Published : 09 Jun 2016 10:50 AM
Last Updated : 09 Jun 2016 10:50 AM
இறைவழிபாட்டு நடைமுறைகளில் மிக முக்கியமானது நோன்பு. நிகரற்ற பலன்களைத் தரக்கூடியது. அதனால்தான் எல்லாச் சமயத்தவர்களும் நோன்பை மிக முக்கியக் கடமையாக கருதுகின்றனர்.
“இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல, உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளோராகக்கூடும்!” என்கிறது நோன்பைக் குறித்து திருக்குா்ஆன்.
நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம், பலவீனங்களிலிருந்து மனிதனை விலக்கி நல்லவனாக விளங்கச் செய்வதேயாகும். நோன்பிருப்பவர் நோன்பின் நோக்கம் குறித்தும், அதன் குறிக்கோள் குறித்தும் அறியாமலிருப்பது நோன்பின் உயிரோட்டத்தைக் குலைத்துவிடும்.
இதை நபிகளார் இப்படி அறிவுறுத்துகிறார்:
“எவர் நோன்பு நோற்றிருந்தாலும், பொய் சொல்வதிலிருந்தும், பொய்யான முறையில் செயல்படுவதிலிருந்தும் விலகி வாழவில்லையோ அவர் பசித்திருப்பதைக் குறித்தும், தாகித்திருப்பதைக் குறித்தும் இறைவனுக்கு எவ்வித அக்கறையுமில்லை”
நோன்பின் குறிக்கோள் அறிந்து சுயமதிப்பீட்டுடன் நோன்பு நோற்பவரின் பாவங்களை இறைவன் மன்னித்துவிடுவதாக மற்றொரு இடத்தில் அறிவுறுத்துகிறார் நபிகளார்.
அந்தியில், நோன்பைத் திறக்கும்போது, இந்தப் பிரார்த்தனை இன்றியமையாதது.
“இறைவா! என் நோன்பை ஏற்றுக் கொள்வாயாக! நீ வாக்களித்துள்ள நற்கூலியையும், பலன்களையும் தந்தருள்வாயாக!”
நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பிருப்பவர் செய்யும் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தீய செயல்களிலிருந்து காத்துக் கொள்ளும் கேடயம் போன்றது நோன்பு. மறுமையில் பரிந்துரைக்கும் தோழன்கூட.
“நான் இந்த மனிதனைப் பகலில் உண்பதிலிருந்தும், பருகுவதிலிருந்தும் தடுத்திருந்தேன். இறைவா..! இவனுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக!” என்று மறுமை நாளில் நோன்பு பரிந்துரைப்பதாகவும், அந்தப் பரிந்துரையை இறைவன் ஏற்றுக் கொள்வதாகவும் நபிகளார் சொல்கிறார்.
பயணக் காலம், நோய், நோன்பின் கடுமை இன்னும் இது போன்ற இஸ்லாம் அனுமதித்த காரணங்களால் நோன்பைக் கைவிடுபவர் ரமலான் அல்லாத பிற நாட்களில், நோன்பு நோற்றுக்கொள்ளலாம்.
“ரமலான் மாதத்தில் நபிகளாருடன் குழுவாய் பயணம் செய்யும் வாய்ப்பொன்று ஏற்பட்டது. குழுவிலிருந்தவர் சிலர் நோன்பு நோற்றனர். இன்னும் சிலர் நோன்பு நோற்கவில்லை. அப்படியிருந்தும், இந்த இருசாரரும், ஒருவர் மற்றொருவர் மீது எந்தக் குற்றங்குறைகளையும் சொல்லவில்லை!” என்கிறார் நபித் தோழர் அனஸ்.
நோன்பு திறக்க வசதியற்ற வர்களுக்கு நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவது மிகவும் புண்ணியச் செயல்.
ஒருமுறை நபிகளார் நோன்பு குறித்து தமது தோழர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தார்:
“எவர் ரமலான் மாதத்தில், பிறருடைய நோன்பைத் திறக்க ஏற்பாடு செய்கிறாரோ, அதற்குப் பகரமாக இறைவன் அவருடைய பாவங்களை மன்னிக்கின்றான். மேலும், நரக நெருப்பிலிருந்து அவரைக் காக்கின்றான். நோன்பு திறக்க ஏற்பாடு செய்பவருக்கு நோன்பிருப்பவர்களுக்கிணையான நற்கூலி அளிக்கிறான். மேலும், நோன்பிருப்பவரின் நற்கூலியில் யாதொரு குறையும் ஏற்படுவதில்லை!”
தோழர்கள் வினவினார்கள்:
“இறைவனின் திருத்தூதரே! நோன்பாளிகளின் நோன்பு திறக்க ஏற்பாடு செய்ய, அவர்களுக்கு உணவளிக்க எங்கள் எல்லோரிடமும் அந்த வசதியில்லையே!”
அதற்கு நபிகளார் இப்படி பதிலளித்தார்:
“நீங்கள் ஒரு பேரீச்சம் பழம் கொடுத்தோ அல்லது சிறிது பாலைக் கொடுத்தோ அதுவும் இல்லாத போது ஒரு மடக்கு தண்ணீர் கொடுத்தோ பிறர் நோன்பு திறக்க ஏற்பாடு செய்தாலே போதுமானது. அதுவே உத்தமான செயல்!”
மனிதனைச் சீர்த்திருத்தம் செய்து நல்லவனாக்கும் பயிற்சிப் பட்டறையாக ரமலான் மாதம் விளங்குவதால், அதன் நோக்கம் அறியாதவர்கள் வீணாகி விடுவார்கள் என்று நபிகளார் எச்சரிக்கிறார்.
“எத்தனையோ நோன்பாளிகள் நற்பேறற்றவராய் ஆகி விடுகின்றனர். அவர்கள் தங்கள் நோன்பின் வாயிலாகப் பசியையும், தாகத்தையும் தவிர வேறெதையும் பெறுவதில்லை. நோன்புக் கால இரவுகளில் தராவீஹ் (விசேஷத் தொழுகை) தொழுபவர்களில் எத்தனையோ பேர் அந்தத் தொழுகைகளுக்காகக் கண் விழித்திருந்ததைத் தவிர வேறெந்தப் பலனையும் பெறுவதில்லை!”
நோன்புக்கால கடமைகள்
# நோன்பு மனிதனுள் உருவாக்க இருக்கும் மாண்பை எண்ணி மார்க்கம் அனுமதித்த காரணங்களைத் தவிர நோன்பை விடாமல் கண்ணும், கருத்துமாய் நோன்பை கடைபிடிப்பது
# நோன்பு அல்லாத காலங்களில் இருப்பது போன்றே நோன்பிருப்பவர் உற்சாகத்துடன் இருப்பது
# அனைத்து விதமான தீய செயல்களிலிருந்தும் விலகி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவது
# அதிகமாகப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT