Published : 02 Jun 2016 04:51 PM
Last Updated : 02 Jun 2016 04:51 PM
ஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும் நண்டு வழிபட்டதுமாகிய சிறப்புக்குரிய தலம் திருந்துதேவன்குடியாகும். உமையம்மை ஈசனை நண்டு வடிவில் நாள்தோறும் வழிபட்டுவந்தாள். உமை வழிபட்ட நேரத்திலேயே இந்திரனும் வழிபட வந்தான். கோயிலைச் சுற்றியுள்ள அகழியில் இருந்து தாமரை மலர்களைக் கொய்து வந்து வழிபடுவது நண்டின் வழக்கம்.
இந்திரன் தான் வழிபட மலர்கள் குறைவதைக் கண்டு கடுங்கோபம் கொண்டான். ஒரு நாள் நண்டு, மலர் பறித்து அர்ச்சிப்பதை அறிந்துகொண்டான். தனது பிரார்த்தனைக்கு இடையூறாக இருக்கும் கற்கடகத்தை ( நண்டை ) வெட்ட முற்பட்டான்.
முதல் வெட்டு சிவன் தாடையிலும் அடுத்த வெட்டு நெற்றியிலும் விழுந்தது. உடனே சிவன் தன் தலையில் துவாரம் கொடுத்து உமையைத் (நண்டை) தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டார் என்கிறது புராணம். உண்மையை அறிந்த இந்திரன் திருந்தியதால் ஊருக்குத் திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்தது.
கோயிலில் நிகழும் அற்புதம்
இக்கோயில் வயல்களுக்கு நடுவில் அகழியால் சூழப்பட்டுள்ளது. கருவறை மூலவர் கற்கடேசுவரர் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். மூலவரின் திருமேனியில் வெட்டப்பட்ட தழும்புகள் இருப்பதை இன்றும் காணலாம். ஆடி மாதத்தில் அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடும் நாளில் 21 குடம் காராம் பசுவின் பாலினைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் நண்டு வெளிவந்து காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் என்ற நூல் கூறுகின்றது.
இரண்டு அம்பிகைகள்
கோயில் உட்பிராகாரத்தைக் கடந்து வெளியில் வந்தால் வடபுறம் இரண்டு அம்பாள் சந்நிதிகள் தனித்தனியாக உள்ளன. மேற்கில் அபூர்வ நாயகி, கிழக்கில் அருமருந்தம்மை. சோழ மன்னன் இத்தலத்தைத் திருப்பணி செய்தபோது அம்பிகை சிலை காணாமல் போனது. அதனால் புதிதாக அம்பிகை சிலை ஒன்றை நிறுவினான்.
மன்னனுக்கு ஏற்பட்ட பக்கவாத நோயை ஈசனும் அம்பிகையும் மருத்துவராக வந்து நீக்கி அருளினர். அதனால் அந்தப் புதிய அம்மனுக்கு அருமருந்தம்மை என்று பெயரிட்டு வழிப்பட்டான். பின்பு பழைய அம்பாள் சிலை கிடைத்ததால் அதற்குப் பூர்வத்தில் இருந்த அம்மை என்ற பொருளில் அபூர்வநாயகி என்று பெயர் சூட்டினான்.
சிறப்பு வாய்ந்த சந்திரன்
நவக்கிரகங்களில் சந்திரனுக்குத் தனி சந்நிதி உள்ள தலம் இது. எல்லாக் கோயில்களிலும் சந்திரன் நின்ற நிலையில் இருப்பான். இங்கு மட்டும் அமர்ந்த நிலையில் இருக்கிறார்; அதுவும் யோக நிலையில். இந்தச் சந்திரனையும் இறைவன் இறைவியையும் வழிபட்டால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
செல்லும் வழி
கும்பகோணம் - சூரியனார் கோவில் மார்க்கத்தில் (திருவிசநல்லூர் அருகில்) கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT