Published : 11 Aug 2016 11:08 AM
Last Updated : 11 Aug 2016 11:08 AM
கிருஷ்ண புஷ்கரம்: ஆகஸ்ட் 12
தமிழகத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பமேளாவைப் போல், ஆந்திராவில் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது கிருஷ்ண புஷ்கரம். லட்சக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ணா நதியின் பல்வேறு படித்துறைகளில் புனித நீராடுவதுதான் முதன்மையான வழிபாடாகும். கிருஷ்ண புஷ்கரம் 2016 ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கி பத்து நாட்களுக்கு நடைபெறும்.
இதற்கு சுமார் பத்து நாட்களுக்கு முன்னதாக, விரிந்து பரந்து, சுழித்து ஓடும் கிருஷ்ணா நதிக்கு மகா ஆரத்தி நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இதற்காகச் சிறப்பு ஆடை அணிந்துவரும் பண்டிதர்கள் ஆரத்தி நிகழ்வை நியமங்களின் அடிப்படையில் செய்வார்கள். பக்தர்கள் நீராட வரும் படித்துறைகளில், அன்னை கனக துர்கா படித்துறை முக்கியமானது.
கிருஷ்ணா நதி தீரத்தின் அருகே இந்திரகீல மலையில் உள்ளது கனக துர்கா திருக்கோயில். இக்கோயில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகரில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி, கிருஷ்ண புஷ்கரம் நடைபெறும் நேரத்தில், இத்திருக்கோயில், பக்தர்கள் கூட்டத்தால் விழாக்கோலம் பூணும். இங்கு அன்னை கனக துர்கா அழகே வடிவாய் கொலுவீற்றிருக்கிறாள்.
ஆற்றங்கரை கோயில்கள்
கிருஷ்ணா நதியின் கரையில் புகழ்பெற்ற கோயில்கள் உண்டு. சைலம் மல்லிகார்ஜுனா கோயில், அமராவதியில் உள்ள அமரேஷ்வர ஸ்வாமி கோயில், விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயில், மட்டப்பள்ளியில் உள்ள நரசிம்ம ஸ்வாமி கோயில், வாடப்பள்ளியில் உள்ள லஷ்மி நரசிம்மர் மற்றும் சிவன் கோயில்கள், அலம்பூரில் உள்ள சங்கமேஸ்வரர் ஆலயம் ஆகியவை புகழ்பெற்றவை.
ஒவ்வொரு புஷ்கரத்தின் போதும் கங்கா ஸ்நானம், பிண்டப்பிரதானம், லகுசங்கல்பம், பிராயச்சித்தம், கங்கா பூஜை, மகா சங்கல்பம், கெளரி பூஜை போன்ற சடங்குகள் செய்யப்படுகின்றன.
கங்கா ஸ்நானம்
கிருஷ்ணா நதியில் மூன்று முழுக்குப் போட்டு கங்கையைப் பிரார்த்திக்க வேண்டும். குடும்ப நலம் சிறக்க பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள்.
பிண்டப்பிரதானம்
ஸ்நானம் செய்துவிட்டு, முன்னோர்களுக்குப் பிண்டம் அளிக்க வேண்டும். ஒரு இலையில் அன்ன உருண்டைகளை வைத்து ஆற்று நீரில் விட வேண்டும். இதனால் முன்னோர்களுடைய ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. நீர்வாழ் உயிரினங்களான மீன், தவளை போன்றவைக்கு அன்ன உருண்டைகள் உணவாகும்.
ஒரு பழம் போதும்
மூதாதையர்களுக்குப் படைக்க, பெரிய அளவில் சமைக்க வசதி இல்லாவிட்டாலும், ஒரு இலையாவது எனக்காகக் கொடுப்பாயா என்றார் கிருஷ்ணர். இலை கிடைக்கவில்லையா ஒரு பூ, அதுவும் கிடைக்கவில்லை என்றால், ஒரு பழம் நிவேதனம் செய்யலாம். ஒரு சொட்டுத் தண்ணீர்கூடப் போதும் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. அதுவும் முடியவில்லையா நிறைந்த பக்தியால் ஒரு துளி நீர் கண்ணில் தோன்றினாலும் அதுவும் தனக்கு உகந்ததே என ஏற்கிறார். அதில் ஒன்று முன்னோருக்குத் தர்ப்பணம் அளிப்பது.
லகுசங்கல்பம்
இந்தச் சங்கல்பம் புரோகிதர் உதவியின்றி நமக்கு நாமே செய்து கொள்ளும் சங்கல்பம் மனதிற்குள் நமது கோத்திரம், பெயர், நம் குடும்பத்துப் பெயர் ஆகியவற்றை நினைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சூரியன் இருக்கும் திசை பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும். நதியில் மூழ்கிக் குளித்துவிட்டு, கடைசியில் மூன்று முறை முழுகி எழுந்து, இரு கைகளையும் குவித்து நீர் எடுத்து மீண்டும் ஆற்றிலேயே விட வேண்டும். இதனால் நமது விருப்பங்கள் ஈடேறும் என்பது நம்பிக்கை.
பிராயச்சித்தம்
குற்றம் குறை ஏதேனும் தெரிந்தோ தெரியாமலோ செய்திருந்தால் அதனை மன்னிக்குமாறு இயற்கை அன்னையான கிருஷ்ணா நதியை ஆணும் பெண்ணும் வேண்டிக்கொள்ளலாம்.
கங்கா மாதா பூஜை
இந்தியா முழுவதிலும் உள்ள பன்னிரெண்டு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அவற்றை மந்திரம் ஓதி ஒன்றாய்க் கலந்து கிருஷ்ணா நதியில், நதியின் மாதாவான கங்காவுக்கு பூஜை செய்யப்படும். இதனால் அனைத்து நதிகளிடம் இருந்தும் ஆசிகளை பெறலாம் என்பது நம்பிக்கை.
மகா சங்கல்பம்
பண்டிதர்களிடம் ஒருவரின் கோத்திரம், நட்சத்திரம், பெயர் உள்ளிட்டவற்றைக் கூறி, இன்ன மாதத்தில், இன்ன திதியில் குறிப்பிட்ட பூஜையைச் செய்கிறேன் என இறைவனைப் பிரார்த்திப்பது. இதன் மூலம் செய்த பாவங்களை மன்னித்து அருள, கிருஷ்ணா நதியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.
கெளரி பூஜை
கிருஷ்ணா நதிக்கரையில் அமர்ந்து பெண்கள் சிவ பத்தினியான அன்னை கெளரிக்குக் குங்கும அர்ச்சனை செய்வார்கள். இதனைக் கிருஷ்ண புஷ்கரத்தின்போழுதும் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT