Published : 06 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Feb 2014 12:00 AM

எது ஆன்மிகம்?- சத்குரு ஜக்கி வாசுதேவ்

இந்த உலகத்தில் இன்று மிகவும் சீர்குலைக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளில் ஒன்று... ஆன்மீகம்! பல லட்சம் வழிகளில் இந்தச் சொல், அறியாமையாலோ, அலட்சியத்தாலோ, சரியாகவும் தவறாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, ஆன்மீகம் என்பதே அவசியமா இல்லையா என்று கேள்விகளும் குழப்பங்களும் எழுந்திருக்கின்றன.

நீங்கள் நினைப்பதெல்லாம் ஆன்மீகம் ஆகாது. நீங்கள் கடவுளைப் பற்றி நினைத்தாலும் அது ஆன்மீகச் சிந்தனை அல்ல. ஏனெனில், சிந்தனை என்பதே ஆன்மீகம் சார்ந்தது அல்ல. அது உளவியல் சார்ந்தது. உடல், மனம், உணர்வுகள் ஆகியவை வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்கள். அவற்றைச் சரியென்றும் தவறென்றும் வரையறுத்துவிட முடியாது.

உங்கள் ஸ்தூல எல்லைக்கு உட்பட்டது அல்ல ஆன்மீகம். மனஅமைதியைத் தேடுவதற்கு ஆன்மீகம் என்று பெயரல்ல. அமைதி என்பது உடல் மற்றும் மன எல்லைகளைச் சார்ந்தது மட்டும்தான். உடலுக்கும் மனதுக்கும் உங்களால் சில இடையூறுகளை ஏற்படுத்த முடியும். இந்த இரண்டையும் சாராத ஒன்றுக்கு எந்த இடையூறையும் ஏற்படுத்த இயலாது. எனவே ஆன்மீகம் என்பது அமைதியைத் தேடுவதும் இல்லை. ஆன்மீகத்துக்கு அமைதி தேவையும் இல்லை.

அனுபவத்துக்குள் வராத ஒன்று

ஆன்மீகம் என்று சொல்கிறபோது, ஒரு மனிதரின் அனுபவத்துக்குள் வராத ஒன்றைப் பற்றி பேசுகிறோம். உடல், மனம், உணர்வுகள், சக்தி ஆகியவை சேர்ந்து ஸ்தூல உடலாகச் செயல்படுகின்றன. இந்த உடல் மட்டுமின்றி மற்றவையும் இந்தப் பிரபஞ்சமும் கூட இதே கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், அவை உருவாகியுள்ள கலவையின் அடிப்படையில் தனி மனிதராகத் தோன்றுகிறது. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் அற்புதமான ஒருங்கிணைப்பே மனித வடிவம். இது பஞ்சபூதத்தின் விளையாட்டுதான். ஆனால் தன்னலளவிலேயே முழுமை பெறும் விதமாக மிக ஆழமான முறையில் அது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இதைப் படைத்தவர் உண்மையிலேயே இருக்கிறாரா என்று நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள் என்றால், இந்தப் படைப்பு மிகச் சரியாகப் படைக்கப்பட்டிருப்பதாக அர்த்தம். காலையும் மாலையும் பிரார்த்தனை செய்யாமல், இந்தப் படைப்பில் எதையுமே உங்களால் செய்ய முடியாதென்றால், படைப்பில் குறை இருப்பதாகப் பொருள். ஆனால் படைத்தவரையே மறந்துவிட்டாலும் இந்தப் பிரபஞ்சம் நிகழுமென்றால், அதுதான் படைப்பின் அற்புதம்.

இந்த முழுமையை மனிதர்கள் உணர்கிறபோது என்ன சிக்கல் ஏற்படுகிறதென்றால், அவர்கள் கடவுளை மறந்துவிடுகிறார்களே தவிர, வேறு எதையாவது சார்ந்தே வாழத் தொடங்குகிறார்கள். வெளியிலிருந்து எதுவும் தேவைப்படாமல், எந்த ஓர் உறவையோ, உணர்வு நிலையில் அல்லது உளவியல் நிலையில் எந்தவோர் உதவியையோ சார்ந்திராமல் தனித்தன்மையோடு இருந்தால், நீங்களும் படைத்தவரின் தன்மையை எட்டுகிறீர்கள். படைப்பின் ஒரு துளி, பரிணாம வளர்ச்சியால் நிலைமாற்றம் கண்டு, படைத்தவராகவே மாறிவிடுகிறது.

ஏன் எல்லாருக்கும் நிகழ்வதில்லை?

இது பலருக்கும் ஏன் நிகழ்வதில்லை என்றால், அவர்கள் எல்லாவற்றிலும் பாதி விளையாட்டுத்தான் விளையாடுகிறார்கள். எந்தவொன்றில் நீங்கள் ஈடுபட்டாலும் உங்கள் படைப்பின் எல்லைகளை நீங்கள் தகர்த்துவிட முடியும். அது ஆன்மீக விளையாட்டாக இருந்தாலும் லௌகீக விளையாட்டாக இருந்தாலும், முழுமையாக 100% ஈடுபடுவீர்களேயானால் உங்கள் உச்சத்தை உங்களால் தொடமுடியும்.

ஆனால், பெரும்பாலான மனிதர்களால் ஒரே நிலையில் நீண்ட நேரம் இருக்க முடிவதில்லை. மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரே நிலையில் நீங்கள் 24 மணி நேரம் இருந்தால், உங்களது உச்சநிலையைத் தொட்டுவிடுவீர்கள்.

காற்றில் குமிழிகளை ஊதும்போது குமிழிக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றுதான் இருக்கிறது. ஆனால் அந்தக் குமிழ் ஓர் அடையாளத்துடன் இருக்கிறது. அதேபோல, மனிதனுக்கு உள்ளும் வெளியிலும் ஒன்றேதான் இருக்கிறது. ஆனால் மிகவும் நுட்பமான தடை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வளவு முயன்றாலும் அந்தத் தடை இருக்கவே செய்கிறது. இதைக் கடந்து செல்ல வேண்டுமென்றால் அதற்கொரு வழி இருக்கிறது. தெரிந்துகொள்ள விரும்பினால் அதற்கு வேறு வழி இருக்கிறது. கடந்து போகாத ஒருவரால், தெரிந்துகொள்ள முடியாது.

நான்கு பரிமாணங்கள்

யோகக் கலைக்கு நான்கு பரிமாணங்கள் உண்டு. ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம், கிரியா மார்க்கம். இந்த நான்கு பரிமாணங்களும் சமநிலையில் கையாளப்பட்டால், நீங்கள் அனுபவங்களின் உச்சத்தைத் தொடுகிற அதே நேரம், சமூகத்திலும் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.

மனம், உணர்வு, சக்திநிலை ஆகியவை சமநிலையில் இயங்க வேண்டும். அப்போதுதான் மனிதர்கள் முழுமையான ஆனந்தத்தில் இருந்து கொண்டே சிறந்த செயல்திறனோடும் இயங்க முடியும். இன்றைய உலகிற்கு இதுதான் மிகவும் தேவை.

நீங்கள் பரவசமாக இருக்கிறபோது, உங்கள் இறுக்கங்கள் தளர்ந்துவிடுகின்றன. முழுமையாக ஆனந்தத்தில் இருப்பவர்களை நீங்கள் களிமண் போல உங்களுக்கு வேண்டிய விதங்களில் வடிவமைக்கலாம். .

ஆன்மீகத்தில் ஈடுபடுகிற பலரும் அழகான இடங்களையோ, அமைதியான பகுதிகளையோ தேடிச் செல்கிறார்கள், அங்கே அவர்கள் ஆனந்தமாக உணர்கிறார்கள். ஆனால், திரும்பிய பிறகு, பழைய நிலைக்கே செல்கிறார்கள். ஏனென்றால், அவர்களின் தன்மையில் தீவிரமான பரவசத்தை உணரவில்லை. அவர்களின் அணுகுமுறை மட்டுமே மாறுகிறது. அணுகுமுறையை மாற்றுவது ஆன்மிகம் அல்ல. உங்கள் குமிழியை உடைத்துக்கொண்டு விடுதலை அடைவதற்குத்தான் ஆன்மிகம் என்று பெயர். உங்களுக்குள்ளேயும் உங்களைச் சுற்றியும் நீங்கள் விரும்புவதை உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த நிலை வரவேண்டுமேயானால் பரவசமான நிலைகளுக்குப் போவதுதான் வழி.

மன்சூரின் கதை

மன்சூர் என்று அழைக்கப்பட்டவர் அல்ஹலாஜ். இவர் பிறந்த பாஸ்ரா, இன்று யுத்தப் பகுதியாகி பெருமளவு சிதைக்கப்பட்டுவிட்டது. மற்றபடி பண்பாட்டளவில் அது மகத்தான இடம். சூஃபி முறை இங்குதான் பிறந்தது. அல்ஹலாஜின் தந்தை ஒரு பெரிய அறிஞர். அவரிடமே அல்ஹலாஜ் அனைத்தையும் கற்றுக்கொண்டார். தான் கற்றுக் கொண்டதை பிறருக்குப் போதிக்க விரும்பியதால், குஜராத்துக்கு வந்தார்.

அங்கே, முழுமையான ஆனந்தத்தில் இருந்த பல ஞானிகளைக் கண்டார். அங்கு சில ஆண்டுகள் இருந்த பிறகு, அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக மீண்டும் பாஸ்ரா திரும்பினார்.

அப்போது அவர் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார். அவர் வாழ்ந்திருந்த சமூகத்தில் கோவணம் மட்டுமே அணிந்திருப்பது பைத்தியக்காரத்தனமாகக் கருதப்பட்டது. அவர் அங்கிருந்தவர்களிடம் “நான் என்ற ஒன்றே இல்லை” என்று பேசத் தொடங்கினார். அவரை, பைத்தியம் என்று கருதியவர்கள் அவரிடமிருந்து விலகியிருந்தார்களே தவிர, ஒன்றும் சொல்லவில்லை.

ஆனால், கடைசியில் “நானே கடவுள்” என்று அவர் சொன்னபோது, சிக்கல் தொடங்கியது. அவர்மேல் விதவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அனைவரும் காபாவை வலம் வந்தபோது, அவர் வேறு ஓர் இடத்தில் வேறு ஒரு கல்லை நிறுவினார். ஒருவேளை அவர் அதனைப் பிரதிஷ்டை செய்து ஒரே சக்தி நிலையை உணர்ந்திருக்கக் கூடும். “ஒரே இடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது, நீங்கள் இந்தக் கல்லையும் வலம் வரலாம்” என்றார். அதன் பிறகு கடும் தண்டனைகள் துவங்கின.

ஏறக்குறைய உயிரோடு அவர் தோலையே உரித்தார்கள். அவரை இடுப்பு வரை புதைத்து வைத்துவிட்டு கடந்து போகும் ஒவ்வொருவரும் அவர் மீது கல்லெறிய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர். அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கடந்து போனார். அவருக்குக் கல்லெறிய விருப்பமில்லை. எனவே மன்சூர் மீது ஒரு மலரை எறிந்தார். மன்சூருக்குள்ளிருந்து கவிதை வெடித்தது. “இந்தக் கற்களெல்லாம் என்னைக் காயம் செய்யவில்லை. ஏனெனில் அவை அறியாதவர்களால் எறியப்பட்டவை. ஆனால் என்னை அறிந்திருந்தும் நீ எறிந்த மலர் என்னைக் காயப்படுத்திவிட்டது” என்றார்.

பைத்தியக்காரத்தனம் என்பது என்ன? நீங்கள் வாழ்வை அறிந்த வகையிலிருந்து வேறு ஒரு நிலைக்கு ஒருவர் எல்லை தாண்டிச் சென்றிருக்கிறார். கீழே இருக்கிற எல்லைகளை உடைத்திருக்கிறார் என்றால், அவர் பைத்தியமாக இருக்கிறார். பைத்தியம் என்பது எப்போதுமே மனம் சார்ந்ததுதான். மனம் என்ற ஒன்று இருந்தால்தான் நீங்கள் பைத்தியமாக முடியும். மனதை நீங்கள் கடந்து போனால் மன்சூர் போலவோ ஏசுநாதர் போலவோ ஆகிவிடுவீர்கள்.

பைத்தியக்காரத்தனம், தர்க்க அறிவுக்கு உட்பட்டது. ஞானோதயம் அனைத்தையும் கடந்தது. ஒன்றுபட்ட தன்மையில் இருப்பதை உங்களால் சிந்திக்க முடியாது. பிரபஞ்சத்தில் என்ன நிகழ்ந்தாலும் அது உங்கள் வழியாக பிரவாகம் எடுக்கிறது.

எதையும் உங்களால் உள்வாங்க முடியும், எதையும் உங்களால் உணர முடியும். தீவிரம் நிலையானதாக இருந்தால் அதுவே விடுதலையை நிகழ்த்தும். ஆன்மீகம் என்பது அமைதியைத் தேடுவதற்கு அல்ல, அது உங்கள் உச்சத்தைத் தொடுவதற்கு!

சத்குருவின் வலைப்பக்கம்: www.anandalai.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x