Published : 23 Jun 2016 12:12 PM
Last Updated : 23 Jun 2016 12:12 PM
செல்வத்தின் அதிபதியான குபேரனுக்குப் பல ஆலயங்களில் சன்னிதி உண்டு. சில சிறப்பான தனிப்பட்ட ஆலயங்களும் உண்டு. ஆனால் வித்தியாசமான ரூபத்துடன் வானுயர்ந்து நின்று காட்சி தந்து, தன்னை வணங்குவோரின் ஆசைகளையும், வேண்டுதல்களையும் நிறைவேற்றி வைக்கும் செல்வ குபேரரைக் காண நாம் விழுப்புரம் மாவட்டம் ஓங்கூருக்குச் செல்ல வேண்டும்.
இந்த ஆலயத்தில் சிரிக்கும் புத்தர் (Laughing Buddha) தான் தங்க வண்ணத்தில் சிரித்த முகத்துடன், பெருத்த தொப்பையுடன், பொற்காசு மாலை தாங்கி நெடிதுயர்ந்து நின்று செல்வ குபேரராகக் காட்சி தருகிறார். அவரது சிரித்த மகிழ்ச்சியான உருவம் கண்டதுமே நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அப்பொழுதே நம் துன்பங்கள் தூரப்போய் விட்டாற்போன்ற மகிழ்ச்சி மனதை ஆட்கொள்கிறது.
இவ்வாலயத்தின் சிறப்பம்சமாக 10 ஆயிரத்து 800 சதுரடியில் ஒன்பது என்ற கூட்டு எண்ணிக்கையில் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து நவக்கிரகங்களும் தமக்குரிய திசையில், அவரவர் வாகனங்களுடன், தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கான சுலோகம் எழுதப்பட்டு, சிறப்பாக அமைந்துள்ளன.
ஆனந்த நர்த்தன விநாயகர், ஆஞ்சநேயர், லக்ஷ்மி ஹயக்ரீவர், கன்னிகா பரமேஸ்வரி, லக்ஷ்மி நாராயணர்,ஷீர்டி பாபா, அன்னை மற்றும் அரவிந்தருக்குத் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பிரமிடு வடிவக் கோபுரங்கள் மேலே கலசங்களுடன் அற்புதமாகக் காட்சி அளிக்கின்றன. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர். இங்கு பிரமிடு வடிவ கோபுரங்கள் காலை சூரிய வெளிச்சத்தில் மின்னுவது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி!
கவலைப்படாதே எண்ணங்கள் ஈடேறும்
ஒவ்வொரு சன்னிதியிலுள்ள தெய்வங்களும் தங்கக் கவசத்தில் பொலிவோடும், அழகோடும் காட்சி தருகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் நான்காம் தேதி கும்பாபிஷேகம் கண்ட இக்கோயில் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. ஆலயம் முழுதும் மிதியடிகள் போடப்பட்டு, வெயிலின் சூடு தாக்காமல், அம்புக்குறி போட்ட வழியே நாம் வரிசையாகச் சென்று தெய்வங்களை தரிசிக்கும்படி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரே வண்ணப் புடவை அணிந்த பெண்கள் நமக்கு அனைத்தையும் விளக்கிச் சொல்கிறார்கள். எல்லா சன்னிதிகளிலும் கண்ணாடிப் பெட்டிக்குள் அணையா விளக்குகள் உள்ளன. சன்னிதிகளின் எண்ணிக்கைக்குக் தக்கபடி எண்ணையை வாங்கி நாம் அத்தனை விளக்குகளுக்கும் ஊற்றி வழிபடலாம்.
இங்கே உண்டியல் கிடையாது. வரும் அனைவருக்கும் அன்னதானம் உண்டு. நன்கொடைகள், வழிபாட்டுக் கட்டணம் கிடையாது.
ஆலயத்தில் ஒரு தெய்வீகம் நம்மை ஆட்கொள்வதை உணர முடிகிறது.செல்வா குபேரர் நம்மைப் பார்த்து ‘கவலைப் படாதே, உன் எண்ணங்கள் ஈடேறும்' என்று புன்னகையுடன் சொல்வதுபோல் தோன்றுகிறது.
செல்லும் வழி
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் NH45-ல் சென்னையிலிருந்து 100 கிலோ.மீட்டர் தூரத்தில் பிரதான சாலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் ஓங்கூரில் அமைந்துள்ளது செல்வ குபேரர் ஆலயம். ஆலய நேரம் காலை 7 முதல் இரவு 8 வரை. சொந்த வாகனங்களில் செல்வோர் ஆலயம் தரிசித்து செல்வ குபேரரின் அருளைப் பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT