Published : 02 Oct 2014 01:42 PM
Last Updated : 02 Oct 2014 01:42 PM
சித்தார்த்தர் துறவு பூண்டுவிடக் கூடாது என்பதற்காக, அவருடைய தந்தை சுத்தோதனர் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி, செயற்கையான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்திருந்தார். இதையெல்லாம் தாண்டி ஒரு நாள் சமூகத்தில் நடக்கும் விஷயங்களைக் கண்டு சித்தார்த்தர் அரண் மனை திரும்பினார்.
இளமையும் நோயும்
வெளியே தான் கண்ட காட்சிகளைப் பற்றிச் சிந்தித்தார். மனிதராகப் பிறந்த மக்கள் மூப்படைந்து நரை திரை அடைகிறார்கள். முதுமையடைந்தவர்களை மக்கள் இகழ்ந்து வெறுக்கிறார்கள். எல்லோருக்கும் நரை திரை மூப்பு வருகிறது. நானும் நரை திரை மூப்பு அடைவேன். அதனால் முதுமையைக் கண்டு அருவருப்பு கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் நினைத்தபோது அவருக்கிருந்த யவன மதம் (இளமை மீதான பற்று) அவரது மனத்தை விட்டு அகன்றது.
பிறகு நோயாளியைப் பற்றி நினைத்தார். நோயும் பிணியும் எல்லோருக்கும் வருகின்றன. பிணியாளர்களைக் கண்டால் மற்றவர்கள் வெறுப்படைகிறார்கள். அப்படி வெறுப்பது தவறு. தானும் நோயிலிருந்தும் பிணிகளிலிருந்தும் தப்ப முடியாது என்று எண்ணினார். அப்போது அவருக்கிருந்த ஆரோக்கிய மதம் (உடம்பின் மீதான பற்று) அவரை விட்டு அகன்றது.
இறப்பும் இல்லறமும்
பின்னர்ச் சடலத்தைப் பற்றி நினைத்தார். சாவு எல்லோருக்கும் ஏற்படுகிறது. ஆனால், அதை உணராத வர்கள் சடலத்தைக் காணும்போது அதை வெறுத்து அருவருப்படைகிறார்கள். அவ்வாறு வெறுப்பது தவறு. சாவிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது. எனக்கும் மரணம் உண்டு என்று எண்ணியபோது அவருக்கிருந்த ஜீவித மதம் (வாழ்க்கை பற்று) அவரை விட்டு அகன்றது.
கடைசியாகச் சந்நியாசியைப் பற்றி யோசித்தார். இல்வாழ்க்கையால் தீய எண்ணங்களும் தீய செயல்களும் ஏற்படுகின்றன. இல்லறத்தில் உயரிய எண்ணங்களுக்கும் உயர்ந்த ஒழுக்கத்துக்கும் இடமில்லை. உயர்ந்த எண்ணங்களுக்கும் உயர்ந்த ஒழுக்கத்துக்கும் துறவறமே நல்லது, என்று நினைத்து அதில் விருப்பம் கொண்டார்.
சிந்தனை
இப்படித் தனக்குள் எண்ணியபடியே சித்தார்த்தர் பூஞ்சோலையைச் சென்றடைந்தார். அங்கு இனிமையான பல இயற்கைக் காட்சிகளைக் கண்டார். மாலையில் தெளிந்த நீருள்ள குளத்திலே நீராடினார். பிறகு ஒரு கற்பாறையில் அமர்ந்து உடம்பை நன்றாக அலங்காரம் செய்துகொள்ள வேண்டுமென்று நினைத்தார். அப்போது பணிவிடையாளர் வந்து, அவரைத் தேவேந்திரன் போல அலங்காரம் செய்தனர். ஆனால், அப்போதும் இல்லற வாழ்க்கையின் துன்பங்களும் துறவற வாழ்க்கையின் மேன்மைகளும் அவரது மனத்தைவிட்டு அகலாமல் இருந்தன. அவர் மனம் சிந்தனையில் ஆழ்ந்துபோனது.
நன்றி: மயிலை சீனி. வேங்கடசாமியின் "கவுதம புத்தர்"
தொகுப்பு: ஆதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT