Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM
பக்தர்களுக்கு அருள் பாலிப்பதன் மூலம் பல வித விந்தைகளைச் செய்வது பெருமாளின் திருக்குணம். ஸ்ரீநரசிம்ம அவதாரத்தினை நிகழ்த்தி பக்தனுக்கு அருளியவர். இந்தக் கலியுகத்திலும் பக்தனுக்குக் காட்சி அளிப்பதில் பெருமாள் சளைத்தவரல்லர் என்பதற்கு வைணவ குரு, ஆசார்யன் ஸ்வாமி தொட்டாச்சாரியாருக்கு சோளிங்கரில் அளித்த காட்சியே சாட்சி. தொட்டாச்சார்யார் வம்சாவளியில் 23ஆவது பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீ கே.கே.சி.பி. ஸ்வாமி சிங்கராச்சார், வழிவழியாக வழங்கிவரும் அந்த நம்பிக்கையைச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார்.
ஸ்வாமி தொட்டாச்சார்யார் என்பவர் அக்காரக்கனியாக (இனிப்புச் சுவையுடைய பழம் போன்ற) போற்றப்படும் ஸ்ரீ யோக நரசிம்மருக்குப் பூஜைகள் செய்துவந்தார். பெருமாளிடம் பக்தி கொண்ட அவர் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம். ஒரு முறை பிரம்மோற்சவத்திற்குச் செல்ல இயலவில்லை. மூன்றாம் நாள் கருட சேவை உற்சவத்தன்று ஸ்வாமி தொட்டாச்சார்யார் சோளசிம்மபுரம் என்ற தற்போதைய சோளிங்கரில் இருந்தவாறே ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார்.
இதே நேரத்தில் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கருட வாகன ரூபமாகத் திருவீதி உலா செல்வதற்காகக் கோயில் வாயிலுக்கு வந்தார். சோளிங்கரில் இந்த ஐந்து சுலோகங்களைப் பாடி முடிக்கவும், காஞ்சியில் கோயில் வாயிற் கதவு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது.
மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளிங்கருக்கு எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்தார். இன்றும் இது ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை என்று காஞ்சியில் வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் விமானத்திற்குப் புண்ணிய கோடி விமானம் என்று பெயர். மூலவரின் திருநாமம் வரதராஜப் பெருமாள்.
பெருமாள் தன் ஒரு கையில் சக்கரமும், மறுகையில் சங்கும், மூன்றாம் கையில் தாமரையும் நான்காம் கையில் கதையுடனும் கருட வாகனத்தில் மூலவராகவே காட்சி அளிக்கிறார். அவசர அவசரமாகத் தனது பக்தன் தொட்டாச்சார்யாருக்குக் காட்சியளிக்க வந்ததால், ஒரு திருவடி கருடன் தோளிலும் மறு திருவடி கருடனின் கையிலும் இருக்கும்படியாகக் காட்சியளிக்கிறார். கருடனோ இப்பெருமாளை வணங்கினால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதைத் தன் கையில் உள்ள ஞான முத்திரையால் அறிவிக்கிறார்.
மூலவராகவும், உற்சவராகவும் இருக்கின்ற கருடன் உடலில் எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்டு காட்சியளிக்கிறார். கருடாழ்வாரின் தலைக்கு மேலொரு நாகம், காதிற்கு ஒன்று வீதம் இரு நாகம், இரு கையிலும் வளையலாக இரண்டு, மார்பில் ஒன்று, தொடையில் ஒன்று பாதத்தில் ஒன்று என மொத்தம் எட்டு நாகங்கள்.
காலையில் கருட வாகனத்துடன் பெருமாளைச் சேவித்தால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் சித்திக்கும் என்று புராணம் கூறுகிறது. சோளிங்கரில் இந்தப் பெருமாளை வணங்கினால் குழந்தைப் பேறு, திருமண பாக்கியம், சர்ப்ப தோஷ நிவர்த்தி ஆகிய நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம். இத்திருக்கோயில் சோளிங்கர் தக்கான் குளக்கரையில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் திருப்பணியை ஸ்வாமி தொட்டாச்சார்யார் வம்சத்தினர் தொடர்ந்து ஐந்து நூற்றாண்டுகளாகச் சிறப்புறச் செய்துவந்ததாகத் தெரிவித்த இப்பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீமுதலியாண்டான் ஸ்வாமி, செண்டை மேளம் முழங்க பெருமாள் திருமாசி உத்ராட உற்சவத்தைத் தற்போது இளைஞர்கள் பங்கு கொண்டு செவ்வனே நிகழ்த்துகிறார்கள்” என்றார்.
இந்த உற்சவம் இம்மாதம் 17ஆந் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடந்தது. இதில் நிறைவு நாளான புதனன்று அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீஸ்வாமி தொட்டாச்சாரியார் திருக்கோயிலில் இருந்து பல்லக்கில் புறப்பாடு கண்டருளி திருமலைக்கு (பெரியமலை) எழுந்தருளித் தாயார், பெருமாள் சந்நிதிகளில் மங்களாசாசனம் செய்தருளினார். பெருமாள் சந்நிதியில் திருப்பாவை சாற்றுமறை தீர்த்த விநியோகம் நடைபெற்றது.
பின்னர் பெருமாளுடன் அலங்காரத் திருமஞ்சனம், திருமொழிச்சாற்று, தீர்த்த விநியோகம் ஆகியவை நடைபெற்றன. மாலை 5 மணிக்கு ஸ்ரீதக்கானுடன் நான்கு வீதிப் புறப்பாடும், இரவு ஆஸ்தான மண்டபத்தில் திருவாய்மொழிச் சேவை, சாற்றுமறை தீர்த்த விநியோகம் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT