Published : 14 Jul 2016 11:59 AM
Last Updated : 14 Jul 2016 11:59 AM
குருபூர்ணிமா ஜூலை 17:
கடந்த 13 ஆண்டுகளாக சென்னை தி.நகரில் சரோஜினி தெருவில், ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியான முறையில் இயங்கி வருகிறது ஸ்ரீசாய்பாபா பிரார்த்தனை மையம். இங்கே சாஸ்திர சம்பிரதாயங்கள் எதுவும் இன்றி, முழுக்க முழுக்க ஆத்ம நிவேதனத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. தினமும் காலையில் பக்தர்கள் தாங்களே செய்யும் ‘துனி பூஜை’ மற்றும் தினசரி நான்கு வேளை நடக்கும் கூட்டுப் பிரார்த்தனை ஆகியவை இங்கே தனிச் சிறப்புடையவை. எப்போதும் பூரண அமைதி நிலவும் இம்மையத்தில், ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ (உலகில் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்) என்ற மந்திரமே அடிநாதமாக ஒலிக்கிறது.
கடவுள் தங்களுக்குக் கொடுத்திருக்கும் நல்ல விஷயங்களுக்கு நன்றி கூறுதல், தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுதல், மற்றவர்களுக்காகப் பிரார்த்தித்தல், தங்கள் பிரார்த்தனைகளை பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்து உள்ளம் உருக அவரை வேண்டுதல் ஆகிய நான்கு நிலைகளில் இங்கே பிரார்த்தனை நடப்பது வேறெங்கும் காண முடியாத மற்றொரு சிறப்பு. இம்மையத்தின் கூட்டுப் பிரார்த்தனையால் பலன் பெற்றவர்கள் பலர். திருமணம், குழந்தைப் பேறு, வியாதிகள் நீங்கி உடல் ஆரோக்கியம், நல்ல வேலை, வறுமை நீங்கி செல்வம், குடும்பத்தில் ஒற்றுமை, கல்வியில் வெற்றி போன்ற பல நன்மைகளைக் கூட்டுப் பிரார்த்தனை மூலம் பக்தர்கள் பெற்றிருப்பது, பாபாவின் அருளுக்கும் அன்புக்குமான சான்று!
பிரார்த்தனை மட்டுமன்றி வேறு பல நல்ல சேவைகளையும் இம் மையத்தின் அன்பர்கள் விளம்பரமின்றிச் செய்துவருகின்றனர். தினசரி சுவையான நைவேத்யப் பிரசாதம் தவிர்த்து அடிக்கடி அன்னதானம், ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவித் தொகை, எளிய முதியோருக்கு உதவித் தொகை, ஸ்ரீசாயி சத்சரிதம், சுந்தர காண்டம், கந்தசஷ்டி கவசம் போன்ற நூல்களின் இலவச விநியோகம், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் உணவு விநியோகம், இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்குதல், ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ உதவி, கோடையில் நீர் மோர் பந்தல், தேர்வுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து கல்வி உபகரணங்கள் வழங்குதல், மிகவும் ஏழைப் பெண்களுக்குத் திருமணத்துக்குப் பொன்னில் மாங்கல்யம் அளித்தல், கருவுற்ற ஏழைத் தாய்மார்களுக்கு இலவச வளைகாப்பு, தெருநாய்களுக்கு உணவு மற்றும் மருத்துவ சேவைகள் என இந்தச் சேவைகள் எண்ணற்றவை.
பக்தர்கள் மனமுவந்து அளிக்கும் காணிக்கைகளைத் தவிர, இங்கே பூஜைகளுக்கோ, வழிபாட்டுக்கோ எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துப் பண்டிகைகளும் ஷீர்டி பாபாவின் முக்கியத் திருநாள்களும் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வாரம் ஏழு நாட்களும் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், அனுமன் சாலீஸா போன்ற பாராயணங்களும் பௌர்ணமி தோறும் சத்யநாராயண பூஜையும் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.
குருபூர்ணிமா சிறப்பு நிகழ்ச்சிகள்
அனைத்து குருமார்களுக்கும் புஷ்பாஞ்சலி செய்து ஆராதனை
நாள்: 17-7-2016, ஞாயிற்றுக்கிழமை
இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, தண்டபாணி தெரு, தி. நகர், சென்னை & 17.
நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
ஸ்ரீசாயியின் குரு பூர்ணிமா நாள்
நாள்: 19-7-2016, செவ்வாய்கிழமை
இடம்: தருமபுர ஆதீன பிரசார நிலையம் (ஜாய் ஆலுக்காஸ் எதிரில்), வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை.
நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை.
ஸ்ரீசாயிபாபாவால் ஆசீர்வதிக்கப்பட்ட ராமர் மற்றும் ஆஞ்சநேயர் திருவுருவங்கள் பதித்த செப்புக்காசு, சாயியின் கப்னி (அங்கி), சிலிம் (புகை பிடிக்கும் குழல்) போன்ற புனிதப் பொருட்கள், ஷீர்டியிலிருந்து கொண்டுவரப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT