Published : 28 Jul 2016 11:02 AM
Last Updated : 28 Jul 2016 11:02 AM
8 வது இந்து ஆன்மிக சேவை கண்காட்சி - 2016
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாறிவரும் குடும்ப மற்றும் மனிதாபிமான மதிப்பீடுகள், சேவை மனப்பான்மையின் தேவை என நவீன உலகம் சந்திக்கும் சவால்களை இந்து ஆன்மிகம் எப்படிச் சந்திக்கிறது? இதற்கான பதிலாக சென்னையில் ஆண்டுதோறும் நடக்கும் இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியை ‘ஹிந்து ஸ்பிரிச்சுவல் அண்ட் சர்வீஸ் பவுண்டேஷ’னும், ‘இனிஷியேட்டிவ் ஃபார் மாரல் அண்ட் கல்ச்சுரல் ட்ரெய்னிங் பவுண்டேஷ’னும் நடத்திவருகின்றன.
வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் 2-ம் தேதி தொடங்கவிருக்கும் இந்தக் கண்காட்சி குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எஸ். குருமூர்த்தியிடம் பேசியதிலிருந்து….
இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி, எட்டாவது முறையாக நடக்கவுள்ளது…இந்தக் கண்காட்சிக்கான தொடக்க உத்வேகம் பற்றிச் சொல்லுங்கள்…
2005-ம் ஆண்டு நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கு வசிக்கும் இந்தியர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்கர்களிடையே, இந்தியா பற்றி ஒரு தவறான எண்ணம் நிலவுவதைப் பற்றி அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்திய சமூகம் சக மனிதர்கள் மீது பரிவற்ற சமூகம் என்று வெளிநாட்டவர்கள் நினைப்பதாகச் சொன்னார்கள். இந்து மதம், வீடு பேறு சார்ந்து சிந்திக்கும் சமயமென்றும், இகவுலகம் குறித்தும் சக மனிதர்களின் வாழ்க்கை நிலை குறித்தும் சிந்தனை இல்லாதது என்ற கருத்தும் அங்கே இருக்கிறது.
இதுபோன்ற தவறான எண்ணங்களைப் போக்கச் சர்வதேச அளவிலான செயல்பாடுகள் தேவை என்ற முடிவுக்கு நானும் நண்பர்களும் வந்துசேர்ந்தோம். இந்தியாவில் முப்பது இடங்களில் பல்வேறு அறிஞர்களுடன் கூடிப் பேசினோம். 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம், மேற்கத்திய சமய அறிஞர்களும் கீழைத்தேய அறிஞர்களும் சந்தித்துப் பேசும் வகையில் ‘க்ளோபல் பவுண்டேஷன் பார் சிவிலைசேஷன்ஸ் ஹார்மனி இந்தியா’ (ஜிஎப்சிஎச்) துவக்கச் சந்திப்பை டெல்லியில் நடத்தினோம்.
இந்து, பவுத்தம், யூதம், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் கலந்துகொண்ட சந்திப்பு இது. அப்துல் கலாம், தலாய் லாமா, டாக்டர் முகமூத் மவுலானா மதானி, கார்டினல் ஆஸ்வால்ட் க்ரேசியஸ், சமணத் துறவி சுமர்மால்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர். பூஜ்ய தயானந்த சரஸ்வதியின் ஒத்துழைப்பும் தொடர்ந்து இருந்தது.
இந்தச் சந்திப்பில் என்னென்ன கருத்துகள் விவாதிக்கப்பட்டன?
நவீன உலகம் சந்திக்கும் முரண்பாடுகளைக் குறைக்கும் வலிமை மேற்கத்திய நிறுவனமயமான சமயங்களிடம் இல்லை. முரண்பாடுகளைச் சரிசெய்வதற்கான வலிமை இந்தியா போன்ற கீழை தேசங்களிலுள்ள சமயங்களிலேயே இருக்கிறது. கீழைத்தேய சமயங்களின் பங்களிப்பை மொத்த உலகத்துக்கும் அளிப்பது அவசியம் என்பதை அறிவிக்கையாகவே செய்தோம்.
அந்த நிகழ்வில் பங்குபெற்ற சகல சமய அறிஞர்களும் அதை ஒப்புக்கொண்டனர். அனைத்து சமயத்தவர்கள் மற்றும் சமூகத்தவர்களும் கலந்து பேசி, பரஸ்பரம் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் உருவாக்குவதுதான் ஜிஎப்சிஎச் அமைப்பின் நோக்கம். இந்தியாவில் இந்து சமயம் சார்ந்து நடக்கும் சேவைகளை உலகிற்கு எடுத்துக் காட்டவென்றே ஒரு பெரிய நிகழ்வை நடத்த வேண்டும் என்று முடிவுசெய்தோம்.
புட்டபர்த்தி சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் மூன்று மாவட்டங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். 1200 கோடி ரூபாய் செலவிலான திட்டம் இது. சென்னைக்குக் குடிநீர் வழங்கியது. இந்து ஆன்மிகத்தின் அடியில் மனிதாபிமானம் என்ற அம்சம் இல்லையெனில் இந்தக் காரியம் நடந்திருக்குமா? 11-ம் ஐந்தாண்டு திட்ட அறிக்கையில் சத்ய சாய் அறக்கட்டளை செய்த பணி ஒரு அரசாங்கத்தால்கூடச் செய்ய முடியாத பணி என்று பாராட்டி யிருக்கிறார்கள்.
ராமகிருஷ்ணா மிஷன், சின்மயா மிஷன் போன்றவை செய்துவரும் வேலைகள் முழுவதும் வெளியே தெரியுமா? மாதா அமிர்தானந்த மயி அமைப்பின் சார்பில் சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப் பட்டிருக்கின்றன.
இதுபோன்ற சேவைகளை வெளிப்படுத்தும் வண்ணம் 30 அமைப்புகளுடன் இணைந்து 2009-ல் தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் இது. ராமகிருஷ்ணா மிஷனும் சின்மயா மிஷனும் மிகப் பெரிய ஒத்துழைப்பை அளித்தனர். முதல் ஆண்டில் மூன்று நாள் நிகழ்வாக நடந்தது. 98 அமைப்புகள் கலந்துகொண்டன. அமைப்புகள், பார்வையாளர்களின் பெரும் ஆதரவால் இன்று 160க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பங்கேற்புடன் ஆறு நாள் கண்காட்சி நடக்கிறது.
எட்டாவது கண்காட்சியின் கருப்பொருள் என்ன?
உலக நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தைத்தான் இந்தியா கொண்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 17 சதவீத மக்கள் இங்குள்ளனர். 18 சதவீதம் கால்நடைகள் உள்ளன.
ஒரு இந்தியனின் சராசரி மாமிச உணவு நுகர்வு வருடத்திற்கு நான்கரை கிலோதான். முன்பு நான்கு கிலோ இருந்தது. அசைவம் சாப்பிடுபவர்கள்கூட இறைச்சி நுகர்வைக் கட்டுப்படுத்துவதற்காக வெவ்வேறு கிழமைகளில் அவற்றைத் தவிர்க்கும் நடைமுறை இங்கே உள்ளது. அதற்குக் காரணம் ஜீவகாருண்யம்தான்.
மகாபாரதம் விராட பருவத்தில் ஒரு வரிவரும். ‘புலி இல்லாமல் காடு இருக்காது. காடு இல்லாமல் புலி வாழாது’ என்று ஒரு வாசகம் வரும். 1900-ல் 40 ஆயிரம் புலிகள் இந்தியாவில் இருந்தன. 42 சதவீதம் காடுகள் நிறைந்திருந்தன. இப்போது 1800 புலிகள்தான் மிஞ்சியிருக்கின்றன. காடுகளின் பரப்பு 19 சதவீதமாகக் குறைந்துவிட்டது. காடுகளைப் பாதுகாக்க எத்தனையோ சட்டங்கள் உள்ளன. ஆனால் நம்மால் பாதுகாக்க முடியவில்லை. இயற்கை, காட்டைப் பாதுகாக்க உருவாக்கியிருக்கும் நடைமுறைதான் அங்குள்ள விலங்குகள்.
இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை முறை மாறிவிட்டது. விலங்குகளும் காடுகளும் குறைந்துவிட்டன. கஜபூஜை, கோபூஜை, துளசி பூஜை, கங்கா பூஜை, பூமி பூஜை எல்லாம் மனிதனுக்கும் இயற்கைக்கும் நடுவில் உறவை ஏற்படுத்துவது. குருவுக்கும் பெற்றோருக்கும் வந்தனம் செய்யும் மரபு ஏன் இந்தியாவில் இருந்தது? இதற்கும் நம் வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறது.
இந்த மதிப்பீடுகளையெல்லாம் கைவிட்டு, அம்மா, அப்பாவை மதிக்காமல் போனால், அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பொறுப்பும் அரசுக்கே வரும். இதனால்தான் அமெரிக்கா, சமூகப் பாதுகாப்புக்கும் ஆரோக்கியப் பாதுகாப்புக்கும் அதிகமாகச் செலவிடுகிறது. இதனால் 108 டிரில்லியன் டாலர் நிதிச்சுமை அதற்கு இருக்கிறது.
நம் நாட்டில் பெற்றோர் மீது குழந்தைகளுக்கு மரியாதையும் பொறுப்பும் இன்றும் இருப்பதால் அவர்களைப் பராமரிப்பதற்கான பொறுப்பு இந்திய அரசுக்கு இல்லை. ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பது கலாசாரம் தொடர்பானது மட்டுமில்லை. பொருளாதாரம் சம்பந்தப்பட்டதும்கூட.
குடும்பம் மற்றும் மனிதாபிமான மதிப்பீடுகளை வளர்த்தல், தேசபக்தியை ஊட்டுதல், சூழலியல் பாதுகாப்பு, வளர்ச்சி குன்றாச் சுற்றுச்சூழல் பேணுதல், பெண்மையைப் போற்றுதல், வனம் மற்றும் வனவுயிர்கள் பாதுகாப்பு ஆகிய ஆறு அம்சங்களை இணைத்துக்கொண்டு இந்தக் கண்காட்சியை நடத்திவருகிறோம்.
கண்காட்சிக்கு அரசு ஆதரவு உள்ளதா?
திருப்பதி திருமலா தேவஸ்தானம், தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக அறநிலையத் துறையினர் இந்தக் கண்காட்சியில் சேர்ந்துள்ளனர். பெருநிறுவனங்களும் நிதியளித்துள்ளனர். பல்வேறு நலப்பணிகளில் ஈடுபடும் சாதிய அமைப்புகளும் எங்களுடன் இணைந்துள்ளனர். ஆனால், அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி உட்பட வேறு எந்த உதவியையும் இந்த நிகழ்விற்காக நாங்கள் பெறவில்லை. காவல்துறைப் பாதுகாப்பை மட்டுமே அரசாங்கம் எங்களுக்குத் தருகிறது.
ஒவ்வொரு சமூகத்துக்கும் இடையிலிருக்கும் வேறுபாடுகளைத் தாண்டி, ஆன்மிகத்தை மையமாக வைத்து உயர்நிலையில் இணக்கமான முயற்சிகளை முன்னெடுப்பதற்குதான் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம். எல்லாச் சமூகத்தவரிடமும் இருக்கும் உயர்ந்த சிந்தனையைத் தூண்டி அவர்களை இணைப்பதுதான் எங்கள் நீண்டகால இலட்சியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT