Published : 02 Feb 2017 10:23 AM
Last Updated : 02 Feb 2017 10:23 AM
சுவாமி விவேகானந்தர் சிகாகோ உள்ளிட்ட பல வெளி நாடுகளில் சொற்பொழிவாற்றிவிட்டு தாயகம் திரும்பினார். அப்போது சென்னையில் அவர் 9 நாட்கள் தங்கியிருந்த இடமே தற்போது அவரின் பெயரிலேயே விவேகானந்தர் இல்லம் என அழைக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக விவேகானந்தர் சென்னையில் தங்கியிருந்த நிகழ்வைப் போற்றும் வகையில் விவேகானந்தர் நவராத்திரியை கொண்டாடி வருகின்றது சென்னை, மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். இந்தாண்டில் விவேகானந்தர் நவராத்திரியோடு தெய்வீகப் புத்தகங்களின் விற்பனை மற்றும் புத்தகக் காட்சி பிப்ரவரி 6 முதல் 14 வரை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறவிருக்கிறது. விவேகானந்தர் நவராத்திரி நிகழ்ச்சிகள் குறித்து சுவாமி விமூர்த்தானந்தர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
பெருமையைப் பறைசாற்றிய சொற்பொழிவுகள்
சுவாமி விவேகானந்தர் சிகாகோ உள்ளிட்ட வெளிநாடுகளில் நிகழ்த்திய சொற்பொழிவுகள், அதுவரை அந்நாட்டு மக்களின் மனதிலிருந்த இந்தியர்கள் குறித்த எண்ணத்தை மாற்றியது. இந்தியர்களின் கலாச்சாரம், பண்பாடு குறித்து பெரும் மதிப்புக்கு வித்திட்டது. இரண்டு முக்கியமான செயல்களை சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் நிகழ்த்தின. அயல்நாட்டில் இருப்பவர்களுக்கு இந்தியர்களின் பெருமையை உணரவைத்தது. இந்தியர்களுக்கே இந்தியர்களின் பெருமையை உணரவைத்தது.
இத்தகைய சொற்பொழிவுகளை அயல்நாட்டில் நிகழ்த்தியபின் தாயகம் திரும்பிய சுவாமி விவேகானந்தரை சென்னையில் வரவேற்க பாமரர்களும், படித்தவர்களும், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பலரும் ஒருங்கே கூடினர். இந்த நிகழ்வை அன்றைக்கு வெளியிட்டதில் `தி இந்து’ ஆங்கில நாளிதழின் பங்கு முக்கியமானது.
எல்லாருக்குமான உந்துசக்தி
சென்னையில் ஒன்பது நாட்கள் தங்கிய விவேகானந்தர் எல்லாத் துறைகளும் வளர்வதற்குக் காரணமான உந்து சக்தியை தமது சொற்பொழிவில் வழங்கினார். குறிப்பாக, நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் மக்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார். பெண் கல்வியை வலியுறுத்தி பேசியிருக்கிறார். பாமர மக்களை நாம் பாதுகாக்கத் தவறிவிட்டதைப் பற்றி பேசியிருக்கிறார். இதை நினைவுகூரும் வகையில்தான் விவேகானந்தர் நவராத்திரியின்போது பல கலைகளைக் கொண்டும் ஒன்பது நாட்களுக்கான நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளோம். அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், முன்னணி இசைக் கலைஞர்கள், வளர்ந்து வரும் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரின் கூட்டணியில் இந்த விழா நடைபெறவிருக்கிறது.
அரிய கலைகளின் சங்கமம்
விவேகானந்தர் நவராத்திரி நிகழ்ச்சியை முன்னாள் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி தொடங்கிவைக்கிறார். ஒன்பது நாள் நிகழ்ச்சியையும் ஒவ்வொரு பிரமுகர் தலைமையேற்று சிறப்பிக்கிறார். வேளுக்குடி கிருஷ்ணனின் `கீதா சாரம்’ குறித்த உபன்யாசம், நிவேதிதா தேவியின் 150வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் பிரயத்னா குழுவினரின் சகோதரி நிவேதிதா நாடகம், சிக்கில் குருசரண், பியானோ கலைஞர் அனில் சீனிவாசன் ஆகியோர் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையைச் சொல்லும் பொம்மலாட்டம், ஷீலா உன்னிகிருஷ்ணனின் அகம் பிரம்மாஸ்மி நாட்டிய நாடகம் ஆகியவை நடைபெற இருக்கின்றன.புத்தகக் கண்காட்சியில் ஏறக்குறைய 1000 தலைப்புகளில் ராமகிருஷ்ண மடம் வெளியிட்டிருக்கும் நூல்கள் சலுகை விலையில் கிடைக்கும்.
அருளுக்கு இல்லை தடை
விவேகானந்தர் நவராத்திரி விழா நடக்கும் ஒவ்வொரு நாளிலும் பல கலைகளின் வழியாகவும் சொற்பொழிவுகளின் வழியாகவும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருளையும் சுவாமி விவேகானந்தரின் அருளையும் பெறுவதற்கு விவேகானந்தர் இல்லத்தில் கூடுங்கள். அருளைப் பெறுவதற்கு எந்தத் தடையும் இருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT