Last Updated : 18 May, 2017 11:03 AM

 

Published : 18 May 2017 11:03 AM
Last Updated : 18 May 2017 11:03 AM

பைபிள் கதைகள் 50: ஓர் அரசன் என்ன செய்வான்?

மிகச் சிறிய வயதிலேயே பெற்றோரால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர் சாமுவேல். அவர் வளர்ந்து, இஸ்ரவேல் மக்களின் கடைசி நியாயாதிபதியாக விளங்கினார். சாமுவேலின் காலத்தில் இஸ்ரவேலர் களுக்குப் பெரும் தொல்லை கொடுத்துவந்த பெலிஸ்தர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் இஸ்ரவேலுக்குள் நுழையவில்லை. பெலிஸ்தர்கள் ஏற்கெனவே கைப்பற்றி வைத்திருந்த எக்ரோன் முதல் காத் வரை பல நகரங்களை இஸ்ரவேலர்கள் சாமுவேலின் காலத்தில் மீட்டெடுத்தனர். இஸ்ரவேலர்களின் கடவுளாகிய யகோவா இருக்கும்வரை நாம் அவர்களை வெல்ல முடியாது என்று பெலிஸ்தர்களும் எமோரியர்களும் முடிவுசெய்தனர். இதனால் இஸ்ரவேலர்களுடன் அவர்கள் சமாதானம் செய்துகொண்டனர்.

ஊழலில் திளைத்த வாரிசுகள்

சாமுவேல் முதுமையடைந்ததும் தனது பணியை அவரால் செய்ய முடியவில்லை. இதனால் நியாயத்தை நிலைநாட்ட வேண்டி, வழக்குகளை விசாரிக்கத் தன் மகன்களை சாமுவேல் நியமித்தார். சாமுவேலின் மூத்த மகனின் பெயர் யோவேல். இளைய மகனின் பெயர் அபியா. அவர்கள் பெயெர்செபா

நகரத்தில் நீதிபதிகளாக இருந்து வழக்குகளை விசாரித்து வந்தார்கள். ஆனால் தங்களின் தந்தையான சாமுவேலைப் போல் அவர்கள் புடமிட்ட தங்கமாக இருக்கவில்லை. அவர்கள் ரகசியமாகப் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பை மாற்றிக் கூறினார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றினார்கள்.

இதனால் கோபமடைந்த இஸ்ரவேலின் மூப்பர்கள் ஒன்று கூடி, ராமா நகரத்துக்கு வந்து சாமுவேலைச் சந்தித்தார்கள். சாமுவேல், அவர்கள் எப்படிப்பட்ட கோரிக்கையுடன் தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டு அமைதி காத்தார். ‘இனி எங்களுக்கு அரசனே தேவை; நீதிபதிகள் அல்ல’ எனக் கேட்டது சாமுவேலை மனவேதனை அடைய வைத்தது. சாமுவேல் கடவுளிடம் பேசிய பின் பதில்தருவதாகக் கூறினார். சாமுவேல் தக்க பதில்தரும்வரை ராமா நகரத்திலேயே தங்க மூப்பர்கள் அனைவரும் முடிவு செய்தனர்.

கடவுளே அரசர்

இஸ்ரவேலின் மூப்பர்கள் ஒன்றுதிரண்டு வந்துஇஸ்ரவேலர்களுக்கு இதுநாள் வரை கடவுளே அரசராக இருந்து வழிநடத்திவருவதை உணராமல் இருக்கிறார்களே; தங்களுக்கு அரசனைக் கேட்பது கடவுளுக்கு எதிரான திட்டமல்லவா?” என்று பதறினார் சாமுவேல். கடவுளின் ஆசாரிப்புக் கூடாரத்தில் அவரது உடன்படிக்கைப் பெட்டியின் முன்பாக ஜெபித்தார்.

கடவுள் சாமுவேலிடம், “மக்கள் கேட்பதைப் போல் செய், அவர்கள் உன்னை நிராகரிக்கவில்லை. என்னையே நிராகரித்திருக்கிறார்கள்! என்னை அவர்களுடைய அரசனாக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை! நான் எகிப்திலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தேன். ஆனால் என்னை விட்டுவிட்டுக் கற்பனை உருவங்களை வழிபட்டனர். இப்போது அவர்கள் ஒரு மனிதனை வழிபட வேண்டி, அரசனைக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டதைப்போலவே செய்; ஆனால் மனிதர் மத்தியிலிருந்து வரும் ஓர் அரசன் என்ன செய்வான் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறு! அவன் எவ்வாறு ஆட்சிசெய்வான் என்பதைக் கூற மறக்காதே” என்றார்.

அரசன் என்ன செய்வான்?

பதிலுக்காகக் காத்திருந்த மூப்பர்களை அழைத்த சாமுவேல், கடவுள் கூறிய எச்சரிக்கைகளை எடுத்துரைத்தார். “உங்களை ஆள்வதற்கு ஓர் அரசன் வந்தால், அவன் என்ன செய்வான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவனுக்கு எவையெல்லாம் தேவைப்படும் என்பதை அறிவீர்களா? அவன் உங்களின் மகன்களை எடுத்துக்கொள்வான். அவர்களைத் தனக்கு சேவை செய்யுமாறு அமர்த்திக்கொள்வான். அவர்களைப் போர் வீரர்கள் ஆகுமாறு கட்டாயப்படுத்துவான். அவன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்திப் போருக்கான ஆயுதங்களைச் செய்யச் சொல்வான்! அவன் தனது அரண்மனையை அலங்கரிங்க அவர்களை வேலை வாங்குவான்.

அரசன் உங்கள் பெண் பிள்ளைகளையும் எடுத்துக்கொள்வான். தனக்கான வாசனைப் பொருட்களைச் செய்யச் சொல்வான். அவர்களில் சிலரை அவனுக்காகச் சமைக்கவும், ஆடம்பர உணவுகளைச் செய்யவும் பணிப்பான்.

அவ்வளவு ஏன்; அரசன் உங்கள் செழிப்பான வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எடுத்துக் கொள்வான். தன் அதிகாரிகளுக்கு அவற்றைக் கொடுப்பான். உங்கள் மந்தையில் பத்தில் ஒரு பாகத்தையும் எடுத்துக்கொள்வான்.

அரசன் அத்துடன் நின்றுவிடுவதில்லை; உங்களின் திறன்மிக்க பணியாட்களை எடுத்துக் கொள்வான். அவன் உங்கள் கழுதைகளையும் எடுத்து தன் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்வான். இவ்வாறு நீங்கள் படிப்படியாக உங்கள் அரசனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் அடிமையாவீர்கள். காலம் வரும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அரசனால் கதறி அழுவீர்கள்” என்று சாமுவேல் எடுத்துக் கூறினார்.

பிடிவாதம் வென்றது

ஆனால் இஸ்ரவேலின் மூப்பர்கள் சாமுவேலின் வார்த்தைகளைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவர்கள், “இல்லை! இல்லை! எங்களை ஆள ஓர் அரசனே தேவை. அவரையே நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு அரசன் கிடைத்துவிட்டால் நாங்கள் மற்ற நாடுகளைப் போன்று இருப்போம், அரசன் எங்களை வழிநடத்துவான். எங்களோடு வந்து எங்களுக்காகப் போர் செய்வான்” என்று பிடிவாதமாகக் கூறினார்கள். மூப்பர்களின் பிடிவாதத்தைக் கடவுளிடம் எடுத்துச் சென்றார் சாமுவேல். கடவுள் “அவர்கள் விரும்பியபடியே செய்” என்றார். பின்னர் சாமுவேல் இஸ்ரவேல் மூப்பர்களிடம், “நீங்கள் புதிய அரசனை அடைவீர்கள். இப்போது, நீங்கள் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றார். இவ்வாறு இஸ்ரவேலர்களுக்கு நியாயாதிபதிகளின் ஆட்சி முடிந்து அரசர்களின் ஆட்சி தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x