Published : 09 Jan 2014 12:00 AM
Last Updated : 09 Jan 2014 12:00 AM
நாங்கள் நின்றிருந்த இடம் வைத்தீஸ்வரன் கோவில். அங்காரகன் தலம். பிணி தீர்க்கும் தேவஸ்தானம். புள் (பறவை- சடாயு), இருக்கு (வேதம்-ரிக்).வேள் (வேல்-முருகன்) ஊர்(சூரியன்) ஆகிய நால்வரும் பூசித்த இடமாகையால் புள்ளிருக்கு வேளூர்.
மேலக்கரை வாசலைத் தாண்டி வருவது மகா மண்டபம். பெரிய பெரிய அலங்காரத் தூண்கள். முழுவதும் செதுக்கல்கள். பல்லவ காலச் சிற்பங்கள். யாளிகள், குதிரை வீரர்கள். வெள்ளியிலும் தங்கத்திலும் உள்ளே இரு கொடிக்கம்பங்கள் . கோவிலைச் சுற்றிலும் பெரிய மதில் சுவர்கள். அதை ஒட்டினாற்போல் உள்ளே இரண்டு பெரிய சுற்றாலைகள். அதைத் தாண்டி உள்ளே சுவாமியின் சந்நிதி. அந்தச் சந்நிதிக்கு ஒரு தனிச் சுற்றாலை. மேற்கு நோக்கி உள்ளது வைத்தியநாத சுவாமியின் சந்நிதி. கருவறையை வலம் வந்தால் பின்னால் நவக்கிரகங்கள். இதில் விசேஷம் - வக்கிரமின்றி எல்லாம் ஒரு திசையை நோக்கி இறைவன் ஆசைப்படி பக்தர்களுக்கு அருள்புரிகின்றன. கோள்கள் இங்கு பலனற்றுப் போகின்றன . பக்கத்தில் தன்வந்தரி. சற்றுத் தள்ளி சடாயு குண்டம் (இராமர் சடாயுவை தகனம் செய்த இடம் இதுதான்). இன்னும் சற்று தள்ளி அறுபத்து மூன்று நாயன்மார்கள். பிராகாரத்தில் வேறு ஒரு இடத்தில் செல்வ முத்துகுமாரசுவாமி சந்நிதி. உற்சவர், வள்ளி தெய்வானையுடன். இவர் இங்கு செல்லப் பிள்ளை. நித்ய அனுஷ்டானங்களும் இவருக்குப் பின்தான் அத்தனுக்கும் அம்மைக்கும் நடைபெறும். வைத்தியநாதர் லிங்கரூபமாகக் கவசத்துடன் காட்சி தருகிறார். அவருக்கு முன்னே கல்லில் செதுக்கிய கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. (எல்லாப் பாடல் பெற்ற ஸ்தலங்களிலும் இது போன்று இருக்குமாம்).
வைத்திய நாதருக்கு ஒரு கதை உண்டு. அவருடைய வியர்வைத் துளியிலிருந்து உதித்த குஜன சென் தொழுநோயால் பாதிக்கப்பட்டபோது இங்கு வந்து நீராடி பிணி நீங்கப் பெற்றதாக ஐதீகம். மனித இனத்தை எல்லாப் பிணிகளிலிருந்தும் நீக்கு வதற்காக இங்கு குடிகொண்டுள்ளார். அதனால்தான் வைத்தியநாதர்.
அடுத்து தையல் நாயகி அம்மன். சர்வ ரோக நிவாரணியாக அம்மன் தைலப் பாத்திரத்துடனும், சஞ்சீவி மற்றும் வில்வ மரத்து மண்ணுடனும் ஐயனுடன் இங்கு வந்து அமர்ந்தாராம். தைலாம்பிகையாக உருப்பெற்றார். இந்தச் சந்நிதி ஈஸ்வரன் சந்நிதிக்கு செங்குத்தாக தெற்கு நோக்கி உள்ளது. நேராக வந்தால் பெரிய குளம். பெயர் சித்தாமிர்த தீர்த்தம். இங்குதான் அங்காரகனும் வேறோர் அரசனும் குளித்து நோய் நீங்கப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. முனிவர் சாபத்தால் இன்றளவும் குளத்தில் பாம்புகளோ தவளைகளோ கிடையாதாம். குளத்தைச் சுற்றி அழகான மண்டபம். அதிலிருந்து கோபுர தரிசனம் அபாரம்.
நீர் நிலை, அதனருகே கோவில் கோபுரம், அங்கும் இங்கும் மரங்கள், உள்ளே அருளாளன் இதுவே காண்போர் மனதை லயிக்க வைத்து அந்தராத்மாவை இறைவனுடன் இணைத்துவிடும்.
கோபுரத்தைத் தாண்டிக் கோவிலினுள் சென்றால் முதலில் வருவது அங்காரகன் சந்நிதி. செவ்வாயன்று விசேஷ அபிஷேகம். புதிதாக மணமானவர்களும், மணமாக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களும் அங்கே பரிகாரம் செய்யக் குழுமியிருக்கிறார்கள். மறுபடியும் கோவிலைச் சுற்றுகிறோம். எத்தனை தடவை சுற்றினாலும் நம் தவிப்பு அடங்காது போலிருக்கிறது. சாந்து உருண்டை என்ற பலகை தெரிகிறது. மணலையும் தீர்த்தத்தையும் கலந்து இறைவனுக்கும் படைத்துப் பின் வழங்கப்படுகிறது. காலையில் நீராடி சுத்தமாக உட்கொண்டால் பிணி தீரும் என்கிறார்கள். விட்டுப் போன ராமர், குமரகுருபரர், பராசக்தி போன்றோர் சந்நிகளை வலம் வருகிறோம். கடைசியில் பிரசாதம் (லட்டு) வாங்கிக் கொண்டு சதாபிஷேகம் திரும்புகிறோம். லட்டுவைப் பிட்டு உண்கிறோம்.
தமிழ் போல் இனிக்கிறது.தென்னாடுடைய சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது அல்லவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT