Published : 09 Oct 2014 11:50 AM
Last Updated : 09 Oct 2014 11:50 AM
மட்டபல்லிக்குச் சென்று சேர்ந்த நேரமோ நடு நிசி. அந்த இரவு நேரத்திலும் பசுக் கூட்டம் அசை போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது. சில்லென்று வீசிய காற்றில் சந்தன வாசம். ஸ்தம்பங்களில் நிலவொளியில் லஷ்மி நரசிம்ம தரிசனம்.
முப்பத்திரண்டு ஸ்தம்பங்களைச் சுற்றிக்கொண்டு சென்றபோது, சந்தனக் காப்பிடப்பட்ட முப்பத்திரண்டு நரசிம்மத் திருக்கோலங்களின் தரிசனத்தையும் பெற முடிந்தது.
இங்கிருந்து சில படிகள் இறங்கிச் சென்றால் சிலுசிலுக்கும் அலைகளுடன் அமைதியாய்த் தவழ்கிறது கிருஷ்ணா நதி. அதன் கரையில் காக்கும் கடவுளாய் எம்பெருமான் மட்டபல்லி நாதன், தாயார் சமேதராகக் காட்சி அளிக்கும் கோபுர தரிசனம். அருகே பக்த சக்கரவர்த்தி பிரஹல்லாத சுவாமி சிறுவனாய். காடும் மலையும், நீரும் நிலமும், அமைதியும் இணைந்த அற்புதமான ஆன்மிக அனுபவம்.
சிறிது நேரம் கண் அயர்ந்த பின் அருணோதயத்தில் கிருஷ்ணா நதி ஸ்நானம். அழகான பாதுகாப்பான படித்துறை. சிறிய மீன்கள் குடைந்து விளையாட, குஞ்சு மீன்கள் கூட்டம் கூட்டமாக ஜதி போடுகின்றன. குளிருமோ என்ற அச்சம் ஸ்நானத்திற்குச் சிறிய தடை போடுகிறது. மட்டபல்லி நாதனை விரைவில் காண மனம் விழைவதால் தயக்கத்தைத் தள்ளிவிட்டு சூரியனை நோக்கியபடியே மூன்று முழுக்கு போட்டுத் திரும்பிப் பார்த்தால் பரத்வாஜ மகரிஷி தியானக் குகை இருக்கும் திசை காடாய்க் காட்சி அளிக்கிறது.
அத்திசை நோக்கிக் கை கூப்பி ஆச்சார்யனை வணங்கி, மேலே ஏறி வந்தால் கோவில் திருவாசல். பொதுவாக ஈர உடையுடன் சென்றால் அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும். இங்கு கருடனும் ஆஞ்சனேயரும் சந்நிதியில் அருகருகே நின்ற திருக்கோலத்தில் கோவில் கொண்டுள்ளார்கள்.
இச்சன்னதியை துவஜ ஸ்தம்பத்துடன் சேர்த்து ஈர உடையுடன் 32 முறை வலம் வந்தால் பித்ரு தோஷம் உட்பட பல தோஷங்கள் நீங்கும் என்று கூறுகிறார்கள். இங்கு பதினோரு நாட்கள் தங்கி, நாளொன்றுக்கு மூன்று வேளைகள் என, வேளைக்கு 32 முறை வீதம் வலம் வர வேண்டும் என்பது நியதி.
தங்கும் வசதியை அற்புதமாகச் செய்து கொடுக்கிறது ஸ்ரீமுக்கூர் சுவாமிகளின் மட்டபல்லி யக்ஞ வாடிகை. தங்குமிடத்திற்கு வாடகை இல்லை. பராமரிப்புக்காகச் சிறு தொகை மட்டுமே பெற்றுக்கொள்ளப்படுகிறது. தரமான உணவு. நல்ல பாதுகாப்பு. சந்நிதானத்தில் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியாரின் நாலடி உயரத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் சிலாரூபம். இவர் நிகழ்த்திய நூற்றியெட்டிற்கும் மேற்பட்ட சுவாதி யக்ஞங்களில், யக்ஞ மூர்த்தியாக இருந்த லஷ்மி நரசிம்மர், இன்றும் மாதந்தோறும் சுவாதித் திருமஞ்சனம் பெற்றுக்கொண்டு அழகுறக் காட்சியளிக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளன ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள். இந்த ஐந்து நரசிம்மர்களும் தம்மைக் காட்டிக்கொண்டது ஸ்ரீ உ.வே. முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார் என்ற புகழ் பெற்ற நரசிம்ம உபாசகரிடம். இவர் உலக நன்மைக்காக நரசிம்மரின் அவதார தினமான சுவாதி நட்சத்திரங்களில் நூற்றியெட்டிற்கும் மேலான யக்ஞங்களை நடத்தியுள்ளார்.
இவற்றில் சில, பிரபல நரசிம்ம ஷேத்திரங்களான, மங்களகிரி, வேதாத்ரி, கடிகாசலம் என்ற சோளிங்கர், அந்தர்வேதி, யாதகிரி, ஷோபநாத்ரி, வாடபல்லி, ஸிம்ஹாசலம், நைமிசாரண்யம், பிருந்தாவனம், ரங்கம், நங்கைநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.
மட்டபல்லியில் சுயம்புவாகத் தோன்றிய நரசிம்மரை அனுபவித்து வர்ணிக்கிறார் ஸ்ரீலஷ்மி நரசிம்மாச்சாரியார். `திருத்தமான மூக்கு எம்பெருமானுக்கு. இரண்டு நேத்திரமும் விசாலமான நேத்திரம். எத்தனை பக்தர்கள் வந்தாலும் கொள்ளக்கூடிய திருநேத்திரம். அத்தகைய அழகை மட்டபல்லியிலே பார்க்கலாம்’ என்று விவரிக்கிறார்.
இங்குதான் யக்ஞ வாடிகை 32 ஸ்தம்பங்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை இங்கு நிர்மாணித்தவர்கள் ஸ்ரீ உ.வே.லஷ்மி நரசிம்மாச்சாரியார் சுவாமி வரையறுத்தபடி அவரது குமாரர் எம்.எல். சீனிவாசன் தலைமையிலான யக்ஞ குடும்பத்தினர். இதனை பக்தர்கள் வசதியாகத் தங்கும் வண்ணம் திறம்பட நிர்வகிப்பது இவரது குடும்பத்தினர்.
இப்போதும் டோலோற்சவங்களை நிகழ்த்திவரும் சீனிவாசன், இந்நிகழ்ச்சிகளின்பொழுது, 108 சுவாதி யக்ஞங்களில் தன் தந்தையுடன் ஏற்பட்ட அனுபவங்களில் சிலவற்றை மெய் சிலிர்க்க நினைவுகூர்கிறார். இந்த யக்ஞங்கள் நிகழ்ந்தபோது முக்கூர் சுவாமிகள் பயணித்த 8888 ஆம்னி வேன் இன்றும் மட்டபல்லியில் காட்சிக்கு இருக்கிறது.
ஒரு முறை கேதவரம் லஷ்மி நரசிம்மரைத் தேடிக் கண்டுபிடிக்கச் சென்றபோது, இந்த வேனில் பெட்ரோல் இருப்பு ஐந்து கி.மீ தூரம் கூட செல்ல வழியில்லாத அளவுக்குக் குறைந்துவிட்டது. அது கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள அடர்ந்த காடு. நேரம் இருள் கவியத் தொடங்கிய மாலை. ஆளரவமற்ற அவ்விடத்தில் இருந்து சுற்றுப்பட்டு நாற்பது கி.மீ தூரத்திற்கு பெட்ரோல் கிடைக்க வாய்ப்பே இல்லை.
சாலைகளோ வேன் வேகமாக செல்ல முடியாத அளவிற்குக் கரடு முரடு. செய்வதறியாது திகைத்துப்போன வேனின் நித்ய சாரதி சீனிவாசன் தொடர்ந்து சுவாமிகளின் ஆணைப்படி வேனை இயக்கியுள்ளார். பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு இரண்டடி முன்னால் வரை வந்து பின்னர் நின்றுவிட்டதாம் அந்த வேன். இது சுவாமிகள், லஷ்மி நரசிம்மர் மீது கொண்ட பூரண விசுவாசத்தினால் கிடைத்த அருள்தான் என்று மெய் சிலிர்க்கிறார் சீனிவாசன்.
(பயணம் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT