Published : 09 Oct 2014 11:49 AM
Last Updated : 09 Oct 2014 11:49 AM

கடவுள்களின் தீவு பாலினேசியா

உலகின் நான்காவது பெரிய ஜனநாயகமாக வளர்ச்சி அடைந்துள்ள இந்தோனேசியாவின் இதயத்தில் அமைந்திருக்கிறது ‘பாலி’ என்றழைக்கப்படும் ‘பாலினேசியா’. இந்தோனேசிய மாகாணங்களில் மிகச்சிறிய பரப்பளவு கொண்ட பாலியின் மக்கள்தொகை சுமார் நாற்பது லட்சம்.

இஸ்லாமியப் பெரும்பான்மை கொண்ட இந்தோனேசியாவில், இந்துக்களின் ஆதிக்கம் ‘பாலி’, ‘லோம்போக்’ ஆகிய இரு இடங்களில் மட்டுமே தென்படுகிறது. இந்தியாவில் பின்பற்றப்படும் இந்து சமயக் கோட்பாடுகளும், புராணக் கதைகளும், கலாச்சார வேறுபாடுகளுக்கு ஏற்ப சிறுசிறு மாறுதல்களுடன் இங்கே அனுசரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வீட்டிலும் அமைந்துள்ள எளிய குடும்பச் சன்னதிகளில் தொடங்கி, நுணுக்கமான கட்டிடக் கலை அம்சங்கள் கொண்ட பழம்பெரும் இந்துக் கோயில்கள் வரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களைப் பாலியில் பார்க்கமுடிகிறது.

இந்தியாவைப் போலவே பாலியிலும் மும்மூர்த்திகளின் வழிபாடுகளே பிரதானமாக இருக்கிறது. பாலியின் முக்கியச் சாலை சந்திப்பு ஒன்றில் திரிசூலம் ஏந்தி நிற்கும் சிவபெருமானின் விஸ்தாரமான சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

உலகின் மிக உயர்ந்த விஷ்ணு சிலை

480 அடி உயர, தங்க முலாம் பூசப்பட்ட விஷ்ணு, கருட பகவான் மீது அமர்ந்திருக்கும் வண்ணம் உலகிலேயே உயரமான விஷ்ணு சிலை ஒன்று இங்கே வடிவமைக்கப்பட்டுவருகிறது. கருடனின் இறக்கையின் குறுக்களவு மட்டும் இருநூற்றுப் பத்து அடிகள்.

இந்தியப் பெருங்கடலின் பரந்த வெளிகளில் அமைந்திருக்கும் ‘தானா லாத்’ கோயிலின் புகழ் பாலி எங்கும் உரக்க ஒலிக்கிறது. சூரிய ஒளியில் நனைந்த கருமஞ்சள் வானமும், ஆழ்கடலின் கருநீலப் பரப்பும் கைக்கோர்க்கும் அந்த அழகிய தருணத்தைக் காண வெளிநாட்டினர் கூட்டம் அலைமோதுகிறது.

பாறைகளின் உச்சியில் கோவில்

நுசாதுவாவில் இருந்து ஒரு மணி நேரக் கார் பயணத்தில் அமைந்திருக்கிறது ‘உலுவாத்து’ கோவில். இந்தியப் பெருங்கடல் முத்தமிட்டுச் செல்லும் மலைப் பாறைகளின் உச்சியில் அமைந்துள்ளது, பத்தாம் நூற்றாண்டிற்கும் பழமையான இந்த இந்துக் கோயில். நேர்த்தியான கரும்பவளக் கட்டமைப்புக்கொண்ட உலுவாத்து கோவிலில், ‘சரோங்’ என்றழைக்கப்படும் வண்ணத் துண்டுகளால் கால்களையும், மார்பகங்களையும் மறைத்துச் செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

ஒவ்வொரு நாளும், வால்மீகி ராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் இருந்து ஒரு பகுதியை அப்பகுதி நாடகக் கலைஞர்கள் பாடியும், ஆடியும் அரங்கேற்றுகின்றனர். இந்தியப் பெருங்கடலை பின்னணியாகக் கொண்டு நடத்தப்படும், ‘கெச்சாக்’ எனப்படும் இந்நடன நிகழ்ச்சியைக் காண உலகெங்கிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் திரளாக வருகின்றனர்.

பாலியில் நிலைத்திருக்கும் இந்து மதம்

வணிகமயமாக்கலால் தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய இந்துத் தளங்களான போரகே (ஃபிலிப்பைன்ஸ்), ஃபுகெட் (தாய்லாந்து) போன்ற இடங்களில் இந்து சமயத்தின் தாக்கம் காலப்போக்கில் மழுங்கிவிட்டன. பாலியில் உள்ள மக்கள் பல தலைமுறைகளாக இந்த மாற்றத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தியாவிற்கும், பாலிக்கும் இடையேயான இந்தத் தொப்புள்கொடி உறவு தொடர இந்தியாவும் நினைத்தால் மட்டுமே முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x