Published : 01 Dec 2016 10:55 AM
Last Updated : 01 Dec 2016 10:55 AM
கடவுள் அருளிய பத்துக் கட்டளைகள் அடங்கிய இரண்டு தட்டையான கற்கள் இஸ்ரவேலரின் வாழ்க்கைச் சட்டங்கள் ஆயின. ஆனால் இந்தப் பத்துக் கட்டளைகளைத் தவிர அன்றாட வாழ்க்கை முறையில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் கடைப்பிடித்து வாழ வேண்டிய இன்னும் ஏராளமான வாழ்க்கைச் சட்டங்களை மொசே வழியாக அருளினார். இவற்றையெல்லாம் கடவுள் சொல்லச் சொல்ல ஒரு சுருளில் எழுதிய மோசே அவற்றை இஸ்ரவேல் மக்கள் கேட்கும்படியாக உரக்க வாசித்தார்.
வேளாண்மையே வாழ்வு
அவற்றில் பல முக்கிய நடைமுறைச் சட்டங்கள் இருந்தாலும் வேளாண் வாழ்வை ஒவ்வொரு இஸ்ரவேலரும் பின்பற்றி வாழ வேண்டும் என்பது முக்கியமாக இருந்தது. “ விதைகளை விதையுங்கள், பயிர்களை அறுவடை செய்யுங்கள். இவ்வாறு ஆறு ஆண்டுகள் நிலத்தைப் பண்படுத்துங்கள். ஆனால் ஏழாவது ஆண்டு நிலத்தைப் பண்படுத்தாதீர்கள்.
நிலம் ஓய்வெடுப்பதற்குரிய காலமாக ஏழாவது ஆண்டு இருக்கட்டும். அந்த ஆண்டில் உங்கள் நிலங்களில் எதையும் விதைக்காதீர்கள். இறைந்த கதிர்களிலிருந்து பயிர்கள் தானாக அந்நிலத்தில் விளைந்தால் அதை ஏழைகள் எடுத்துக்கொள்ளட்டும். இன்னும் மிகுதியான தானியங்களைக் காட்டு மிருகங்களும் சிறு பறவைகளும் உண்ணட்டும். உங்களுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரத் தோப்புக்களையும் அவ்வாறே பயன்படுத்துங்கள்.
அதேபோல் வாரத்தில் ஆறு நாட்கள் மட்டும் உழையுங்கள். ஏழாவது நாளில் ஓய்வு எடுங்கள். உங்கள் பணியாளர்களுக்கு ஓய்வுக்கும், அமைதிக்கும் அது வழி வகுக்கும். உங்கள் மாடுகளும், கழுதைகளும் ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும். இச்சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுங்கள்” என்று வாசித்தார் மோசே. அவற்றைக் கேட்டு மனதில் இருத்திக்கொண்ட மக்கள், “கடவுள் எங்களுக்குக் கொடுத்த சட்டங்களைக் கேட்டோம். அவற்றுக்குக் கீழ்ப்படிய சம்மதிக்கிறோம்” என்றார்கள்.
கடவுளை எப்படி வழிபடுவது?
வாழ்க்கைத் தொழில் பற்றி கடவுளின் சட்டங்களை வாசித்ததோடு நில்லாமல், கடவுள் தன்னை எப்படி வழிபட வேண்டும் என்பதையும் நமக்குச் சட்டமாக தந்திருக்கிறார் என்பதை வாசிக்கத் தொடங்கினார்.
“ ஒவ்வொரு ஆண்டும் மூன்று முக்கிய விடுமுறைகள் உங்களுக்கு இருக்கும். அந்நாட்களில் என்னைத் தொழுதுகொள்ளும்படி புனிதமான இடத்தில் நீங்கள் அனைவரும் ஒன்று கூடுங்கள். அவற்றை மூன்று பண்டிகைகளாகக் கொண்டாடினால், என் குழந்தைகள் என் விருப்பப்படி நடக்கிறார்கள் என நான் மகிழ்வேன். முதலில் நீங்கள் கொண்டாட வேண்டியது புளிப்பில்லா அப்பப் பண்டிகை. புளிப்புச் சேராத ரொட்டியை நீங்கள் ஏழு நாட்கள் உண்ண வேண்டும். ஆபிப் மாதத்தில் இதைச் செய்ய வேண்டும். ஏனெனில் அம்மாதத்தில்தான் நீங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு அந்த நாட்டை விட்டு வெளியேறினீர்கள்.
“ இரண்டாவது பெந்தகோஸ்தே பண்டிகையை உங்களுக்காக உருவாக்குகிறேன். இது ஆண்டின் இரண்டாவது விடுமுறை நாளாக இருக்கும். உங்கள் வயல்களில் அறுவடை தொடங்கும் கோடையின் ஆரம்பத்தில் இது வரும்.
“மூன்றாவது பண்டிகைக்கு ‘அடைக்கலக் கூடாரப் பண்டிகை’ எனப் பெயரிட்டிருக்கிறேன்.. ஆண்டின் மூன்றாம் விடுமுறையாக இருக்கும். இலையுதிர் காலத்தில் வரும். அறுவடைக் காலத்தில் முதல் அறுவடையை என் வீட்டிற்குக் (பரிசுத்த கூடாரத்துக்கு) கொண்டுவந்து எனக்கு அதைப் பலியாகச் செலுத்துங்கள். உங்கள் உழைப்பின் வாசனையை நான் நுகர்ந்து மகிழ்வேன்” என்கிறார் கடவுள் என்று மோசே வாசித்து முடித்தார்.
“மிகச் சிறந்த சட்டங்களையும் புனிதமானதும் அர்த்தம் மிக்கதுமான பண்டிகளையும் நாம் மகிழ்ச்சியாக இருக்கும்படி கடவுள் உண்டாக்கியிருக்கிறார். அவரை என்றென்றைக்கும் பின்பற்றி வாழ்வோம்” என்று கூறி மக்கள் ஆரவாரித்தனர்.
கடவுளாய் மாறிய கன்றுக்குட்டி
மக்களின் உறுதிமொழியால் பரலோகத் தந்தையாகிய யோகேவா மகிழ்ந்திருப்பார் என்று மனம் நிறைந்த மோசே, கடவுள் அளித்த பத்துக் கட்டளைக் கற்கள் இரண்டையும் நெஞ்சோரம் அணைத்தபடி மீண்டும் கடவுளிடம் உரையாடப் புனிதமான ஓரேப் மலைச்சிகரத்துக்கு ஏறிப்போனார். அங்கே கடவுள் காட்சியருளிய இடத்தில் முழந்தாளிட்டு அவர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார்
மோசே மலைக்கு ஏறிப் போய் நாட்கள் மாதங்களாய் கரையத் தொடங்கின. “மோசேக்கு என்ன நடந்துவிட்டதோ தெரியவில்லை. இந்த நாட்டிலிருந்து வெளியேறி கடவுள் நமக்கு வாக்களித்த இடத்துக்கு நம்மைக் கூட்டிச்செல்ல ஒரு கடவுளை நாம் உருவாக்கிக்கொள்வோம் வாருங்கள்” என்று சில மூத்த குடிமக்கள் கூற அதைப் பெருந்திரளான மக்கள் ஆதரிக்கிறார்கள். மக்களின் எழுச்சியைக் கண்டு பயந்த மோசேயின் அண்ணன் ஆரோனும் அதற்கு ‘சரி’ என்று தலையாட்டுகிறார். “நீங்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களைக் கழற்றி, என்னிடம் கொண்டு வாருங்கள்” என்கிறார். மக்களும் அவற்றை ஆரோனிடம் கொண்டுவந்து கொடுக்கிறார்கள்.
இப்படிச் சேர்ந்த ஆபரணங்கள் அனைத்தையும் உருக்கி ஒரு தங்கக் கன்றுக்குட்டியைச் செய்கிறார் ஆரோன். பளபளக்கும் கன்றுக்குட்டியின் சிலையைக் கண்டதும் உணர்ச்சிப் பெருக்கால் உந்தப்பட்ட இஸ்ரவேல் மக்கள், “எகிப்திலிருந்து எங்களை அழைத்து வந்த எங்கள் கடவுள் இதுவே” என்று கூறி ஆர்ப்பரித்தார்கள். அத்துடன் நிற்காமல் மக்கள் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்து குடித்துக் கும்மாளமிட்டுக் கொண்டாடி, அந்தக் கன்றுக்குட்டியை வணங்கத் தொடங்கினார்கள். மக்களில் பலரும் மோசேவால் நியமிக்கப்பட்ட காவல் வீரர்கள் சிலரும் கடவுளுக்கு விரோதமான இந்தச் செய்கையால் கவலையுடன் செய்வதறியாது திகைக்கு விலகி நின்றார்கள்.
கடவுளின் கோபம் வெளிப்பட்டது
நன்றி மறந்த தன் மக்களில் ஒரு பகுதியினரின் இந்தச் செய்கைகளைக் கண்டு கடவுள் மிகவும் கோபமடைந்தார். அதனால் அவர் மோசேயிடம், “சீக்கிரமாய்க் கீழே போ, என் கட்டளைகளை மறந்து ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தை இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று என்றார்.
கடவுளின் வருத்தம் தொனித்த வார்த்தைகளைக் கேட்டு அவசர அவசரமாக மலையிலிருந்து கீழே இறங்கி வந்தார். கன்றுக்குட்டியின் முன்னால் மக்களின் கொண்டாண்டத்தைக் கண்ட மோசேவுக்குக் கடுங்கோபம் வந்தது. பத்துக் கட்டளைகள் எழுதப்பட்ட அந்த இரண்டு புனிமான தட்டையான கற்களைக் கீழே தூக்கி வீசுகிறார். அவை சுக்கல் நூறாக உடைந்து தெறித்து விழுகின்றன.
ஓடிச் சென்று அந்தக் கன்றுக்குட்டியின் சிலையைக் கைப்பற்றிய மோசே அதை உருக்கி அதைப் பொடியாக்கி விதைப்புக்குத் தகுதியற்ற களர் நிலத்தில் கொட்டி விடுகிறார். கடவுளின் கோபத்தை, மோசேவின் முகத்தில் கண்ட மக்கள் அனைவரும் நடுங்கிப்போய் நின்றார்கள்.
(பைபிள் கதைகள் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT