Published : 26 Jan 2017 09:33 AM
Last Updated : 26 Jan 2017 09:33 AM

வார ராசிபலன் 26-01-2017 முதல் 01-02-2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ல் சூரியனும், 11-ல் சுக்கிரனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். 27-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. 31-ம் தேதி முதல் புதன் 10-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். செய்தொழில் விருத்தி அடையும். புதிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும். நிர்வாகத்திறமை கூடும். தந்தையாலும், மக்களாலும் நலம் உண்டாகும்.

கணவன் மனைவி உறவு நிலை சீராகும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைக்கும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு கூடும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கனம் தேவை. வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்புகள் கூடிவரும். கணிதம், வியாபாரம், எழுத்து, தரகு போன்ற இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். தொழிலாளர்கள், விவசாயிகள், இயந்திரப்பணியாளர்கள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 27, 30.

திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

‎நிறங்கள்: மெரூன், இளநீலம், பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 6, 7.‎

பரிகாரம்: சனிக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. அனுமன் சாலீஸா படிக்கவும் கேட்கவும் செய்யலாம். சுப்பிரமணியரை வழிபடவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 10-ல் கேதுவும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். 27-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடத்திற்கு மாறி அதிபலம் பெறுவது விசேடமாகும். 31-ம் தேதி முதல் புதன் 9-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. வார ஆரம்பத்தில் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். குடும்ப நலம் சிறக்கும். வார நடுப்பகுதியில் சுப காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பால் பயன் கிடைக்கும். பெற்றோரால் அனுகூலம் ஏற்படும்.

வாரப் பின்பகுதியில் காரியத்தில் வெற்றி கிடைக்கும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். ஜலப்பொருட்களால் லாபம் கிடைக்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மாதர்களது எண்ணம் ஈடேறும். உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். அலைச்சல் வீண்போகாது. உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 27, 30, பிப்ரவரி 1.

திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை.

எண்கள்: 5, 7, 9.

பரிகாரம்: குருவையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 5-ல் குருவும் 6-ல் சனியும் 9-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. 27-ம் தேதி முதல் சுக்கிரன் 10-ம் இடத்திற்கு மாறினாலும் நலம் புரிவார். 31-ம் தேதி முதல் புதன் 8-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. நல்லவர்களின் உறவும் அனுகூலமும் கிடைக்கும் நேரமிது. பயணத்தால் ஒரு காரியம் ஈடேறும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும். திறமைக்குரிய பயன் நிச்சயமாகக் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். இயந்திரப்பணியாளர்கள், பொறியாளர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள்.

செல்வாக்கும் மதிப்பும் உயரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். திரவப் பொருட்கள் லாபம் தரும். பொதுப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். தொழில் ரீதியாக நல்லதொரு மாற்றம் உண்டாகும். மகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும். பெண்களாலும், மனைவியாலும் நலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். மகப்பேறு பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். தந்தை நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 30, பிப்ரவரி 1.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: புகை நிறம், நீலம், பொன் நிறம், கருஞ்சிவப்பு.

எண்கள்: 3, 4, 6, 8, 9.

பரிகாரம்: சூரிய நாராயணரையும் விநாயகரையும் வழிபடவும். தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவி செய்யவும்.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் 8-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. 27-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் இடத்திற்கு மாறி பலம் பெறுவது விசேடமாகும். 31-ம் தேதி முதல் புதன் 7-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றைச் சமாளிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். கலைஞர்களுக்கு முன்னேற்றமான பாதை புலப்படும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். ஆதாயமும் கிடைக்கும்.

நல்லவர்களின் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு, நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகினால் நலம் கூடப் பெறலாம். மக்கள் நலனில் அக்கறை தேவை. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. விஷ பயம் ஏற்படும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. வாரப் பின்பகுதியில் தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். நிலம், மனை, வீடு, வாகனம் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். திரவப் பொருட்களால் லாபம் வந்து சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 27, பிப்ரவரி 1.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, பச்சை.

எண்கள்: 5, 6.

பரிகாரம்: நாகரை வழிபடவும். மகா கணபதியை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடுவது நல்லது.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசி அதிபதி சூரியன் 6-ல் உலவுவது ஒன்றே சிறப்பாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. 27-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. 31-ம் தேதி முதல் புதன் 6-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகும். மக்களால் ஓரளவு நலம் உண்டாகும். ஊகவணிகம் லாபம் தரும். அரசு சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிடைக்கும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும்.

அவர்களால் அனுகூலமும் உண்டாகும். தந்தை நலம் சீராகும். நிர்வாகத்திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். வாரப் பின்பகுதியில் சந்திரன் 8-ம் இடத்திற்கு மாறி செவ்வாயோடு இணைவதால் சிறு சங்கடம் உண்டாகும். உடலில் காயம்பட நேரும். எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். ஜல சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும்போதும் எச்சரிக்கை தேவை. பொருள் கொடுக்கல் வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. கலைத்துறையினருக்கும் வியாபாரிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 27, 30.

திசை: கிழக்கு.

நிறம்: ஆரஞ்சு.

எண்: 1.

பரிகாரம்: நவக்கிரக ஜப, ஹோமம் செய்வது நல்லது. கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் சனியும், 4-ல் புதனும் 6-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். 27-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ம் இடத்திற்கு மாறுவதும் செவ்வாயோடு சேருவதும் சிறப்பாகாது. 31-ம் தேதி முதல் புதன் 5-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. சூரியனோடு கூடுவதும் குறை ஆகும். குரு பலம் இருப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் கூடும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். ஆன்மிகப்பணிகள் ஆக்கம் தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். சுக்கிரனின் சஞ்சாரம் வாரம் முழுவதும் சிறப்பாக இல்லாததாலும், ராகு 12-ல் இருப்பதாலும் பெண்களாலும், மனைவியாலும் சங்கடம் உண்டாகும். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. பிறரிடம் கோபப்படாமல் இருப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளிடம் முக்கியப் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 27, 30, பிப்ரவரி 1.

திசைகள்: மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், மெரூன், பொன் நிறம், பச்சை.

எண்கள்: 3, 5, 7, 8.

பரிகாரம்: துர்க்கைக்கும் மகாலட்சுமிக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்துவருவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x