Published : 18 Aug 2016 11:34 AM
Last Updated : 18 Aug 2016 11:34 AM
சுவாமி ராமகிருஷ்ணானந்தர் நினைவு நாள்: ஆகஸ்ட் 21
சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற உரையை நிகழ்த்திய சுவாமி விவேகானந்தர் அமெரிக்க, ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியபோது சென்னைக்கு வருகை தந்தார். சென்னையில் ராமகிருஷ்ண மடம் ஆரம்பிப்பதற்காக அவரது சகோதரச் சீடர் ஒருவரை அனுப்பி வைக்கும்படி அப்போது அவரிடம் சில அன்பர்கள் கேட்டுக்கொண்டனர். அப்படி விவேகானந்தரால் அனுப்பி வைக்கப்பட்டவர் தான் ராமகிருஷ்ணானந்தர்.
குடும்பத்தின் மூத்த மகனான அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர், சசி பூஷண் சக்கரவர்த்தி. ஒரு முனிவரைப் போன்று வாழ்க்கை நடத்திய இவரது தந்தை ஈஸ்வர சந்திரரும் தாய் பாவசுந்தரி தேவியும் இறைபக்தியில் தோய்ந்தவர்கள். ஒரு நாள் தனது ஒன்றுவிட்ட சகோதரர் சரத் சந்திர சக்கரவர்த்தி மற்றும் சில நண்பர்களுடன் தட்சிணேஸ்வரம் காளிகோவில் சென்றிருந்தபோது குருதேவர் ராமகிருஷ்ணரின் தரிசனம் கிடைத்தது.
மறக்க முடியாத புனித அனுபவம்
இவர்கள் அந்த அறைக்குள் அடியெடுத்துவைத்த சமயத்தில் அந்த மகான் ஒரு சிறிய கட்டிலில் அமர்ந்திருந்தார். புன்முறுவலுடன் இவர்களை வரவேற்று அமரச் செய்தார். நீண்ட நாள் பழகியவர்போல் அன்பைச் சொரிந்து, சரளமாகப் பேசிய அந்த முதல் சந்திப்பு, சசி, சரத் இருவருக்கும் என்றுமே மறக்க முடியாத புனித அனுபவமானது.
சசியைப் பொறுத்தவரையில் குருதேவரே கல்வி, சொத்து, சுகம், சொந்த பந்தம் என எல்லாமும் ஆனார். குருதேவர் வாக்கு வேத வாக்கானது. விரைவிலேயே நரேந்திரர் என்ற விவேகானந்தருடனும் தொடர்பு ஏற்பட்டு, இருவருக்கும் இடையே அற்புதமான ஒரு சகோதர உறவு துளிர்த்து, செழித்தது. 1883 அக்டோபர் முதல் 1886 ஆகஸ்டு வரையில் மூன்றாண்டு காலம் குருதேவருக்கு சேவை செய்யும் பேறு பெற்றார், சசி.
குருதேவரின் மகாசமாதிக்குப் பிறகு, மாதம் 10 ரூபாய் வாடகையில் வராக நகர் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினர் அந்தத் தவமுனிவரின் இளம் துறவி.
விவேகானந்தர் விரும்பிய பெயர்
நாகப் பாம்புகள் குடியிருந்த பாழடைந்த அந்த இல்லம்தான், ராமகிருஷ்ண சங்கத்தின் முதல் மடம். குருதேவர் தமது உடலை உகுத்த பிறகு வீடு திரும்பியிருந்த சீடர்கள், நரேந்திரரின் அன்புக் கட்டளைக்குப் பணிந்து வராக நகர் மடத்திற்கு வந்து சேர்ந்தனர். குருதேவரின் புனிதக் கரங்களால் காவியுடை பெற்று, சன்னியாசம் ஏற்ற சசி, பின்னர் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என்ற நாமம் ஏற்றார். முதலில் அந்தப் பெயரை தாம் ஏற்றுக்கொள்ள நரேந்திரர் விரும்பினார். ஆனால் தியாகமூர்த்தியான அவர், குருதேவர் பெயரைச் சூட்டிக்கொள்ளும் உரிமையை சசிக்கே அளித்துவிட்டார்.
குருவுக்கும் சகோதர சீடர்களுக்கும் சேவைசெய்வதில் பேரானந்தம் பெற்ற ராமகிருஷ்ணானந்தரை, சென்னை அன்பர்களுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் சென்னைக்குப் புறப்படச் சொன்னார், விவேகானந்தர்.
1897 மார்ச் மாத இறுதியில் சென்னை வந்த அவர்கள் இருவரையும் அளசிங்கப் பெருமாள், டாக்டர் நஞ்சுண்டன் ஆகியோர் வரவேற்றனர். இந்தக் குழுவினர்தான் சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கப் பயணத்திற்கு நிதி திரட்டி உதவி செய்தவர்கள். ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஃப்ளோரா காட்டேஜ் என்ற ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சிறிது காலம் அவர்கள் இருவரையும் தங்கவைத்தனர். அந்த இல்லத்தின் ஒரு அறையை பூஜை அறையாக்கி, தாம் கொண்டு வந்திருந்த குரு தேவரின் திரு உருவப்படத்தை வைத்து வழிபாட்டைத் தொடங்கினார், சசி மகராஜ். அன்றைய தினம்தான் சென்னையில் குருதேவருக்கான நித்திய பூஜையின் தொடக்க நாள்.
சென்னையில் ராமகிருஷ்ண மடம்
ராமகிருஷ்ண இயக்கத்தின் முதலாவது கிளை மடம் சென்னையில் அன்று அந்த இல்லத்தில் தொடங்கியது. சில மாதங்களில் ஐஸ் ஹவுஸ் (இன்றைய விவேகானந்தர் இல்லம்) மாளிகையின் அடித்தளத்தை அதன் உரிமையாளரும் விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவருமான பிலிகிரி ஐயங்கார், வாடகை இல்லாமல் மடத்தின் பயன்பாட்டுக்காகக் கொடுத்தார்.
சென்னை தங்கசாலைத் தெருவில் ஆரிய சமாஜத்தின் தொடக்க சொற்பொழிவை நிகழ்த்தி, சென்னையில் தமது வேதாந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கினார், ராமகிருஷ்ணானந்தர். படிப்படியாக இந்தப் பணி, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, புரசைவாக்கம் முதலான இடங்களிலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் விரிவடைந்தது. முதலில் கீதை, பாகவதம், உபநிடதங்கள், பஞ்சததி உள்ளிட்ட சாஸ்திரங்கள் குறித்த வகுப்புகளை நடத்தினார். ஜட்கா வண்டியில் (குதிரை வண்டி) செல்வதற்குக் கையில் காசு இல்லாத சிரமமான நாட்களிலும்கூட அவர் தாமதமாகச் சென்றதேயில்லை.
இரண்டு பேர் இருந்தாலும் சரி, இரண்டாயிரம் பேர் இருந்தாலும் சரி, அவரது பேச்சின் உட்பொருள், உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து பெருக்கெடுத்துக்கொண்டே இருக்கும். ஒருவர்கூட வராமல் போன நாட்களிலும் இடம்பெயர மாட்டார். வகுப்புக்கான முழு நேரமும் தியானம் செய்வார். பிறகு எந்த ஏமாற்றமோ மனக்குறையோ இல்லாமல் மடம் திரும்புவார், இந்தக் கர்ம யோகி.
சென்னையில் ராமகிருஷ்ண மடம் நிர்மாணிப்பதற்கான முயற்சிகளை 1902-ம் ஆண்டிலேயே சுவாமிகள் தொடங்கினார். மைலாப்பூர், திருவல்லிக்கேணி முதலிய பகுதிகளில் சில அன்பர்களுடன் வீடு வீடாகச் சென்று நன்கொடை வசூலித்தார். இரண்டு ஆண்டுகளில் 1700 ரூபாய்தான் திரட்ட முடிந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மைலாப்பூர் ப்ராடீஸ் சாலையில் (இன்றைய ராமகிருஷ்ண மடம் சாலை) இருந்த சிறு நிலப்பகுதியை அதன் உரிமையாளரும் சுவாமிகளின் நெருங்கிய நண்பருமான அகுல கொண்டைய செட்டியார் என்பவர் மடத்திற்காகக் கொடுத்தார். நன்கொடையாகக் கிடைத்திருந்த சொற்பத் தொகையுடன் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்படைந்தன. நிதியும் திரட்டப்பட்டது. 5500 ரூபாய் செலவில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. வசூலான தொகையோ 4100 ரூபாய்தான். துண்டு விழுந்த தொகையை ஈடுசெய்வது பெரும்பாடானது.
தேர் வடம் இழுத்த மகான்
1907 நவம்பர் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ராமகிருஷ்ணானந்தர் மயிலாப்பூர் மடத்தில் குடியேறினார். முதல் வேலையாக பூஜை அறையில் குருதேவரைப் பிரதிஷ்டை செய்தார். மயிலை கபாலீஸ்வரருக்கும் அன்றைய தினம் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. கபாலீஸ்வரரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த சுவாமிகள், தேர்த் திருவிழாவில் வடம் பிடித்துத் தேரிழுப்பார். குருதேவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்ததால், மடம் முழுவதிலும் தூய்மையைப் பளிச்சிட வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
1900-களின் ஆரம்பத்தில் கோயம்புத்தூரில் பிளேக் நோய் பரவி ஏராளமானோர் மாண்டனர். ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் சில குழந்தைகள் மட்டுமே உயிர்பிழைத்தனர். நிவாரணப் பணிகளுக்காக அங்கு சென்றிருந்த சுவாமிகள் அந்தக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை ஏற்றார். தமது இளம் பக்தர்களான ராமசாமி அய்யங்கார், ராமானுஜாரியார் ஆகியோர் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலமும் கல்வியும் அளிப்பதற்கான இல்லத்தை ஆரம்பிக்கவைத்தார். 7 குழந்தைகளுடன் மயிலாப்பூரில் ஆரம்பிக்கப்பட்ட ராமகிருஷ்ண மாணவர் இல்லம், இன்று ஓர் உயர்நிலைப்பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரியுடன் விரிவடைந்துள்ளது.
ஏழை எளிய மக்கள் அதிகமாக வசிக்கும் வடசென்னைப் பகுதியில் 1906-ல் 5 பெண் குழந்தைகளுடன் ஓர் ஆரம்பப் பள்ளியை ஆரம்பித்தார். பெரியமேடு கிருஷ்ணப்ப நாயக்கன் அக்ரஹாரத் தெருவில் ஒரு வாடகை வீட்டில் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. இதன் வளர்ச்சிக்காக உண்டியல் ஏந்தி வீதிவீதியாகச் சென்று பணம் திரட்டினார். இன்று இந்தக் கல்வி நிலையம், தொடக்கக் கல்வி வழங்கும் ராமகிருஷ்ண மடம் தேசியப் பள்ளி, விவேகானந்தர் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 1200க்கும் மேற்பட்ட மாணவியர் பயிலும் இரண்டு ஞானத் திருக்கோயில்களாக உயர்ந்துள்ளன.
தமிழகத்தின் மீது சுவாமி ராமகிருஷ்ணானந்தருக்குத் தனிப் பாசம் உண்டு. உடல் நிலை பாதிக்கப்பட்ட இறுதி நாட்களில் கல்கத்தாவில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல்நலம் குறித்து அறிந்துவருவதற்காகச் சென்னையிலிருந்து அங்கு அனுப்பப்பட்ட ஒரு அன்பரிடம், தாம் சென்னை திரும்பி வந்து ஆசார்யார்களின் பிறப்பிடமான தென்னகத்திலேயே இறைவன் திருவடியை அடைய விரும்புவதாக சுவாமிகள் தெரிவித்தார். ஆனால், அவரது இந்த இறுதி ஆசை நிறைவேறவில்லை. கல்கத்தாவில் 1911, ஆகஸ்ட் மாதம் 21-ம் நாள் பிற்பகலில் விவேகானந்தர் இயற்றிய சமாதி கீதத்தைக் கேட்டவாறே மகாசமாதியில் லயித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT