Last Updated : 21 Jul, 2016 11:53 AM

 

Published : 21 Jul 2016 11:53 AM
Last Updated : 21 Jul 2016 11:53 AM

ஆடிவெள்ளி: அம்மன் அருளும் ஆனந்த வெகுமதி

ஆடி வெள்ளியன்றும் ஆடிச் செவ்வாய்க் கிழமைகளிலும் அம்மனை சிறப்பாக பூஜை செய்வது கோயில்களிலும், வீடுகளிலும் வழக்கம். ஆடி மாதம் பிறந்தவுடன் பிளாட்பாரத்தில் உள்ள சிறிய அம்மன் கோயில் முதல் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் வரை விழாக்கோலம் பூணுவது ஆன்மிகச் சிறப்பு. பக்தர்களுக்கு ஆனந்தம் அளிப்பது.

ஆடிவெள்ளி பூஜை

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அரச மரத்தடி அம்மன் நாகர் விக்கிரகங்களுக்குப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். அரச மரத்தடி பூஜை அனைத்தையுமே காலை எட்டு மணிக்குள் செய்துவிட வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில்தான் மகாவிஷ்ணுவும் மகாலஷ்மியும் அரச மரத்தில் குடி கொண்டிருப்பார்கள் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மனுக்கு இனிப்புப் பண்டம் செய்து நிவேதிக்க வேண்டும். முதல் வெள்ளியன்று நல்ல பாகு வெல்லம், தேங்காய் சேர்த்த இனிப்புக் கொழுக்கட்டை குறைந்தபட்சம் பன்னிரெண்டாவது செய்ய வேண்டும். இரண்டாவது வெள்ளியன்று சர்க்கரைப் பொங்கல்... மூன்றாம் வெள்ளியன்று கேசரி செய்யலாம். நான்காம் வெள்ளியன்று பருப்புப் பாயசம் செய்ய வேண்டும். கொழுக்கட்டை தவிர அனைத்து இனிப்புகளிலும் நிறைய முந்திரி, திராட்சையை வறுத்துப் போட வேண்டும்.

செளந்தர்ய லஹரி, லலிதா சகஸ்ரநாமம், சூக்தம், பூ சூக்தம், நீளா சூக்தம், இந்திரன் கூறிய மகாலஷ்மி அஷ்டகம், ஆதிசங்கரர் அருளிய மகாலஷ்மி ஸ்தோத்திரம் ஆகியவற்றில் இயன்றதை இல்லத்தாரே சொல்லலாம். மேலும் இதனைச் சொல்ல வல்லாரைக் கொண்டு இல்லத்தில் பாராயணம் செய்யலாம்.

பூஜைக்குத் தயாராகும் முறை

ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகளில் விடியற்காலையில் எழுந்து, தலைக்கு ஸ்நானம் செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு, செம்மண் இட வேண்டும்.

இல்லத்தில் பெண் குழந்தைகள் இருந்தால் எண்ணெய், சீயக்காய் தேய்த்து நன்கு ஸ்நானம் செய்விக்க வேண்டும். பின்னர் அழகிய தூய ஆடை உடுத்தச் செய்து, நன்கு உலர்ந்த பின் பின்னலிட்டு, பூச்சூட்டி, பொட்டிட வேண்டும்.

இதே போல் வீட்டில் உள்ள குத்து விளக்கை நன்கு துலக்கி, சந்தனம், குங்குமம் இட்டு, பூச்செருக வேண்டும். பின்னர் நெய்யிட்டு தீபம் ஏற்றவேண்டும். தீபம் முத்துப் போல் பிரகாசிக்க வேண்டும். இவள் தீபலஷ்மி. இவளது பாதங்களில் புஷ்பம் இட்டு ஆராதிக்க வேண்டும்..

தற்போது இல்லம் தயார், இல்லத்தார் தயார், தாயார் தயார் என்ற நிலையில் ஸ்லோகங்கள் சொல்லி, நிவேதனம் செய்ய வேண்டும்.

பிரசாத விநியோக முறை

பிரசாதத்தை முதலில் இல்லத்தில் உள்ள பெண் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். பின்னர் ஆண் குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும் கொடுத்துவிட்டு இல்லத்தரசி உண்ணலாம்.

அதி முக்கியமாக அம்மன் ஆராதனைகளில் பிரசாத விநியோகம் பிரதானம். இல்லத்தில் வேலை செய்பவர்களுக்கு இப்பிரசாதங்களை நிறையக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள வெல்லம், தேங்காய், முந்திரி, திராட்சை போன்றவற்றை உண்டால் அவர்களும் மேலும் ஆரோக்கியமாக இருப்பார்கள். இந்து தர்மத்தின் முக்கியக் குறிக்கோள் `லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ என்பதுதான். உலகிலுள்ளோர் அனைவரும் நன்கு வாழ வேண்டும் என்பதே இதன் பொருள்.

புஷ்பங்களால் அன்னையை ஆராதித்து அளவில்லா ஆனந்தம் பெற ஆடி வெள்ளி அரிய தருணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x