Published : 17 Feb 2014 12:00 AM
Last Updated : 17 Feb 2014 12:00 AM
பெண்களின் சபரிமலை என வர்ணிக்கப்படும் கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில்பொங்காலை திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு 40 லட்சம் பெண்கள் திரண்டு பொங்கல் வைத்து, கின்னஸ் சாதனை படைத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் நடைபெறும் இவ்விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வது வழக்கம். ‘திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்’ என்பது பக்தர்களின் ஐதீகம். இதனால், ஆண்டுக்கு ஆண்டு பொங்கல் வைக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடந்தாண்டு விழாவில், 30 லட்சம் பெண்கள் பங்கேற்று, பொங்கல் வைத்து வழிபட்டு, கின்னஸ் சாதனை படைத்தனர். அந்த சாதனையை முறியடித்து, 40 லட்சம் பெண்கள் இந்தாண்டு பங்கேற்று வழிபட்டனர்.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. காலை 10.30 மணிக்கு கோயில் மேல்சாந்தி நீலகண்டன் நம்பூதிரி பகவதி அம்மன் கோயில் விளக்கில் இருந்து தீபம் ஏற்றி வந்து, கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான அடுப்பில் பற்ற வைத்து, பொங்காலை நிகழ்வைத் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, கோயிலின் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 6 கி.மீ. தூரம் கடலென குவிந்திருந்த பெண்கள் தங்கள் அடுப்பில் தீ மூட்டி, பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபட்டனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெண்கள் பங்கேற்றனர். பிற்பகல் 2.30 மணிக்கு உச்ச பூஜை நடைபெற்றது. 200-க்கும்
மேற்பட்ட நம்பூதிரிகள் வீதியெங்கும் வைக்கப்பட்டிருந்த பொங்கலில் தீர்த்தம் தெளித்தனர். அதன் பின்னர் பக்தர்கள் பொங்கல் பிரசாதத்தை, உறவினர்களுக்கு கொடுத்து, தாங்களும் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இரவு சிறுவர்களின் குத்தியோட்டமும், 10.30 மணிக்கு அம்மன் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திங்கள்கிழமை குருதி தர்ப்பணத்துடன், திருவிழா நிறைவு பெறுகின்றது. இதையொட்டி, திருவனந்தபுரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT