Last Updated : 10 Oct, 2014 09:40 AM

 

Published : 10 Oct 2014 09:40 AM
Last Updated : 10 Oct 2014 09:40 AM

நீங்களெல்லாம் சொப்பனம்தானோ?

மாயை என்பது என்ன? மாயத் தோற்றம் என்பது எளிமையான பொருள். இல்லாததை இருப்பதாக நினைத்து மயங்குவது என்றும் சொல்லலாம்.

அத்வைத தத்துவம் மாயையைப் பற்றிப் பேசுகிறது. நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பிரம்மமே. பிரம்மத்தைத் தவிர இரண்டாவதாக ஒன்றில்லை என்கிறது அத்வைதம். மனிதர்கள், மரங்கள், விலங்குகள், புல் பூண்டுகள், அண்ட சராசரங்கள் ஆகிய யாவும் பிரம்மமே என்கிறது அத்வைதம்.

அப்படியானால் நாம் காணும் இந்தப் பொருள்கள் எல்லாம் என்ன? வெவ்வேறு மனிதர்கள், உயிர்கள், சூரியன், சந்திரன், பிற கிரகங்கள் ஆகியவை எல்லாம் என்ன?

எல்லாம் மாயை என்கிறது அத்வைதம். “பிரம்ம சத்யம் ஜகன் மித்யா’; ஜீவோ பிரம்மைவ நாபர” என்னும் பிரபலமான சொற்றொடரை வைத்து இதை நிலைநிறுத்த முயல்கிறார்கள் அத்வைதிகள். பிரம்மமே சத்தியம். அது ஒன்றே நிஜம். இந்த உலகம் பொய். மாயை. உயிர் என்பது பிரம்மம். வேறு ஒன்று மில்லை என்பதுதான் இதன் பொருள்.

மாயையின் இரண்டு கருவிகள்

மாயையை இரண்டு விதமாகப் பிரிக்கிறது அத்வைத தரிசனம். ஒன்று ஆவரணம். இரண்டு விக்ஷேபம். உள்ளதை மறைப்பது, இல்லாத்தைத் தோற்றுவிப்பது ஆகியவையே இவை.

உள்ளது பிரம்மம். மாயை இதை மறைக்கிறது. இல்லாதது உலகம். மாயை இதைத் தோற்றுவிக்கிறது. மாயையைக் கடந்தால் பொய்யான இந்த உலகம் மறைந்து மெய்யான பிரம்மத்தின் தரிசனம் கிடைக்கும். நாமும் பிரம்மமும் வேறு என்று நினைத்த மாய எண்ணமும் மறைந்துபோகும் என்கிறது அத்வைதம். இந்த மாயையைப் போக்குவது எப்படி என்பதைப் பிறகு பார்ப்போம். இப்போது இந்த மாயையைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

எல்லாமே பொய் என்றால் நாம் காண்பது, அனுபவிப்பது எல்லாமே பொய்யா? மகிழ்ச்சி, துக்கம், வலி, பரவசம், பசி, தூக்கம் எல்லாமே பொய்யா? காணும் உலகம் பொய்யா? உயிரினங்கள் பொய்யா? சந்திர சூரியர்கள் பொய்யா?

ஆம் என்கிறது மாயாவாதம். எல்லாமே பொய்தான். அது நமக்குத் தெரியவில்லை என்கிறது.

எப்படி எல்லாமே பொய்யாக இருக்க முடியும்? தரையில் ஒரு பாம்பைப் பார்க்கிறீர்கள். அச்சம் ஏற்படுகிறது. அடுத்த நிமிடமே அது கயிறு என்று தெரிந்துவிடுகிறது. அப்போது அங்கே பாம்பு மறைந்து விடுகிறது அல்லவா? அதுபோலத்தான் இருப்பது பிரம்மம்தான் என்று உணர்ந்தால் உலகம் மறைந்துவிடும் என்கிறது அத்வைதம்.

ஒரு குடம் இருக்கிறது. அதற்குள்ளும் ஆகாசம் இருக்கிறது. அதற்கு வெளியிலும் ஆகாசம் இருக்கிறது. குடத்தின் ஓடு உடைந்தால் வெளியில் உள்ள ஆகாசமும் உள்ளே இருக்கும் ஆகாசமும் ஒன்றாகிவிடுகின்றன அல்லவா? அந்த ஓட்டைப் போன்றதுதான் மாயை. இப்படி ஒரு விளக்கமும் தரப்படுகிறது.

பெரிய பணக்காரர் ஒருவர் தூங்கும்போது பிச்சை எடுப்பதுபோலக் கனவு காண்கிறார். பசியால் அழுகிறார். வேறொருவர் மலையிலிருந்து கீழே விழுவதுபோலக் கனவு காண்கிறார். கனவு காணும்போது அது நிஜம்போல இருக்கிறது. வேதனை, அச்சம் எல்லாமே நிஜமாக இருக்கின்றன. விழித்த பிறகு அது பொய் என்று தெரிகிறது. அதுபோலத்தான் மாயை விலகியதும் உண்மை புரிகிறது. இப்படியும் ஒரு விளக்கம் அளிக்கப்படுகிறது.

ஆழத்தில் மறைந்திருக்கும் உண்மையை உணர்ந்ததும் மேற்பரப்பில் தோற்றமளிக்கும் உண்மை மறைந்துவிடுகிறது. மேற்பரப்பில் இருப்பது மாயை. கீழே இருப்பது கயிறுதான், பாம்பு அல்ல என்று உணருவதுபோல, மேற்பரப்பில் தெரிவது பொய் என்பதை அறிந்தால் பிரம்மமே நித்திய சத்தியம் எனபதையும் நாமே பிரம்மம் என்பதையும் உணரலாம் என்பதே தத்துவ தரிசனம்.

பாம்பாகத் தெரியும் கயிறை உணர அறிவும் விழிப்புணர்வும் தேவை. உலகமாகத் தெரியும் பிரம்மத்தை உணர ஞானம் தேவை. ஞானத்தின் மூலம் நித்தியமான சத்தியத்தை உணரலாம் என்கிறது அத்வைதம்.

சரி, இந்த மாயை எப்படி வந்தது? எப்போது வந்தது? ஏன் வந்தது?

(தொடர்ந்து தேடுவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x