Last Updated : 08 Dec, 2016 10:34 AM

 

Published : 08 Dec 2016 10:34 AM
Last Updated : 08 Dec 2016 10:34 AM

பைபிள் கதைகள் 30: இறங்கி வந்த வெள்ளை மேகம்

இருநூறு ஆண்டுகளாக எகிப்தியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரவேல் ஜனங்கள் மீது கடவுள் இரக்கம் கொண்டார். அவர்களை அங்கிருந்து மோசேவின் தலைமையில் மீட்டெடுத்தார். செங்கடல் வழியாகத் தப்பித்து சீன் பாலைவனம் வழியாக சீனாய் மலைவரை முன்னேறிய மக்கள் அதன் அடிவாரத்தில் கூடாரங்கள் அமைத்துத் தங்கினார்கள். மோசேக்குக் கடவுள் காட்சியளித்த ஓரேப் சிகரம் அந்த மலையின் மீதே இருந்தது. மோசே அடிக்கடி அந்தப் புனித இடத்துக்குச் சென்று தங்கி கடவுளைத் தியானித்து அவரிடம் பேசிவந்த நிலையில் ஓராண்டு கடந்து சென்றது. மக்களில் ஒரு பகுதியினர் தங்களை மீட்டுவந்த உலகின் ஒரே கடவுளாகிய யகோவா மீது நம்பிக்கை வைத்து பொறுமையுடன் இருந்தனர்.

மற்றவர்களோ பொறுமையிழந்து ஆரோன் உள்ளிட்ட தங்களது மூப்பர்களுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். அவர்களைச் சமாதனப்படுத்தும் பொருட்டே தங்கத்தால் ஆன கன்றுக்குட்டியை செய்ய வேண்டிய கட்டாயம் ஆரோனுக்கு ஏற்பட்டது. இஸ்ரவேல் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தன்னை எப்படி வழிபட வேண்டும் என்பதை கடவுள் மோசே வழியே மக்களுக்குக் கற்பித்தார். மீறக்கூடாத பத்துக் கட்டளைகளைத் தந்தார். அதில் “என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுள் இல்லை. உங்கள் கற்பனையால் கடவுள் எதையும் நீங்கள் உருவாக்கக் கூடாது” என்பதே பிரதான கட்டளையாக இருந்தது. ஆனால் அதையே இந்த நன்றிகெட்ட மக்கள் மீறிவிட்டார்களே என்று கொதித்துப்போனார் மோசே. கோபத்தில் கட்டளைகள் கற்களை உடைத்தெறிந்ததோடு நில்லாமல் தங்கக் கன்றுகுட்டியின் சிலையைத் தீயிலிட்டு உருக்கிப்போட்டார்.

கடவுளுக்கு நினைவூட்டிய மோசே

மோசேயின் கோபமான முகத்தைக் கண்ட மக்கள் பயந்து நடுங்கினார்கள். புதிய கடவுளை உருவாக்கும்படி நிர்பந்தம் செய்து கலகம் உண்டாக்கிய மக்களில் சுமார் மூவாயிரம் பேரை மோசேவின் தலைமையை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியும் இளைஞர்கள் குழு கொன்று குவித்தது. கீழ்ப்படியாத சொந்த மக்களில் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டி நிலை ஏற்பட்டதற்காக மனம் குமைந்த மோசே மீண்டும் கடவுளை நாடி மலை மீது ஏறினார்.

மோசேவைக் கண்டதும் கடவுள் தன் கோபத்தைக் கடும் இடியும் மின்னலுமாக வெளிப்படுத்தினார். அவரிடம் மோசே, “தயவு செய்து நான் கூறுவதைக் கேளும்! என் மக்களில் பலர் பெரும்பாவம் செய்தனர். அவர்கள் தங்கத்தால் ஒரு கற்பனை உருவத்தைச் செய்து வழிபாடு செய்துவிட்டனர். இப்போது அவர்களின் இப்பாவத்தை மன்னித்துவிடும்! நீர் அவர்களை மன்னிக்காவிட்டால், உமது புத்தகத்திலிருந்து எனது பெயரைக் கிறுக்கி அழித்துவிடும்” என்றார்.

ஆனால் கடவுள் மோசேயை நோக்கி, “எனக்கெதிராகப் பாவம் செய்தோரின் பெயர்களை மட்டுமே நான் அழிப்பேன்” என்றார். கடவுளின் கோபம் தணியாதிருப்பதைக் கண்ட மோசே, “இவர்கள் உமது மக்கள். அவர்களை அழித்துவிட வேண்டாம். ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் (யாக்கோபு) ஆகியோரை இந்த இக்கட்டான நேரத்தில் நினைவுகூரும். அவர்கள் உமக்குப் பணிவிடை செய்தனர். உமது பெயரால் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர். ‘நான் உன் ஜனங்களை வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகச் செய்வேன். நான் உன் ஜனங்களுக்கு வாக்களித்த தேசத்தைக் கொடுப்பேன். அத்தேசம் என்றும் அவர்களுக்குரியதாகும்’ என்று நீர் வாக்குறுதி தந்தீர்” என்றான்.

கடவுளை வணங்க ஒரு கூடாரம்

மோசேயின் வேண்டுதலும் நினைவூட்டலும் கடவுளின் கோபத்தைத் தணித்தன. அவர் மக்களை அழிக்கவில்லை. பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “நீயும், இஸ்ரவேல் மக்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள். நான் வாக்களித்த கானான் தேசத்துக்குச் செல்லுங்கள். உங்களுக்கு முன்பாகச் செல்வதற்கு ஒரு தூதனை அனுப்புவேன். கானானியரையும், எமோரியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும், நான் தோற்கடிப்பேன்.

உங்கள் தேசத்தை விட்டு அவர்கள் போகும்படியாகச் செய்வேன். எனவே அத்தேசத்திற்குச் செல்லுங்கள். நீ என்னிடம் பேசவும் உங்கள் மத்தியில் நான் வாழவும் தூய்மையான கூடாரம் ஒன்றை அமைத்துக்கொள்” என்றார். அதை எப்படி அமைக்க வேண்டும் என்பதையும் மோசேவுக்குக் கடவுள் சொல்லித்தந்தார். கடவுளின் அருளையும் வழிகாட்டுதலையும் பெற்றுக்கொண்டு கீழே இறங்கி வந்த மோசே, வாக்களித்த தேசம் நோக்கிப் பயணிக்க மக்களைத் தயார்ப்படுத்தினார். கடவுளுடன் பேசவும், அவரது பிரசன்னம் தங்கள் மத்தியில் இருக்கவும் அவர் கூறியபடியே புனிதக் கூடாரத்தை அமைத்தார்கள்.

‘ஆசரிப்புக் கூடாரம்’ என்று அது அழைக்கப்பட்டது. அதன் உள்ளே சென்று கடவுளுடன் மோசே பேசியபொதெல்லாம் வெள்ளை மேகம் ஒன்று இறங்கி வந்து கூடாரத்தின் மேல் நின்றது. அந்த வனாந்தரத்தில் இடம் விட்டு இடம் செல்லும்போது இந்தக் கூடாரத்தையும் பிரித்து எடுத்துசென்று முகாமிடும் இடத்தில் மீண்டும் அமைத்துக்கொண்டார்.

முதல் குரு

அந்தக் கூடாரத்தின் உள்ளேயிருந்த மூலையில் கடவுளுடன் செய்துகொண்ட உடன்படிக்கைப் பெட்டியை வைத்துக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்துவந்தனர். மோசே உடைத்தெறிந்த பத்துக் கட்டளை கற்களை மறுபடி கடவுள் அவருக்கு உருவாக்கித் தந்தார். அந்தப் புனிதக் கற்கள் இந்தப் பெட்டியின் உள்ளே வைக்கப்பட்டிருந்தன. தவிர, சீன் பாலைவனத்தில் மக்கள் உணவின்றித் தவித்தபோது வானிலிருந்து கடவுள் பொழிந்த மன்னா உணவு நிரப்பட்ட ஒரு மண் ஜாடி ஒன்று கடவுளின் வல்லமையைப் போற்றும் வகையில் அந்தப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.

கூடாரம் அமைக்கப்பட்ட பின் முதன்மை குருவாக மோசேயின் அண்ணன் ஆரோனைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார். கடவுளை வணங்க அவர் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். இஸ்ரவேல் மக்கள் எங்கு முகாமிடுகிறார்களோ அந்த இடத்தின் நடுவில் ஆசரிப்புக் கூடாரம் அமைக்கப்பட்டது. அதைச் சுற்றியே இஸ்ரவேலர்கள் கூடாரங்களில் வசிக்கத் தொடங்கினார்கள்.

சீனாய் மலையிலிருந்து கானான் தேசத்தை நோக்கிப் புறப்பட்ட அவர்கள் கானானை ஓட்டியிருந்த காதேஸ் வனாந்திரப்பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். இஸ்ரவேலர்களின் மூதாதையர்களான ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் ஒரு காலத்தில் வாழ்ந்த நாடுதான் கானான். அங்கே பஞ்சம் ஏற்பட்டதால் யாக்கோபு தன் குடும்பத்துடன் எகிப்துக்குப் புலம்பெயர்ந்து போனார்.

அங்கே யாக்கோபுவின் மகனாகிய ஈசாக்கு ஆளுநராய் இருந்தார். ஆனால் காலம் சுழன்றதில் அங்கே பெருகிய இஸ்ரவேலர்களை ‘வந்தேறி’களாய்க் கருதி அடிமைகள் ஆக்கினார்கள். இப்பொழுது, சுமார் 216 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுளின் வல்லமையுடன் இஸ்ரவேலரைத் திரும்பவும் கானான் நாட்டுக்கு மோசே வழிநடத்திச் செல்கிறார். அவர்களால் அந்த நாட்டுக்குள் அத்தனை சீக்கிரம் நுழைய முடியவில்லை…

(பைபிள் கதைகள் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x