Published : 26 Dec 2013 12:00 AM
Last Updated : 26 Dec 2013 12:00 AM
வழிபாடு எத்தனை உன்னதமானதோ, அதைச் சென்றடைகிற வழியில் நேரும் நிகழ்வுகளும் அத்தனை உன்னதமானவையே. அந்த நிகழ்வுகள்தான் வழிபாட்டையும் வாழ்க்கையையும் அழகானதாக்கிவிடுகின்றன.
இறைவனின் தோள்களையும் திருவடிகளையும் அலங்கரிக்கிற மலர்களைச் சேகரிப்பதில் கிடைக்கிற மகிழ்வும் நிறைவும் வேறெதிலும் கிடைக்காதவை. செவ்வரளி, சம்பங்கி, மல்லிகை, முல்லை, ரோஜா, துளசி, வில்வம் ஆகியவற்றைத் தொடுக்கும்போதே, ‘நான் இறைவனுக்குச் சொந்தம்’ என்ற பெருமிதத்தை மலர்களின் முகத்தில் காணலாம். தொடுத்த சரங்களை இறைவனுக்குச் சூடிப்பார்க்கிறபோது ஏற்படும் ஆனந்தம் அலாதியானது.
இறைவன் உறைந்திருக்கும் இடத்தை, பசுஞ்சாணத்தாலோ, தெளிந்த நீராலோ மெழுகி, மாக்கோலமிடுவதிலும் ஒரு நிறைவு இருக்கத்தான் செய்கிறது. பெரியவர்கள் கோலமிடுவது, வீட்டுக் குழந்தைகளுக்கெல்லாம் வேடிக்கை நிறைந்த வாடிக்கை. கோலத்தில் நிறைந்திருக்கும் அரிசியை எடுக்க வரிசையாக வரும் எறும்புகள், இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள்போலவே தோன்றும்.
இறை வடிவங்களுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இடும்போதே, நம்மையறியாமலேயே பக்தியின் பாதையில் மனம் சென்றுவிடும்.
இறைவனுக்கான நிவேதனங்களைத் தயாரிப்பதிலும் வழிபாட்டின் பரவசத்தை உணரமுடியும். பொங்கலோ, அக்காரவடிசலோ எதுவாக இருந்தாலும் இறைவனுக்கு என்று செய்யப்படும்போது அவை சுவைமிகுந்ததாகவே தயாராகிவிடும்.
விளக்கேற்றும் தருணம், வாழ்வின் கவலைகளை எல்லாம் மறக்கடித்துவிடும். ஆடாமல், அசையாமல் நின்று நிதானித்து எரியும் விளக்கின் முன்னால் அமைதியுடன் உட்கார்ந்திருப்பதைவிட வேறெந்த தவத்தைச் செய்துவிட முடியும்? அந்தப் பேரமைதியும், மனதுள் வியாபித்து நிற்கும் இறைவனின் பேருருவமும் வழிபாட்டை நிறைவுபெறச் செய்துவிடும்.
ஒவ்வொரு இறை வடிவத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தையோ, அணிகலனையோ, ஆயுதத்தையோ பொருத்திப் பார்க்கும் மரபு, வழிபாடு துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. இந்த மார்கழி மாதத்தில் ஆண்டாள் அருளிச்சென்ற திருப்பாவையைப் பெண்கள் அனைவரும் பாடி மகிழ்வர். பனி விலகாத, அதிகாலையில் நீராடி, பூச்சூடி பெண்கள் பாவை பாடுவதைக் கேட்பதே ஒரு வழிபாடுதான்.
திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் மட்டுமல்ல ஆண்டாளின் சிறப்பு. சாய்ந்த கொண்டையும், அவரது தோளில் வீற்றிருக்கும் கிளியும் ஆண்டாளின் அடையாளங்களே. வில்லிப்புத்தூரில் குடிகொண்டிருக்கும் ஆண்டாளுக்குத் தினம் தினம் ஒரு கிளி செய்யப்படுகிறது. நாகமல்லிகை, நந்தியாவட்டை, ஏழிலைக்கிழங்கு, வெள்ளரளி, செவ்வரளி ஆகியவற்றின் இலைகளைச் சேர்ந்து கிளி பின்னப்படுகிறது. ஆண்டாளின் தோளை அலங்கரிக்கும் இந்தக் கிளியைப் பெறுவதற்கு பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
முதல்நாள் வரை ஒரு செடியில் இலையாக இருந்தது, இன்று ஆண்டாள் தோளில் கிளியாக இருக்கிறது. இதுவும் வழிபாட்டின் மகிமையே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment