தகவல்களும் கிடைத்தன.
அவற்றின்படி பார்த்தால் மன்னார்குடிக்கு கிறிஸ்தவம் வந்து 350 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்றன. ஆன்ரூ ப்ரையர் என்ற பிரெஞ்சுப் பாதிரியார்தான் கிறிஸ்தவத்தை மன்னார்குடிக்குக் கொண்டுவந்தவர். அவர் ஏற்றிவைத்த புனித மெழுகுவர்த்தியை அவருக்குப் பின்வந்த அருளானந்தசாமிகள் முதலானோர் அணையாமல் காப்பாற்றிவந்தனர்.”
“இந்த சூசையப்பர் ஆலயம் கட்டப்பட்ட வரலாறு குறித்தும் தேடுதல்கள் மேற்கொண்டபோது இந்தத் தேவாலயம் கட்டப்பட்டது 175 ஆண்டுகளுக்கு முன்பு என்பது தெரிய வந்தது. ஏற்கெனவே சிறிய அளவில் தந்தை லெகூஸ்த்தால் கட்டப்பட்டிருந்த ஆலயத்தை எடுத்து விஸ்தரித்துக் கட்டியவர் தந்தை கிளாடியஸ் பெடின்.
இவரை இங்குள்ள மக்கள் கர்த்தநாதர் என்று அழைத்தார்கள். ஆகவே, இந்தத் தெருவுக்கு கர்த்தநாதபுரம் என்ற பெயர் அமைந்துவிட்டது. இவர்களெல்லாம்தான் மன்னார்குடி பகுதியில் கிறிஸ்தவத்தைத் தழைத்தோங்கச் செய்து இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை மக்களிடைய பரவச் செய்தவர்கள்” என்றார் பங்குத்தந்தை எம்.எல். சார்லஸ்.
பிரெஞ்சு மொழியில் நடத்தப்பட்ட பாஸ்கா
“பாஸ்கா நாடகம் சுமார் 150 ஆண்டுகளாக இங்கு நடிக்கப்பட்டுவருகிறது. இங்கு பணியாற்றியவர்களில் பலரும் போர்த்துகீசிய, பிரெஞ்சுப் பாதிரியார்கள் என்பதால் ஆரம்பத்தில் பிரெஞ்சு மொழியில்தான் பாஸ்கா நடத்தப்பட்டது. பாதிரியார்கள் இடையிடையே மக்களுக்கு விளக்கியும் சொல்லியிருக்கிறார்கள். அப்போது மக்களிடையே படிப்பறிவு மிகவும் குறைவு என்பதால் இயேசுவின் வாழ்க்கையையும் அவரின் நற்செய்தியையும் மக்களிடையே எடுத்துச் செல்ல முக்கியமான ஊடகமாக பாஸ்கா பயன்பட்டது.
125 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இறைப்பணியாற்றிய ஜெயசீல ராயர் தனது நாட்குறிப்பேட்டின் இறுதிப் பகுதிகளில் பாஸ்காவின் வசனங்களை எழுதிவைத்திருக்கிறார். அந்த ஆவணமும் நமக்குக் கிடைத்திருக்கிறது. பிற்காலத்தில் தமிழில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போது மணிப்பிரவாளத் தமிழில் வசனங்கள் இருக்கும். திராவிட இயக்கங்களின் எழுச்சியை அடுத்து பாஸ்காவின் மொழி தற்போதைய தமிழுக்கு மாறியது” என்றார் உதவித் தந்தை விட்டல் பிரசாத்.
தற்போதைய பாஸ்காவின் நாடக வடிவம் பெரும்பாலும் ஆரம்ப கால பிரெஞ்சு நாடகப் பிரதியை ஒட்டியே அமைந்திருக்கிறது. காலத்துக்கேற்ப மொழியில் பல மாறுதல்கள் செய்திருக்கிறார்கள். 1970-களில் செம்மைப்படுத்தப்பட்ட நாடகக் கதை, வசனங்கள் அடங்கிய பிரதியே தற்போது பயன்படுத்தப்பட்டுவருகிறது என்கிறார் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாஸ்கா நாடகத்தில் ஒருங்கிணைப்பாளராகவும் பல்வேறு பணிகளைச் செய்பவராகவும் இருக்கும் கர்த்தநாதபுரத்தைச் சேர்ந்த சகாயம்.
மன்னார்குடிக்கு கிறிஸ்தவம் வந்தது
இந்த ஆண்டின் பாஸ்காவை முழுமையாகப் பார்த்து நாம் எழுத வந்ததையே இயேசுவின் திருவருளாக அங்குள்ளவர்கள் கருதுகிறார்கள். மன்னார்குடிக்கு கிறிஸ்தவம் வந்து 350 ஆண்டுகள், தேவாலயம் கட்டப்பட்டு 175 ஆண்டுகள், பாஸ்கா நாடகத்தின் 151-ம் ஆண்டு என்ற சிறப்பு மிக்க ஆண்டில் இப்படி நடப்பதை அவர்கள் அதிசய நிகழ்வாகவே கருதுகிறார்கள்.
பாஸ்கா நாடகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். சில பாத்திரங்களை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் நடிக்கிறார்கள். குழந்தை இயேசுவாக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு குழந்தை நடிக்கிறது. தற்போதைய பாஸ்காவின்போது, பாஸ்காவைப் பார்க்க வந்த ஒரு இளம் தாயின் மடியில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு ஒருசில நிமிடங்களுக்குக் குழந்தை இயேசுவாக நடிக்கவைத்தார்கள். தனக்கே தெரியாமல் இயேசுவாக நடித்துவிட்டு அந்தக் குழந்தை மறுபடியும் தாயின் மடியில் உறங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தது மிகவும் நெகிழ்ச்சியான காட்சி.
அடுத்து, சிறுவர் இயேசுவாக ஒரு சிறுமி நடித்தாள். இருபதுகளையொட்டிய இயேசுவாக அந்தத் தெருவைச் சேர்ந்த பாலு என்றழைக்கப்படும் சூசைராஜ் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடிக்கிறார். இறுதிக் கட்ட இயேசுவாகக் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பவர் ஜே. அந்தோணிசாமி. இருவருமே பாஸ்காவுக்கான ஒத்திகைகளில் ஈடுபட ஆரம்பிக்கும்போதே தங்களுக்குள் இயேசு முழுக்க வந்து நிறைவதை ஆத்மார்த்தமாகத் தெரிவித்தார்கள். அந்தப் பங்கைச் சேர்ந்த மக்களும் இயேசுவாக நடிப்பவர்களை பாஸ்காவை ஒட்டிய நாட்களில் இயேசுவாகவே கருதி பயபக்தியுடன் அணுகுவார்கள்.
சாத்தானும் யூதாஸும்
சாத்தானாகவும் யூதாஸாகவும் இரு வேடங்கள் ஏற்று நடித்துவந்த அருளானந்த் என்பவர் உடல்நிலை காரணமாக இந்த ஆண்டு விலகிக்கொள்ள, அந்தப் பாத்திரங்களில் அல்ஃபோன்ஸ் என்ற இளைஞர் ஏற்று நடித்தார். நாடகம் தொடங்குவதற்கு முன்பு இருவருமே கலந்துரையாடியது நெகிழ்ச்சியைத் தந்தது. “இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் பாத்திரம் என்பதால் வீட்டில் எல்லோருமே எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், இயேசுவைச் சிலுவை நோக்கித் தள்ளியது யூதாஸின் திட்டம் அல்ல. அதுவும் இறைவனின் திட்டம்தானே. ஆகவே, யூதாஸ் கதாபாத்திரத்தை மிகவும் மனநிறைவோடே ஏற்றுக்கொண்டேன்” என்கிறார் அல்ஃபோன்ஸ்.
இரவு பதினோரு மணிக்கு ஆரம்பித்த நாடகம் விடியற்காலை ஐந்து மணிக்கு முடிவடைந்தது. மரியாள் கருவுற்ற செய்தியை சூசையப்பருக்கு சம்மனசு அறிவிப்பது, இயேசுவின் பிறப்பு, சிறார் பருவம், ஞானஸ்நானம், சீடர்களைச் சேர்த்துக்கொள்வது, மலைப்பிரசங்கம், உபவாசம், சாத்தானுடனான சந்திப்பு, பரிசேயர்கள், சதுசேயர்கள், சேனாதிபதிகளின் கோபம், மரியாள் மகதலேனாவின் வரவு, யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்தல், இயேசுவுக்குக் கசையடிகள் கொடுத்தல், கல்வாரிப் பயணம், சிலுவையேற்றம், உயிர்த்தெழல் என்று விரிவான வாழ்க்கைப் பாடுகள் பலவற்றையும் ஆறு மணி நேர நாடகத்துக்குள் உயிர்ப்புடன் கொண்டுவந்தார்கள்.
இயேசுவின் வசனங்கள் யாவும் விவிலியத்திலிருந்து அப்படியே கொடுக்கப்பட்டிருந்தது விசேஷ ஈர்ப்பை ஏற்படுத்தியது. விடிய விடிய இயேசுவின் வாழ்க்கைப் பாடுகளைப் பார்த்து முடித்துவிட்டு வீடு நோக்கிப் புறப்பட்ட மக்கள் ஒவ்வொருவர் மனதிலும் ‘எளிய மனத்தோரே, நீங்கள் பேறுபெற்றவர்கள்’ என்ற இயேசுவின் குரல் மீட்சிக்கான பாதையைச் சுட்டிக்காட்டியபடி ஒலித்துக்கொண்டிருந்ததை உணர முடிந்தது.
இங்கு நடைபெறும் பாஸ்காவின் மற்றுமொரு சிறப்பு இங்குள்ள இந்து மத மக்களும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தை விடியவிடியக் காண்பார்கள் என்பது. சில இந்துக் குடும்பங்களில் வெளியூரிலிருந்தெல்லாம் அவர்களது உறவினர்களை வரவழைப்பார்கள். வெளியூரிலிருந்து வரும் உறவினர்களுக்கு உணவிடுவதற்காக அண்டாக்களில் இட்லி மாவு அரைத்துவைத்ததெல்லாம் கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கிறது.
இப்படியாக அனைவருக்குமான செய்தியைச் சொல்லிச் சென்ற இயேசுவின் வாழ்க்கை வரலாற்று நாடகமான ‘பாஸ்கா’ மன்னார்குடி பங்கின் தனித்துவ அடையாளமாகத் திகழ்கிறது. 151 ஆண்டுகள் தொடரும் வரலாறு மேலும் பல நூற்றாண்டுகள் முடிவில்லாமல் தொடரும் என்பது இங்குள்ள இறையன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT