Published : 02 Oct 2014 01:41 PM
Last Updated : 02 Oct 2014 01:41 PM
பக்கத்தில் இருப்பவனையும் உன்னைப் போல நேசி என்றார் பரமபிதாவான இயேசு கிறிஸ்து. பக்கத்தில் இருப்பவன் என இயேசு குறிப்பிட்டதைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டனர். அவர் அருகில் இருக்கும் யூதர்களைச் சொல்கிறார் என நினைத்துக்கொண்டனர். இந்தக் குழப்பத்தால் வழக்குரைஞரான ஒருவர், இயேசுவிடம் கேட்டார், “நீங்கள் பக்கத்தில் இருப்பவனையும் தன்னைப் போல் நேசி என்கிறீர்கள். இதில் பக்கத்தில் இருப்பவன் எனத் தாங்கள் குறிப்பிடுவது யாரை? யார் அவர் ?”
இயேசு கிறிஸ்து அவருக்கு ஓர் உவமைக் கதையைச் சொன்னார்.
யூதன் ஒருவன் தன்னந்தனியாகத் தன் வழியில் பயணம் செய்துகொண்டிருந்தான். அப்போது திடீரென ஒரு கொள்ளைக் கும்பல் அவனைச் சூழ்ந்துகொண்டது. அவனைத் தாக்கி உடைமைகளைக் கைப்பற்றியது. அவனைக் குற்றுயிரும் குலையுயிருமாக விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. சாலையின் ஓரத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உதவிக்காக அவன் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது.
அப்போது அந்த வழியே ஒரு யூத போதகர் வந்தார். ஒரு மத போதகரான அவர் கண்டிப்பாக அவனுக்கு உதவியிருப்பார் என நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் அதை அவர் செய்யவில்லை. அது மட்டுமல்ல அவன் அங்கே துடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்காததுபோல பாவனைசெய்துகொண்டு கடந்து சென்றுவிட்டார். பிறகு அந்த வழியே ஒரு லேவியன் (Levite) வந்தான். லேவியன் என்பவன் யார்? அவன் மதப் பிரார்த்தனைகளில் போதகருக்கு உதவக் கூடியவன். ஆகையால் கண்டிப்பாக அவன் அந்த மனிதரை விட்டுவிட்டுப் போகமாட்டார்; உதவுவான் என எதிர்பார்ப்பீர்கள். ஆனால் அவனும் அந்த மத போதகரைப் போலக் கடந்துபோய்விட்டான்.
சிறிது நேரம் கழித்து அந்த வழியே சமாரியன் ஒருவன் வந்தான். சமாரியர்களும் யூதர்களும் ஒரே நிலப் பகுதியில் வாழ்ந்தாலும் அவர்கள் இருவரும் ‘பக்கத்தில் உள்ளவர்கள்’ அல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். சமாரியர்களும் யூதர்களும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் நீங்கள் ஏற்கனவே சென்ற மற்ற இருவரையும்போல் இந்தச் சமாரியனும் காயம்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவனுக்கு உதவாமல் கடந்துவிடுவான் என்றே நினைப்பீர்கள்.
ஆனால் மாறாக சமாரியன் அவன் மீது பரிவுகொண்டான். அவனது காயங்களுக்குக் கட்டுப்போட்டான். மெதுவாக அவனைத் தன் கழுதையின் மீது ஏற்றி அருகில் இருந்த விடுதி ஒன்றுக்குக் கொண்டுசென்றான். அவனது உடைமைகள் எல்லாம் கள்வர்களால் திருடப்பட்டுவிட்டதால் விடுதிப் பராமரிப்பாளனிடம் அவனுக்காகத் தொகையையும் செலுத்தினான். அவனை நன்றாகக் கவனிக்கும்படியும் கேட்டுக்கொண்டான்.
இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும் இயேசு கிறிஸ்து கேட்டார். “மேலே குறிப்பிட்ட இந்த மூன்று பேரில் யார் அந்த அடிபட்ட மனிதனுக்கு ‘பக்கத்தில் இருப்பவனாக’ நடந்துகொண்டது?” எல்லோருக்கும் இயேசு மேலே குறிப்பிட்ட வாசகத்தின் உண்மைப் பொருள் புரிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT