Published : 09 Feb 2017 10:34 AM
Last Updated : 09 Feb 2017 10:34 AM

திருத்தலம் அறிமுகம்: மூன்றாம் திருப்பதி - காய்சினவேந்தப் பெருமாள் ஆலயம்

திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள், பூமிபாலகர் எனும் பெயரில் சயனத் திருக்கோலத்தில் இங்கே வீற்றிருக்கிறார்.

தூத்துக்குடி - ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு மூன்றாவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புளியங்குடி. ஒருசமயம் பூமிபாலகர் மகாலெட்சுமியுடன் கருட வாகனம் ஏறி உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். அப்போது, தாமிரபரணி நதிக் கரையின் எழில் கண்டு, சிறிது காலம் மலர்மகளுடன் அங்கேயே தங்கினார். இதைக் கண்டு மலர்மகள் மீது பொறாமை கொண்ட மண்மகள், பாதாள லோகத்திற்குச் சென்றுவிட்டாள்.

சமாதானமாகிய மண்மகள்

இதனால், உலகமே வறண்டு பொலிவிழந்து போனது. இதைக் கண்ட தேவர்கள் பகவானிடம் சென்று முறையிட்டனர். அவர்களை சாந்தப்படுத்தி அனுப்பிய பரமன், பாதாளலோகம் சென்று மண் மகளையும் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். அதன் பிறகு பொறாமை நீங்கி மலர்மகளுடன் நட்பு கொண்டாள் மண்மகள். இப்பின்னணியில் பரமன், மண்மகள், மலர்மகளுடன் காட்சி கொடுத்த இடம்தான் திருப்புளியங்குடி. இந்த நிகழ்வுக்குப் பிறகு, பூமிபாலகன் ‘காய்சின வேந்தர்’ என தேவர்களால் துதிக்கப்பட்டு எழுந்தருளிய இடமும் திருப்புளியங்குடி தான்.

சபிக்கப்பட்ட இந்திரன்

ஒரு சமயம், இமயத்தின் தாமரைத் தடாகம் ஒன்றில் இந்திரன் தனது பத்தினியான இந்திராணியுடன் விளையாட்டில் லயித்திருந்தான். அங்கே ரிஷி ஒருவரும் மாற்றுருவம் கொண்டு தனது மனைவியுடன் சுகித்துக்கொண்டிருந்தார். அது ரிஷி என்பதை அறியாத இந்திரன் தனது வச்சிராயுதம் கொண்டு அவரைத் தாக்கினான். அப்போது அந்தணர் உருவம் கொண்டு சுருண்டு விழுந்தார் ரிஷி.

இதைக் கண்ட இந்திரன் செய்வதறியாது உடல் நடுங்கினான். அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டதால் பித்துப்பிடித்தது போல் அலைந்தான். இதைக் கண்டு பயந்த தேவர்கள், குரு பகவானிடம் சென்று கலி தீர வழி கேட்டனர். குருவானவர் இந்திரனைத் திருப்புளியங்குடிக்கு அழைத்து வந்து, அங்குள்ள தடாகத்தில் நீராடச் செய்து பூமி பாலகரை வழிபடச் செய்தார். இதையடுத்து, இந்திரனை பீடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட சகல பாவங்களும் அகன்றன. அதுமுதல் அத்தீர்த்தம் இந்திரத் தீர்த்தம் எனப் பெயரும் பெற்றது.

அசுரனுக்கு விமோசனம் தந்த பூமிபாலகர்

இதன் பிறகு, இந்திரத் தீர்த்தக் கரையில் இந்திரன், சசிபதி வேள்வி என்ற ஒரு வேள்வியை நடத்த யத்தனித்தான். அதற்கு அசுரன் ஒருவன் இடைஞ்சலாகக் குறுக்கே வந்தான். அவனால் துன்புற்ற இந்திரன் பூமிபாலகரைப் பிரார்த்தித்தான். வேண்டுதலுக்கு இரங்கிய பூமி பாலகர் தனது கதாயுதத்தால் அசுரனை அடித்துக் கொன்றான். அசுரன் பூமி பாலகரால் அடிபட்டு சாப விமோசனம் பெறவேண்டும் என்பது விதி. உயிர் பிரிந்த அசுரன் தேவ விமானத்தில் ஏறி தேவலோகம் சென்றான்.

புதனுக்கு அதிபதி

108 திவ்ய தேசங்களில் 52-வது திவ்யதேசமான திருப்புளியங்குடி காய்சின வேந்த பெருமாள் கோயிலானது, புதனுக்கு அதிபதியாக விளங்கும் திருத்தலமாகும். நவதிருப்பதிகளில் மூன்றாம் திருப்பதியான இத்தலம், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. இங்கு மலர்மகள் நாச்சியாரும் பூமகள் நாச்சியாரும் இறைவியராக வீற்றிருக்கிறார்கள். படிப்புத் தடை அகலவும், பெரியவர்களின் கோபத்திலிருந்து விடுபடுவதற்கும் பக்தர்கள் இக்கோயிலுக்கு நம்பிக்கையுடன் வருகின்றனர்.

புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, மார்கழி திருஅத்யயன உற்சவம், பங்குனி பிரம்மோற்சவ பெருவிழா உள்ளிட்ட சமயங்களில் இத்திருத்தலத்தில் ஜனத்திரள் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x