Published : 06 Apr 2017 09:40 AM
Last Updated : 06 Apr 2017 09:40 AM
மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஜன்ம ராசியில் இருப்பது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் தன் சொந்த வீட்டில் உலவுவதால் நலம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எதிர்ப்புகள் விலகும். சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். போட்டிகள், பந்தயங்களில் வெற்றி கிட்டும். குரு 6-ல் இருந்தாலும் வக்கிரமாக உலவுவதால் பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும்.
11-ல் கேது உலவுவதால் தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். சாதுக்கள், மகான்களின் ஆசி கிட்டும். ஜன்ம ராசியில் புதனும் 8-ல் சனியும் இருப்பதால் உடல் நலம் அவ்வப்போது பாதிக்கப்படும். தலை, மறைமுக உறுப்புகளில் உபாதைகள் ஏற்படும். வியாபாரிகளும் தொழிலாளர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. ராகு 5-லும், சூரியன் 12-லும் உலவுவதால் மக்களாலும் தந்தையாலும் சிறுசிறு பிரச்சினைகள் சூழும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9, 10.
திசைகள்: தெற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, மெரூன், வெண்மை.
எண்கள்: 3, 6, 7, 9. l பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் சூரியன், சுக்கிரன் ஆகியோரும் உலவுவது நல்லது. நல்லதொரு தகவல் வந்து சேரும். மனத்துக்கினிய சம்பவம் நிகழும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். மக்கள் நலம் சீராக இருக்கும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். புதிய கொள்கைகளுக்கு வரவேற்பு கூடும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும்.
அரசுப் பணியாளர்களது கோரிக்கை நிறைவேறும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். 4-ல் ராகுவும் 7-ல் சனியும், 12-ல் புதன், செவ்வாய் ஆகியோரும் உலவுவதால் மோசமான தொடர்புக்கு இடம் தரலாகாது. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது அவசியமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9, 10.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், ஆரஞ்சு, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 7. l பரிகாரம்: துர்க்கையை வழிபடுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 10-ல் சூரியனும் 11-ல் புதன், செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். திரவப் பொருட்கள் லாபம் தரும். தகவல் தொடர்பு வகையில் ஆதாயம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் வளர்ச்சி பெறும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.
எதிரிகளின் கரம் வலுக்குறையும். வழக்குகளிலும், போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும். பொதுநலப் பணிகளில் ஆர்வம் கூடும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிடைக்கும். அரசுப் பணியாளர்களது நிலை உயரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மூலம் ஆதாயமும் கிடைக்கும். தந்தையால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9, 10, 12 பிற்பகல்).
திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு, பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6, 8, 9. l பரிகாரம்: குருவையும், விநாயகரையும் வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 9-ல் வக்கிர சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் புதனும் உலவுவதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் அமைதி காணலாம். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். நல்லவர்களின் நட்புறவு நலம் தரும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறச் சந்தர்ப்பம் சாதகமாக அமையும். எதிரிகள் அடங்குவார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். சட்டம், காவல், ராணுவத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.
பிறரை நிர்வகிக்கும் ஆளுமை உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். 5-ல் சனி உலவுவதால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். மக்கள் நலனில் கவனம் தேவை. வயிறு, காது சம்பந்தமான உபாதைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 9, 10.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெண்மை, சிவப்பு, இளநீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 9. l பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் வக்கிர குருவும் 9-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. செல்வாக்கும் மதிப்பும் உயரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழி பிறக்கும். எதிர்ப்புகள் அடங்கும். பேச்சில் திறமை வெளிப்படும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். தனவந்தர் சகாயம் பெறுவீர்கள். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.
ராசிநாதன் சூரியன் 8-ல் உலவுவதாலும் 4-ல் சனி இருப்பதாலும் உடல் நலம் அவ்வப்போது பாதிக்கப்படும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். அரசு சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். நிறுவன, நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்குப் பிரச்சினைகள் சூழும். தொழிலாளர்களும் விவசாயிகளும் அதிகம் பாடுபட வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9, 10.
திசைகள்: தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம்.
எண்கள்: 3, 9. l பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல் புதனும் உலவுவது நல்லது. எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் வளர்ச்சி காண்பீர்கள். திரவப் பொருட்கள் லாபம் தரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு தொழில்களில் வருவாய் கிடைக்கும். ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், ராகு அனுகூலமாக உலவாததால் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும்.
கனவு, தொல்லை தரும். தூக்கம் கெடும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது. சிக்கன நடவடிக்கை தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். பதவியில் சறுக்கல் ஏற்படக் காரணம் உண்டு. பொருள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது அவசியமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9, 10, 12 (பிற்பகல்).
திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், மெரூன், பச்சை.
எண்கள்: 5, 7, 8. l பரிகாரம்: துர்க்கையையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT