Published : 27 Mar 2014 09:21 AM
Last Updated : 27 Mar 2014 09:21 AM
வட ஸ்பெயின் நாட்டில் உள்ள லயோலாவில் 1491ஆம் ஆண்டு தனது பெற்றோரின் பதின்மூன்று குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் இனிகோ டி லயோலா. இனிகோவைப் பெற்ற தாயார், பிறந்த சில நாட்களிலே காலமாகிவிட்டதால் கொல்லர் ஒருவரது மனைவியால் வளர்க்கப்பட்டார். அரண்மனையில் கிட்டிய எடுபிடி ஊழியத்திற்குப் பின் பதினேழாவது வயதில் ஸ்பெயின் நாட்டு ராணுவத்தில் பணியாற்ற இணைந்தார். ஏதாவது சாதிக்க வேண்டும், பெரும் புகழ் ஈட்ட வேண்டும் என்னும் பேரார்வம் அவருக்குள் தகித்துக்கொண்டே இருந்தது.
இனிகோ யுத்த உத்திகளில் தேர்ந்து விளங்கினார். 1521ஆம் ஆண்டு, முப்பதாவது வயதில் ஸ்பெயினின் கோட்டை நகரான பம்பலோனாவை உரிமை கொண்டாடி பிரெஞ்சுப் படைகள் போரிட்டுத் தாக்க முற்பட்டன. படை பலம் போதாது என்பதால் ஸ்பானியத் தளபதி சரணடைய வேண்டும் எனத் தீர்மானத்தார். அப்போது இனிகோ மட்டும் ஸ்பெயினின் மானம் காக்கப் போரிட்டே தீர வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்து களம் கண்டார். போர்க்களத்தில் பீரங்கிக் குண்டுகள் தாக்கியதில் அவரது ஒரு காலில் எலும்பு முறிவும் மற்றொரு காலில் பலத்த காயமும் ஏற்பட்டது. காயம் பட்ட அவர் களத்திலே வீழ்ந்தார். ஸ்பெயினும் அப்போரில் வீழ்ந்தது. அவரது போர்த்திறம் கண்ட பிரெஞ்சுப் படையினர் அவரைச் சிறையில் வைப்பதற்குப் பதிலாக பம்பலோனா அரண்மனையில் வைத்து சிகிச்சை அளித்தனர்.
காயம் பட்ட அவரது கால்கள் முழுமையாய் குணம் அடையவில்லை. மீண்டும் அவரது கால்களை உடைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுவும் மயக்க மருந்து இல்லாமலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதால் கொடிய வலியால் அவதிப்பட்டார். அதனால் மரணம் அவரை நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஜூன் 29ஆம் நாளில் புனிதர்களான ராயப்பர், சின்னப்பர் திருவிழாவன்று அதிசயிக்கதக்க வகையில் தனது ரணங்கள் குணமாகத் துவங்கியதை உணர்ந்தார். பூரண குணம் பெற்றார் என்றாலும் அவரது கால்களில் ஒன்று, மற்றதைவிட உயரம் குறைவாகவே ஆகிவிட்டது.
பம்பலோனா அரண்மனையில் தொடந்து ஓய்வில் இருந்தார். கதைகள் வாசிக்கும் பழக்கம் கொண்ட இனிகோ வாசிப்பதற்குப் புத்தகம் கேட்டார். அப்போது அவருக்கு தரப்பட்ட நூல்களில் ஒன்று லுடோல்ப் என்பார் எழுதிய கிறிஸ்துவின் வரலாறு என்னும் நூலாகும். அதைப் போலவே புனிதர்களின் வரலாறுகளையும் வாசித்தறிந்தார். வாழ்க்கை திசை மாறிற்று. கொதித்துக் கொந்தளித்துக்கொண்டிருந்த வாழ்க்கையில் குளிர் தென்றல் வீசுவதுபோல் உணர்ந்தார். இனிகோ மெல்ல மெல்ல மாறி இக்னேசியஸ் ஆனார் . தமிழில் புனிதர் இஞ்ஞாசியார் என்று அன்புடன் இவர் அழைக்கப்படுகிறார்.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு பெருமானுக்கு ஏற்பட்ட ஐந்து காயங்கள் போலவே தன்னிலும் காயங்கள் வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிப் பெற்றுகொண்ட அசிசியின் புனிதர் ஐந்து காய பிரான்சிஸ் போல இயேசு கிறிஸ்துவுக்காகத் தன்னையும் அர்பணித்துக்கொள்ளத் தீர்மானித்தார். 1522 மார்ச் 25 அன்று மோன்சரட் என்னும் இடத்தில் அமைந்துள்ள அன்னை மரியாளின் தேவாலயம் சென்று தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டினார். தனது போர் வாள் மற்றும் ஆயுதங்களை அன்னையின் பீடத்திற்கு முன் துறந்தார். வெளியில் வந்து தனது விலையுயர்ந்த ஆடைகளை ஓர் ஏழைக்குத் தந்தார். முரட்டுத் துணிமணிகளை அணியத் துவங்கினார். இவ்வாண்டில் குழந்தை இயேசுவையும் அன்னை மரியாளையும் புனிதர் இஞ்ஞாசியார் காட்சியில் கண்டார்.
மோன்சரட்டிலிருந்து 30 மைல் தொலைவிலுள்ள பார்சிலோனா நோக்கித் தனது பயணத்தைத் தொடந்த புனிதர் இஞ்ஞாசியார் மான்ரிசா என்னும் நகருக்கு வெளியே ஒரு குகையில் தங்கினார். பத்து மாதங்களுக்கு மேல் அங்கே ஜபத்தில் ஒன்றியிருந்தார். ஒரு யாத்ரிகர் விடுதியிலும் பணிபுரிந்தார்.
33ஆம் வயதில் குருத்துவக் கல்வி பெறச் சென்றார். லத்தீன் மொழி தெரியாத காரணத்தால் அதைத் துவக்க நிலையில் இருந்தே கற்றார். 1538இல் குருத்துவப் பட்டம் பெற்று அவ்வாண்டின் கிறிஸ்துமஸ் அன்று காலையில் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். 1540 செப்டம்பர் 27இல் அப்போதைய போப்பாண்டவர் மூன்றாம் சின்னப்பர் புனிதர் இஞ்ஞாசியாரின் இயேசு சபைக்கான முறைப்படியான அங்கீகாரத்தை வழங்கினார். ஆம்! ஒரு சிறு பொறி கத்தோலிக்கத் திருச்சபையின் மிகப் பெரிய குருத்துவப் பணித் தளமாகவும், உலகெங்கிலும் கல்வி மற்றும் அறப்பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் இயேசு சபை என்னும் துறவற அமைப்பு உருவாகவும் காரணமாயிற்று.
‘ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக்கொண்டாலும் தனது ஆன்மாவிற்குக் கேடு வருவித்துக்கொண்டால் அதனால் அவனுக்கு வரும் பயன் என்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதை கொடுப்பான்?' என்னும் கிறிஸ்து பெருமானின் பொன்மொழிதான் புனிதர் இஞ்ஞாசியாரின் வாழ்க்கை வழித்தடத்தில் இத்தகைய மகத்தான மாற்றத்திற்கு வித்திட்டது என்பது ஒரு செவிவழிச் செய்தி. 1556, ஜூலை 31 அன்று அவர் இறைவனடி சேர்ந்தார். 1609, ஜூலை 27இல் அருளாளர் என்றும், 1622 மார்ச் 12இல் புனிதர் பட்டமும் இஞ்ஞாசியாருக்கு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT