Published : 04 Nov 2013 01:30 PM
Last Updated : 04 Nov 2013 01:30 PM
விழுப்புரத்தை அடுத்த செஞ்சி அருகே உள்ள இந்த கிராமத்தின் பெயர் செக்கடிகுப்பம். கடந்த 40 ஆண்டுகளாக நாத்திக கிராமமாக இருந்த இந்த ஊர், இப்போது திடீரென ஆன்மிகத்துக்கு மாறியுள்ளது.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். இருப்பினும் சிதிலமடைந்த கோயிலில் இருந்த சிலைகளை சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசி நாத்திகக் கொள்கையில் பற்றுடன் விளங்கியது இந்த கிராமம். ஆன்மிகவாதிகள் அதிருப்தி அடைந்தாலும் திராவிட இயக்கங்கள் அந்த கிராம மக்களுக்கு பக்கபலமாக நின்றன. தை பொங்கலைத் தவிர்த்து வேறு எந்த பண்டிகையும் கொண்டாடாடுவதில்லை. இதைப்பற்றி ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதி தீர்த்தன. கடவுள் நம்பிக்கையற்றவர்கள் வசிக்கும் இந்த கிராமம் தற்போது தலைகீழாக மாறியிருக்கிறது.
அந்த கிராமத்துக்கு ஞாயிற்றுகிழமை சென்றோம். அந்த ஊரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் தெய்வானை தலைமையில் கிராம மக்கள் திரண்டிருந்தனர். எதனால் இந்த மாற்றம் என கேள்வி எழுப்பியபோது சாமிநாதன் என்ற முதியவரைக் கைகாட்டினர்.
அவர் நம்மிடம் சொன்னது: “எங்க பாப்பாதான் (தங்கை) பவுனு, அதை எங்க ஊரைச்சேர்ந்த அர்சுனன் என்பவருக்கு 40 வருசத்துக்கு முன்னால கல்யாணம் செஞ்சி வச்சோம். அவரு தி.க.காரரு. உடனே எங்க பாப்பா பவுனு பேரை தணியரசுன்னு மாத்திட்டாரு, ஆனா அவரு தன்னோட பேரை மாத்திக்கலே. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஊரை தன்னோட கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துட்டாரு. அவர் சொல்றதுதான் சட்டம், தர்மம், நியாயம் எல்லாம். அவரை எதிர்த்து பேசியவரை கம்பத்துல கட்டிவச்சி அடிச்சி இருக்காரு, இவரோட காட்டாட்சி பிடிக்காம பல குடும்பங்கள் ஊரை விட்டே ஓடி இருக்காங்க.
இதுக்கு என்னதான் முடிவுன்னு யோசிச்சோம். போன பஞ்சாயத்து தேர்தல்ல எங்க பாப்பா பவுனை கவுன்சிலருக்கு நிக்க வச்சாரு. நாங்க ஒண்ணு சேர்ந்து தோக்கடிச்சோம். ரகசியமா சாமி கும்பிட்ட நாங்க பப்ளிக்கா சாமி கும்பிட முடிவு செஞ்சி மொதல்ல மாரியம்மன் சிலை வைக்கும்போது தகராறு செஞ்சாங்க. அப்ப நடந்த தகராறுல போலீஸ் கேஸாச்சி, கோயில் எடம் சம்மந்தமா சிவில் கேஸ் கோர்ட்ல இருக்கு. ஆனா நாங்க விடறதா இல்ல. அப்புறம் மாரியம்மன் சிலை வச்சோம். இன்னிக்கு பிள்ளையார் சிலை வக்கிறோம்” என்றார்.
இதுதொடர்பாக அர்சுனனிடம் பேசிய போது, “இந்த ஊர்ல கோயில் இருந்ததற் கான ஆதாரமே இல்லை. கோர்ட்ல எங்களுக்கு சாதகமா கேஸ் முடிஞ்சதும் இப்ப கட்டியுள்ள கோயிலை இடிப்போம். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை” என்றார்.
40 ஆண்டுகால நாத்திக அடையாளத்தை இந்த கிராமம் இப்போது மாற்றிக்கொண்டது, பகுத்தறிவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT