Published : 10 Apr 2014 02:01 PM
Last Updated : 10 Apr 2014 02:01 PM
பங்குனி உத்திரம்! நெய்வேலி நகரில் நடைபெறும் விமரிசையான ஒரு திருவிழா. பழமை வாய்ந்த வில்லுடையான்பட்டி சிவசுப்ரமணியர் ஆலயத்தில் நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பக்தர்கள் காவடியும் பால்குடமும் சுமந்து வந்து காணிக்கை செலுத்துவது காலம்காலமாக நடந்துவருகிறது.
அதிகாலை முதலே பக்தர்கள் சாரை சாரையாக காவடி எடுத்துவருவதையும், பால்குடம் சுமந்துவரும் சிறியவர் முதல் முதியவர்களையும் காண, திரளும் கூட்டம் கட்டுக்கடங்காது. கட்டுக்கடங்காத கூட்டத்தினர் இளைப்பாற நீர் மோர் பந்தல்களும், பசியாற அன்னதானமும் ஏராளமாக நடைபெறுவதும் இத்திருவிழாவின் சிறப்பு.
இதைவிட மேலும் ஒரு சிறப்பு என்னவெனில் ஒரு மத்தியப் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் இத்திருவிழாவை முன்னின்று நடத்துவது தான்! அத்தகைய சிறப்புமிக்க திருவிழாவைக் காண கடலூர் மாவட்ட மக்கள் ஏப்ரல் 13-ம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர்.
தலத்தின் விசேஷம்
இத்தலத்தின் விசேஷம் என்னவெனில், முருகப்பெருமான் தனக்குரிய வேலாயுதத்தைத் திருக்கரத்தில் கொள்ளாது, வேடர் உருவத்தில் வில்லும் அம்பும் உடையவராய், இடுப்பில் சல்லடத்துடன், வள்ளி தெய்வயானை இருவரும் பக்கத்தில் நிற்க திருக்காட்சி அளித்து அருள்பாலிப்பது ஒரு அற்புதக் காட்சி. ஸ்ரீ அருணகிரி நாதர், திருப்புகழில் வேண்டியதால், முருகப்பெருமான் தன் பன்னிரு கரங்களில் வில்லையும் ஒரு ஆயுதமாகக் கொண்டுள்ளார் என்பதை அறிகிறோம்.
இத்தலத்தின் விசேஷம் என்னவெனில், முருகப்பெருமான் தனக்குரிய வேலாயுதத்தைத் திருக்கரத்தில் கொள்ளாது, வேடர் உருவத்தில் வில்லும் அம்பும் உடையவராய், இடுப்பில் சல்லடத்துடன், வள்ளி தெய்வயானை இருவரும் பக்கத்தில் நிற்க திருக்காட்சி அளித்து அருள்பாலிப்பது ஒரு அற்புதக் காட்சி. ஸ்ரீ அருணகிரிநாதர், திருப்புகழில் வேண்டியதால், முருகப்பெருமான் தன் பன்னிரு கரங்களில் வில்லையும் ஒரு ஆயுதமாகக் கொண்டுள்ளார் என்பதை அறிகிறோம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இம்மாவட்டமானது அடர்ந்த பெருங்காடாக இருந்த போது, அழகே உருவான முருகன் கையில் வில்லும், அம்பும் ஏந்தியவராய் வேடர் கோலத்தில் காட்சியளித்திருக்கிறார் போலும்.
ஸ்வாமி வளையாபதி சாந்தயோகி என்பவர்அருட்காட்சி ஈந்தருளிய ‘முருகனின் அடிதொழுது’ என்ற நூலில், சுப்ரமணியர் வள்ளியை மணம் செய்துக் கொள்ளச் சென்றபோது, தேவர்களும், முனிவர் முதலானவரும் தேடி, சிதம்பரத்திலும் காணாது துதிக்க வடமேற்கே இரண்டரை காத தூரத்தில் நாம் காட்சித் தருவோம் என்று திருவாய் மலர்ந்தருளினார்.உடனே இடும்பன், வீரன், ஐயனார் மூவரும் புறப்பட்டு வர ஒரு அழகிய சோலையின் இடையே ஜோதி வடிவைக் கண்டுகளித்தனர். பின்பற்றி வந்த சப்த கன்னிமார், முனிவர்கள், தேவர்கள், பூசாரிக்குப்பம் என்ற இடத்திலிருந்தே தரிசனம் செய்தார்கள். தேவர்களும், முனிவர்களும் வேண்ட, வள்ளி தெய்வானையுடன் அழலுருவில் காட்சியளித்தார். வில்லும் அம்பும் கொண்டு காட்சியளித்ததால், இத்தலம் வில்லுடையான் பட்டி என பெயர் பெறும் என அருளினார். பின்னர் வேலாயுதத்தை ஊன்றி ஒரு நீரோடை உண்டாக்கி, இது சரவண தீர்த்தமாகும் எனவும் திருவாய் மலர்ந்தார். அதனால்இப்போது வேல் ஊன்றினான் பட்டி எனவும், அதுவே பின்னர் மருவி வேலுடையான்பட்டி எனவும் பெயர் வழங்கி வருகிறது. பிறகு ஒரு கல்லுருவமாய் மாறி பூமியின் கண் மறைந்தருளினார்.
வரலாறு
சித்ர காடவ பல்லவ அரசனுடைய பசுக்கள் பால் கறாவமையைக் கண்ணுற்று, காட்டின் நடுவில் பசுக்கள் முருகப்பெருமான் வள்ளியம்மை, தெய்வயானை சமேதராய் மறைந்த இடத்தில் தாமே பால் சொரிவதைக் கண்டு, அவ்விடத்தை மண் வெட்டியால் தோண்டிப் பார்த்தார்.அதில் ஒரே கல்லில் வேடர் கோலத்தில் கையில் வில்லும், அம்பும் கொண்டு இரு தேவிகளுடன் முருகப்பெருமான் இருப்பதைக் கண்டு அதிசயித்துள்ளார் சித்ர காடவ பல்லவர். மண்வெட்டியால் வெட்டிய போது, தோளின் மேல் மண்வெட்டி பட்டு, ரத்தம் கசிந்த இடம், இன்றும் யாவரும் காணத்தழும்பு உள்ளது.அன்றிரவு கனவில் கோயில் கட்ட உத்தரவு பெற்றவராய், பெருமகிழ்வோடு தற்போதுள்ள கோயிலைப் பெரியதாகத் திட்டமிட்டு திருப்பணி செய்து வழிபட்டு வரலாயினர்.
நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி அருள் பாலித்த இம்மாவட்டத்தில் நடராஜப் பெருமான் திருநடனம் புரிகின்ற லோகமையமாக விளங்கும் சிதம்பரத்திற்கும், ஐம்பூதங்களில் நடுவாகிய ஜோதி ரூபத்தில் ஞானிகள் கண்டு தரிசிக்கத் தக்கதாகும். சத்திய ஞானசபை விளங்கும் வடலூருக்கும் அருகே அமைந்துள்ள வேலுடையான்பட்டி எனும் இத்தலத்தில் இறைவன் வேட உருவத்தில் கிரியா சக்தி, இச்சா சக்தியாகிய தெய்வயானை வள்ளியுடன் அருள் பாலிக்கின்றன நிலை, நெய்வேலியிலிருந்து உலகம் உய்ய உழைக்கும் பலவிதத் தொழில் ஞானம் நிறைந்த அடியார்களை மாயையிலிருந்து விடுவித்து ஆட்கொள்ளும் பொருட்டே ஆகும் என நம்புவோமாக.
அணிவகுக்கும் காவடிகள்
பங்குனி உத்திரத்தன்று இக்கோயிலுக்கு காவடி எடுத்துவரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரங்களைத் தொடும். இது தவிர்த்து பால்குடம் சுமந்துவரும் பெண்களைப் பார்க்கும்போது கடல்போலத் தோற்றமளிக்கும். இவை ஒவ்வொருவரும் தங்களது குறைதீர்த்த வில்லுடையான்பட்டி சிவசுப்ரமணியனுக்குச் செய்யும் நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT