Published : 02 Jun 2016 12:52 PM
Last Updated : 02 Jun 2016 12:52 PM
ஜூன் 8: நம்பியாண்டார் நம்பி திருநட்சத்திரம்
நம்பியாண்டார் நம்பி சைவ சமய நூல்களை மீட்டெடுத்த மகான். திருநறையூரில் பிறந்த இவர் சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர். தாமே பல நூல்களையும் இயற்றியவர்.
சிதம்பரம் கோயிலில் அருமை தெரியாமல் சிதறிக் கிடந்த தேவார ஓலைச் சுவடிகளை மீட்டெடுத்தவர். ஓலைச் சுவடியில் இருந்த சைவ சமய இலக்கியங்களை, பூச்சிகள் அரித்தது போக எஞ்சியவற்றைப் பதினோரு திருமுறைகளாகத் தொகுத்தவர்.
பதினோராம் திருமுறை
இதில் பதினோராம் திருமுறையாக உள்ளவற்றில் தமது பத்து நூல்களை இணைத்தார். அவை திருஇரட்டை மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், திருத் தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, திருக்கலம்பகம் உள்ளிட்டவை ஆகும்.
திருப்பண்ணியார்
திருப்பண்ணியார் என்னும் சொல் கோயில் திருப்பணி பண்ணுவோரைக் குறிக்கும். கோயில் என்றால் அது சிதம்பரம் கோயிலையே குறிக்கும் என்கிறது கோயில் நான்மணிமாலை என்னும் நூல். பெரிய கோயில் என்றால் அது ரங்கம் கோயிலைக் குறிக்கும்.
திருப்பண்ணியார்கள் பல வகைப்படுபவர்கள். பூஜைகள் செய்பவர்கள் தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர், துப்புரவுப் பணியாளர்கள், தானம் வழங்குவோர் புரவலர்கள் ஆகியோர் இதில் அடங்குவர் என்பர். ஆனால் பண் பாடுவோரைத் திருப்பன்ணியார் என்று சிறப்பித்துச் சொல்லுதல் வழக்கம். திருப்பண்ணியார் விருத்தம் என்ற இவரது நூல், பண் பாடும் ஒருவர் சிதம்பரம் கோயிலின் சிறப்புக்களைப் பாடுவதாக அமைத்துள்ளது.
அருமையான அந்தாதி
அந்தாதி சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது திருத்தொண்டர் திருவந்தாதி. பன்னிரெண்டாம் திருமுறையான சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் சைவத் தொண்டை விரிவாகப் போற்றிப் பாடுகிறது. பதினோராம் திருமுறையான நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி இந்த நாயன்மார்களின் வரலாற்றைச் சுருங்கக் கூறுகிறது. சேக்கிழார் பெரிய புராணம் இயற்ற இந்நூல் அடிநாதமாக உதவியுள்ளது எனலாம்.
ஆளுடையப் பிள்ளை
ஆளுடையப் பிள்ளையார் திருசண்பை விருத்தம் என்ற நூல் ஆளுடையப் பிள்ளையான திருஞானசம்பந்தரைக் குறிக்கும். நம்பியாண்டார் நம்பி இயற்றிய பத்து நூல்களில் ஆறு நூல்கள் திருஞானசம்பந்தரின் புகழ் பாடுபவை. நூறு கட்டளைக்கலித்துறை பாடல்களைக் கொண்ட இந்நூலில் நூறாவது பாடல், சீர்காழியின் பன்னிரெண்டு பெயர்களைக் கொண்டுள்ளது.
மூவகைப் பாடல்கள்
ஆளுடையப் பிள்ளையார் திருமும்மணிக்கோவை என்ற நூல் ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூவகைப் பாடல்களைக் கொண்டது. ஆளுடையப் பிள்ளையார் திருவுலாமாலை கலிவெண்பாப் பாடலால் ஆனது. இதில் சம்பந்தர் வீதியில் உலா வந்த பாங்கு நூற்றிப் பதினாறு கண்ணிகளில் விளக்கப்பட்டுள்ளது.
சம்பந்தர் வீதி உலா வரும் அழகை பேதை முதல் பேரிளம் பருவம் வரை உள்ள ஏழு பருவப் பெண்களும் பார்த்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவுடையப் பிள்ளையார் திருத்தொகை பாட்டுடைத் தலைவனைப் பாராட்டிக் கூறும் நூல்.
பக்தர்பால் அன்புள்ளம் கொண்ட ஈசனையும், அவரது அடியார்களையும் பாடிப் பரவியவர் நம்பியாண்டார் நம்பி என்ற சைவ ஆதர்ச புருஷன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT