Published : 06 Mar 2014 05:03 PM
Last Updated : 06 Mar 2014 05:03 PM
இந்தப் பூவுலகம் மனிதர்கள் மட்டும் வாழப் படைக்கப்பட்டதன்று. பிராணிகள், விலங்குகள், ஊர்வன, பறப்பன, நீர் வாழ்வன, மரங்கள், கொடிகள், செடிகள், புதர்கள் எல்லா வகை உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்தும் சேர்ந்தும் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டது. நாகரிகம் என்றும் வளர்ச்சி என்றும் இப்போது நாம் கருதிக்கொள்ளும் பல அறிவுலகச் சாதனைகள் நமக்கு வரமா, சாபமா என்று புரியாத வகையில் அவற்றின் தீய விளைவுகளையும் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம். இந்த நிலையில் மனிதனோடு இன்னமும் தொடர்பு அறாத நிலையில் இருக்கும் உயிரினங்க்ளில் பசுவுக்கு முக்கிய இடம் உள்ளது.
கருணை மனம் கொண்டவர்கள், வசதி படைத்தவர்கள் நாய், பூனை போன்றவற்றைக்கூட வீட்டில் வைத்து வளர்க்கிறார்கள். ஆனால் பசு வளர்ப்போர் எண்ணிக்கை அரிதிலும் அரிதாகிவிட்டது. யார் கைவிட்டாலும் கைவிடாவிட்டாலும் இன்னமும் உயிர் வாழும் பசுக்கள் இந்த மனிதர்களைக் கைவிடாமல் காப்பாற்றி வருகின்றன.
பசுக்களை வீட்டில் வைத்து வளர்த்தால் அவற்றுக்கு வேளைக்குத் தீனி போட வேண்டும், தண்ணீர் காட்ட வேண்டும், குளிப்பாட்ட வேண்டும், நோய் ஏற்பட்டால் மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்பதால் மாடு வளர்க்கப் பலர் விரும்புவதில்லை. அத்துடன் மாட்டுக் கொட்டிலைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்பதும் இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம். விவசாயத்துடன் வீட்டு வேலைகளையும் செய்த காலம் மாறிவிட்டது. மாடு வளர்க்கக் கடுமையாக உழைக்க வேண்டும், அதே சமயம் பால் விற்பனையில் கிடைக்கும் தொகை மிகவும் சொற்பம் என்பதாலும் மாடுகளை வைத்துக்கொள்ள கிராமப்புறங்களில்கூட மக்கள் விரும்புவதில்லை.
இது ஒரு புறமிருக்க, பசு மாட்டை தெய்வமாகவே வழிபடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மிகப் பெரிய ஆலயங்களில்கூட காலையில் மூலஸ்தானத்தைத் திறந்ததும் மூலவர், உற்சவர்களுக்கு முன்னால் பசுவையும் கன்றையும் கொண்டு வந்து நிறுத்தி கற்பூர ஆரத்தி காட்டிவிட்டு பிறகே மற்ற வேலைகளைத் தொடங்கும் வழக்கம் தொடருகிறது.
முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் இருப்பதால் பசுவைப் பாதுகாப்பதை அனைவருமே தங்களுடைய கடமையாகக் கொண்டிருந்தனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் கிராமங்களில் எல்லோருமே மாடு வளர்த்தார்கள். திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்களுக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது எதிரில் சுமங்கலிகள், பசுமாடு வந்தாலே சுப சகுனமாகக் கருதி மகிழ்ச்சியுற்றனர்.
கிரகப் பிரவேசங்களின்போது வீட்டின் எஜமானர் முதன் முதலாகத் தன்னுடைய வீட்டில் பசுவும் அதன் கன்றும் நுழைவதையே பெரும் பேறாகக் கருதினார்கள். இன்றளவும் அந்த மரபு தொடருகிறது. பெரிய நகர்ப்புறங்களிலும் அடுக்ககங்களிலும் கூட சிரமப்படுத்தியாவது மாட்டை ஓட்டிவரச் செய்து மாட்டுக்காரர்களுக்கு வேட்டி, டவல், பழம், பூ ஆகியவற்றுடன் தட்சிணையும் சேர்த்து கொடுக்கிறார்கள்.
அன்றாடம் பசுவுக்கு ஒரு கை நிறைய புல்லை அளித்துவிட்டுத்தான் தங்களுடைய வியாபாரத் தலத்துக்குப் போவது என்ற வழக்கம் கொண்டிருந்த வைசியப் பெருமக்களை கோ-முஷ்டிகள் என்றே அழைத்தனர். பின்னர் இது மருவி கோமுட்டி என்றாகிவிட்டது. கோர்க்கர்கள் என்று அழைக்கப்படும் நேபாளிய இந்துக்களும் பசுவைக் காப்பதைத் தங்களுடைய உயிர்க் கடமையாகக் கருதினர். இதற்காகவே இடுப்பில் சிறிய கத்தியை வைத்திருப்பார்கள். “கோ-ரக்ஷஸ்” என்ற சொல்லே பின்னர் மருவி கோர்க்கா என்றும் கூர்க்கா என்றும் சின்னா பின்னப்பட்டுவிட்டது இன்றைய நிலை.
இந்த நிலையில் பசு வளர்க்கும் சிலரும் அதைத் தெருக்களில் மேயவிட்டு பாலிதீன் உறைகளையும் பசை தடவப்பட்ட சுவரொட்டிகளையும் தின்னவிட்டுப் பிறகு பாலைக் கறந்து விற்கும் அவலத்தையும் நாம் பார்க்கிறோம். இதாவது பரவாயில்லை, வயதாகிவிட்டது என்பதற்காகவோ பால் மறத்துவிட்டது என்பதற்காகவோ அடிமாடுகளாக லாரிகளில் ஏற்றி அனுப்பும் கொடுமைகளையும் செய்கிறோம்.
பசு தரும் பாலிலிருந்து நெய், தயிர், வெண்ணை ஆகிய பால்படுபொருள்களைப் பெறுகிறோம். பெற்ற தாயின் பாலைக் குடிக்க மறுக்கும் குழந்தைக்கும் பசுவின் பால்தானே ஒரே ஆகாரம். பல் முளைக்காத குழந்தை மட்டுமல்ல, பல் விழுந்த கிழவருக்கும் பாயில் படுத்துவிட்ட நோயாளிகளுக்கும் பசுவே பசியாற்றும் காயசண்டிகை என்றால் மிகையில்லை.
பால், தயிர், நெய், வெண்ணை, பசுவின் கோமியம், சாணம் ஆகியவை கலந்த பஞ்சகவ்யம் சிறந்த கிருமிநாசினி. மனிதர்கள் அளவோடு உண்ண உடல் சுத்திகரிப்பு நடைபெறும். தாவரங்களுக்குத் தெளிக்க சிறந்த பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது. பசுஞ்சாணம் நிலத்துக்கு சிறந்த எரு. சாணத்தை வீடுகளுக்கு எதிரில் மெழுகினால் தீமை தரும் கதிர் வீச்சுகள் குறைகின்றன.
இந்த நாளில் பசுவின் அருமை பெருமைகளை நினைவுகூர்ந்து அவற்றை வளர்ப்பதற்கு முடியா விட்டாலும் அவற்றைப் பாதுகாக்கும் கோ-சாலாக்களுக்கு நன்கொடை தந்து பசு வளர்த்த புண்ணியத்தில் கொஞ்சம் பங்கு பெறலாம். உத்தரப் பிரதேசத்தில் பசுக்களைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருந்தவர்களின் ஊர் என்பதற்காக, கோ-ரக்ஷணபுரி என்ற ஒரு ஊருக்கே பெயரிட்டார்கள். அதைத்தான் கோரக்பூர் என்று நாம் அழைக்கிறோம்.
நாமும் கோரக்ஷஸ்களாவோம் நம்முடைய ஊர்களும் கோரக்புரிகளாகட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT