Published : 06 Apr 2017 09:36 AM
Last Updated : 06 Apr 2017 09:36 AM
ஏப்ரல் 9 - மகாவீரர் ஜெயந்தி
மகதநாட்டை சிரேணிகன் எனும் அரசன் ஆண்டு வந்தான்.அரசனின் மகன் இளவரசன் அபயகுமாரன் அந்நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தான். அபயகுமாரன் பகவான் மகாவீரரின் சீரிய பக்தன். அவரின் கொள்கைகளைத் தவறாது பின்பற்றியும் மக்களிடையே பரப்பியும் வந்தான்.
மகத நாட்டின் ராஜகிரகம் எனும் நகரில் மரம் வெட்டி ஒருவன், வர்த்தமான மகாவீரரின் அறக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மகாவீரரிடமே துறவு ஏற்றான். ஒருமுறை துறவியான மரம் வெட்டி தெருவில் சென்றுகொண்டிருக்கும் போது, அபயகுமாரன் பார்த்து வணங்கினான். அத்துறவியும் பதிலுக்கு வணங்க அபயகுமாரனுடன் இருந்த நண்பர்களும் அதிகாரிகளும் அதிசயம் அடைந்தார்கள்.
அவர்கள் அபயகுமாரனிடம், ஒரு மரம் வெட்டி துறவியாக ஆகிவிட்டால் அவனை வணங்கலாமா?’ என்று கேட்டனர். அபயகுமாரனோ, “அவரை எனக்குத் தெரியும்.அதனால் வணங்கினேன்” என்று பதில் அளித்தான். ஒரு இளவரசன் துறப்பதற்கு நாடும் ஏராளமான செல்வங்களும் உண்டு. ஒரு விறகு வெட்டியிடம் என்ன துறப்பதற்கு உள்ளது? என கேட்டனர். அதற்குப் பதில் சொல்லாமல் அபயகுமாரன் தவிர்த்தான்.
மறுநாள் அபயகுமாரன் தன் நண்பர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் எழுதினான். “நீங்கள் இனி வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தோடு நெருப்பையும் பயன்படுத்தாமல் இருக்க உறுதி ஏற்றால் இரண்டு கோடி பணம் உங்களுக்கு அளிக்கிறேன்” எனக் கூறி இருந்தான்.
கடிதத்தைப் பெற்றவர்கள் பிரதம மந்திரியிடம் வந்தனர். “நீங்கள் தரும் இரு கோடிகளை வைத்துக்கொண்டு எவ்வாறு பிரம்மச்சாரியாகவும், நெருப்பின்றி உணவு சமைத்து உண்ணவும் முடியும்? பிச்சை எடுக்கும் நிலைதான் ஏற்படும்.பணத்தால் பயன் இல்லையே?” என்றனர்.
அபயகுமாரன், “நண்பர்களே! அதிகாரிகளே! இப்பொழுது புரிகிறதா? துறவியான மரம் வெட்டி, பிரமச்சரியத்தையும் பிச்சையேற்பதையும் ஏற்று இந்த உலக இன்பங்களையும் உரிமைகளையும் துறந்தது துறவுதானே? ஆனால் உங்களால் அவற்றைத் துறக்க இயலவில்லையே” எனக் கூறி புரியச் செய்தான். அவர்கள் அபயகுமாரனிடம் தங்களின் அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டனர். மகாவீரரின் வழியில் அனைவரையும் மதிக்கும் அபயகுமாரனை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT