Last Updated : 26 Jan, 2017 09:33 AM

 

Published : 26 Jan 2017 09:33 AM
Last Updated : 26 Jan 2017 09:33 AM

புராண காலத்தில் கேள்வி கேட்ட பெண்

இசை, நாட்டிய விழாக்களில் பாரதிய வித்யா பவனில் நடந்த நாட்டிய தர்ஷன் நிகழ்ச்சிகள் செவ்விய கலைகளில் தேர்ச்சியுள்ள ரசிகர்களையும் பாமர ரசிகர்களையும் ஒருங்கே மகிழ்ச்சி அடையவைக்கும் பல ஆச்சரியங்களைக் கொண்டிருந்தது. நேர்த்தியான முறையில் பரத நாட்டியத்தோடு பல கலைகளையும் கலைஞர்களையும் உள்ளடக்கிய நிகழ்ச்சிகளாக அவை ரசிகர்களை மகிழ்வித்தன. நிகழ்ச்சிகளை பல கலை வடிவங்களை உள்ளடக்கித் திட்டமிட்ட பெருமை, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய பரத நாட்டியக் கலைஞர் கிருத்திகா சுப்பிரமணியத்தையே சேரும். நாட்டிய தர்ஷன் நிகழ்ச்சியில் பாத்திரப் பிரவேசம் நிகழ்ச்சி ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது.

பாத்திரப் பிரவேசம்

ஏறக்குறைய 16 இளம் கலைஞர்கள் அவர்களின் குரு தேர்ந்தெடுத்துக் கொடுத்த புராண, இதிகாச பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு காட்சியை மேடையில் நிகழ்த்துவார்கள். காட்சி முடிந்ததும் மேடையில் தோன்றிய பாத்திரம் எது? என்னும் கேள்விக்கு ரசிகர்கள் பதிலளிக்க வேண்டும். சுவாரசியமான இந்த நிகழ்ச்சியில் கட்டைக் கூத்து, குச்சிப்புடி, நாடகம் போன்ற பல கலைகளும் நிகழ்த்தப்பட்டன. இதில் ராதே ஜக்கி தேர்ந்தெடுத்த பாத்திரம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

கவனம் ஈர்த்த கார்க்கி

ஜனகரின் அவையில் 10 அறிஞர்கள் இருந்தனர். அவர்களில் ஒரேயொரு பெண் அறிஞர் கார்க்கி. அறிஞர்களின் கேள்விகளுக்கான பதில்களையும் சந்தேகங்களையும் தீர்த்துவைக்கும் பதில்களைச் சொல்லும் அறிஞருக்கு அளவற்ற பொன்னும், வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என்று அறிவித்தார் ஜனகர். அப்போது யாக்ஞவல்கி எனும் அறிஞர் தாமே உறுதியாக வெல்வோம் என்ற நம்பிக்கையோடு, பரிசுப் பொருட்களைத் தம்முடைய இல்லத்துக்கு அனுப்பிவைக்குமாறு அரசரிடம் கூறினார்.

அப்போது கார்க்கி, அவரிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். யாக்ஞவல்கி, கார்க்கியின் கேள்விகளை எதிர்கொண்டு அதற்கான பதில்களைச் சொல்கிறார். அந்தப் பதில்களில் திருப்தியடையும் கார்க்கி, நீங்கள் மிகச் சிறந்த அறிஞர், உங்களை நான் வணங்குகிறேன் என்று விடை கொடுக்கிறாள். புராண காலத்தில் கேள்வி கேட்ட பாத்திரமான கார்க்கியை மேடையில் நம் முன் தத்ரூபமாக தரிசனப்படுத்தினார் ராதே ஜக்கி.

அனுபவம் புதுமை

“முறையாக எழுத்தில் இல்லாமல் செவி வழியாக எல்லோரும் அறிந்த பாத்திரம் கார்க்கி. இந்த பாத்திரத்தை விளக்குவதற்கான பாடல்களை பேராசிரியர் ரகுராமன் எங்களுக்கு எழுதிக் கொடுத்தார். கற்பனையான அந்தப் பாத்திரத்துக்கு நடனமாடியது புதிய அனுபவமாக இருந்தது.

இந்த உலகம் உருவானது எதனால் என்னும் கேள்விக்குப் பதில் நீர். நீரின் தன்மை என்ன என்னும் கேள்விக்கு, காற்றின் ஆற்றலில் கலந்திடும் என்னும் பதில் வரும். கலத்தலின் தன்மை என்ன எனும் கேள்விக்கு, வெளியில் தென்படும் என்னும் பதில் கிடைக்கும். வெளியின் தன்மை புரிந்து கொள்ளமுடியுமா எனும் கேள்விக்கு, முடியாது; உணர முடியும் என்னும் பதில் கிடைக்கும். இறுதியாக உள்ளத்தின் அறிவிலே உயரிய தன்மை நலமாய் அறிந்தேன். ஞாலம் தொழுதிடும் என்று கூறிக் காட்சியை முடிப்பேன்.

என்னுடைய நாட்டிய குரு லீலா சாம்சன் அளித்த பயிற்சியால் மிகவும் நேர்த்தியாக இந்த நிகழ்ச்சியை செய்யமுடிந்தது. மிகவும் அரிதான புராணப் பாத்திரமான கார்கியை மேடையில் நான் நிகழ்த்தி முடித்ததுமே ரசிகர்கள் சரியாக அடையாளம் கண்டு சொல்லியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்ற அரிதான புராணப் பாத்திரங்களையும் கதைகளையும் மையப்படுத்தியே அடுத்து ஒரு முழு நாட்டிய நிகழ்ச்சியையும் நடத்தும் எண்ணம் இருக்கிறது” என்றார் ராதே ஜக்கி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x