Last Updated : 29 Dec, 2016 10:27 AM

 

Published : 29 Dec 2016 10:27 AM
Last Updated : 29 Dec 2016 10:27 AM

பைபிள் கதைகள் 33: பாறையிலிருந்து பீறிட்ட தண்ணீர்!

கடவுள் அளித்த தண்டனை காரணமாக இஸ்ரவேலர்கள் நாடின்றி 40 ஆண்டுகள் பாலைவனத்தின் பல்வேறு இடங்களில் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்துவந்தனர். இவ்வாறு 39 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இத்தனை ஆண்டுகளாகத் தம் மக்களுக்குப் பனியைப் போன்ற மன்னா உணவைப் பொழியச் செய்து அவர்களைப் பட்டினியிலிருந்து காத்திருந்தார் கடவுள். தன்னுடன் பேசவும் வழிகாட்டுதல் பெறவும் ஆசாரிப்புக் கூடாரம் அமைத்து புனிதம் பேணக் கடவுளே கற்றுக்கொடுத்திருந்தார். அந்தக் கூடாரத்தின் மீது பகலில் வெள்ளை மேகமாகவும் இரவில் நெருப்புத் தூணாகவும் இறங்கிவந்து அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். பாலைவனத்தின் கடும்வெப்பம், கடுங்குளிர், கல், முள் ஆகிய எதனாலும் அவர்கள் பாதிக்காத வண்ணம் காத்து வந்த கடவுள், இஸ்ரவேலர்களின் ஆடைகள் இத்தனை ஆண்டுகளை பழுதாகிக் கிழிந்துவிடாத அற்புதத்தையும் செய்தார்.

குடிக்கத் தண்ணீர் இல்லை

கடவுள் அளித்த தண்டனை முடியவிருக்கும் 40-வது ஆண்டின் தொடக்கத்தில் பாலைவனத்தில் காதேஸ் என்ற இடத்துக்கு மீண்டும் வந்து முகாமிட்டுத் தங்கினார்கள். சுமார் 39 ஆண்டுகளுக்கு முன் கானான் நாட்டைக் குறித்து உளவறிந்து வர பன்னிரண்டு வேவுக்காரர்களை அனுப்பி வைத்தபோது இஸ்ரவேலர்கள் தங்கியிருந்தது இதே காதேஸில்தான். இம்முறை காதேஸில் முகாமிட்டபோது மோசேயின் அக்காவாக மிரியாம் இறந்து போனார். மிரியாமின் இறப்பு அவர்களை வாடச் செய்தது.

இப்போது காதேஸில் அவர்களுக்குப் புதிய பிரச்சினை தோன்றியது. யாருக்கும் குடிக்கத் தண்ணீர் இல்லை. எனவே மக்கள் மோசேவிடம் கூட்டமாகச் சென்று முறையிட்டார்கள், “நாங்கள் எகிப்திலேயே செத்துப்போயிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். தண்ணீர் இல்லாத இந்தப் பாலைக்கு ஏன் எங்களை நடத்திக்கொண்டு வந்தீர்? இங்கு தானியமோ திராட்சையோ, மாதுளையோ ஏன் அத்திப் பழங்களோ கூட இல்லை.” என்று கண்ணீர் ததும்பக் கூறினார்கள்.

கடவுளின் வார்த்தையை மறந்த மோசே

இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடவுளின் கருணையை எதிர்பார்த்து ஆசரிப்புக் கூடாரத்துக்குச் சென்று மோசேவும் ஆரோனும் முழந்தாளிட்டனர். அப்போது இறங்கிவந்த கடவுள், “இந்த மக்களைக் கூட்டமாக அழைத்துச் சென்று இங்கேயிருக்கும் கற்பாறையின் முன் நிறுத்து. பின்னர் கற்பாறையைப் பார்த்துப் பேசு. அப்போது மக்களுக்கும் அவர்களுடைய எல்லா விலங்குகளுக்கும் போதுமான தண்ணீர் அதிலிருந்து பீறிட்டு வரும்” என்று மோசேயிடம் கூறினார். இதைக் கேட்டு நிம்மதியுடன் வெளியே வந்தபோது மோசேயின் முகத்தை மக்கள் ஆவலுடன் நோக்கினார்கள்.

மக்களைக் கற்பாறைக்கு அழைத்துச்சென்ற மோசே “ நானும் ஆரோனும் இந்தக் கற்பாறையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் வரவழைத்துக் காட்டட்டுமா?” என்று கேட்டார். பின்னர் மக்களின் பதிலுக்குக் காத்திருக்காமல் மோசே ஒரு கோலினால் அந்தக் கற்பாறையை இருமுறை அடித்தார். இப்போது அந்தக் கற்பாறையிலிருந்து மலையருவி ஒன்றின் ஊற்றுக்கண்போல தண்ணீர் பீய்ச்சி அடித்து ஓடத் தொடங்கியது. கடவுளின் கருணை தண்ணீராய் ஊற்றெடுத்துவருவதைக் கண்ட மக்கள் அனைவரும் அள்ளிப்பருகி நிம்மதியடைந்தனர். தங்களின் விலங்குகளுக்கு வேண்டியமட்டும் தண்ணீர் காட்டினர்.

கண்களை மறைத்த தற்பெருமை

கடும் கற்பாறையிலிருந்து தண்ணீரை வரவழைத்தவர் கடவுளாயிருக்க, மோசேவும் ஆரோனும் ஒருகணம் நிலைதடுமாறிப்போய் கற்பாறையிலிருந்து தாங்களே தண்ணீரை வரவழைக்கப் போவதாக மக்களிடம் சொன்னது கடவுளை மிகவும் கோபப்படுத்தியது. உண்மையை மக்களிடம் சொல்லாத அவர்களைக் கடவுள் தண்டித்தார். “நீங்கள் இருவரும் என் மக்களுக்குத் தலைமை தாங்கி கானான் நாட்டுக்குள் அவர்களை அழைத்துப்போக மாட்டீர்கள் “ என்று கூறி அவர்களைக் கடிந்துகொண்டார். கடவுளை மீறிச் செயல்பட்டதற்காக மோசேயும் ஆரோனும் மனம் வருந்தினர்.

ஆரோனின் மறைவு

பின்னர் காதேஸ் பாலைவனப் பகுதியிலிருந்து கிளம்பிய இஸ்ரவேலர்கள் ‘ஓர்’ என்ற மலைப்பகுதிக்கு வந்து அதன் உச்சியில் முகாமிட்டிருந்தனர். அந்த நாட்களில் 123 வயதை எட்டியிருந்த ஆரோன் இறந்துவிடுகிறார். மிரியாமைத் தொடர்ந்து வந்த ஆரோனின் இழப்பு அவர்களை மேலும் அதிகமாக வாட்டியது. அவருக்காக முப்பது நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள். தங்களுக்கான அடுத்த தலைமை குருவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதனால் கடவுள் கூறியிருந்தபடி ஆரோனுடைய மகன் எலெயாசாரை தங்களின் பிரதான ஆசாரியாராகத் தேர்ந்தெடுத்தனர். சிறிது காலத்தில் பழையபடியே நம்பிக்கையிழந்த இஸ்ரவேல் மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பழையபடியே பேசத் தொடங்கினார்கள். “இங்கே தண்ணீரும் இல்லை; உணவும் இல்லை. இனி மன்னாவை மட்டுமே எங்களால் சாப்பிட்டுக்கொண்டிருக்க முடியாது. மன்னாவைக் கண்டாலே எங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது” என்று வெறுப்புடன் பேசத் தொடங்கினார்கள். சக்தியும் ஆற்றலும் கொடுத்துவந்த மன்னா உணவானது கடவுள் வானத்திலிருந்து தன் அருளைப் போல் பொழியச் செய்வது என்ற உண்மையை அவர்கள் மறந்தேபோனார்கள்.

படையெடுத்த பாம்புகள்

நன்றியின்மையின் மொத்த உருவமாகப் பெரும்பாலானவர்கள் மாறிக்கொண்டிருந்தார்கள். எனவே தன்மீது நம்பிக்கையில்லாதவர்களைத் தண்டிக்க கடவுள் பாம்புகளை அனுப்பினார். பாம்புகளிடம் கடிபட்ட இஸ்ரவேலர்களில் பலர் மாண்டுபோனார்கள். பாம்புகளின் படையெடுப்பைக் கண்ட பிறகே இது கடவுளின் கோபம் என்று உணர்ந்த மக்கள் மோசேயிடம் ஓடிவந்தனர்.

“ நாங்கள் கடவுளுக்கும் உமக்கும் எதிராகப் பேசிப் பாவம் செய்தோம். இப்பொழுது இந்தப் பாம்புகளை நீக்கிப்போடும்படி கடவுளிடம் எங்களுக்காகப் பரிந்துபேசும்” என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார்கள். எனவே மோசே ஜனங்களுக்காக வேண்டிக்கொண்டார். அப்போது கடவுள் மோசேயைப் பார்த்து “வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒரு பாம்பை கம்பத்தில் பொருத்தி வை. நான் அனுப்பிய பாம்புகளால் கடிபட்டவர்கள் அந்த வெண்கலப் பாம்பை ஏறெடுத்துப் பார்க்கட்டும். அவ்வாறு செய்யும்போது அவர்கள் குணமடைவார்கள்” என்றார். மோசேவும் அவ்வாறே செய்தார். பாம்புகளால் கடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்கள் வெண்கலப் பாம்பைக் கண்டு உயிர் பிழைத்தனர்.

(பைபிள் கதைகள் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x