Published : 13 Mar 2014 01:23 PM
Last Updated : 13 Mar 2014 01:23 PM
பரந்தாமன் என்று போற்றப்படும் பத்து அவதாரம் எடுத்த விஷ்ணுவைப் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் ஸ்ரீரங்கத்தில் தரிசிக்கலாம். இப்பெருமாளே பாம்பணையில் பள்ளி கொண்டு இருப்பது பாற்கடலில். அலை கடலைக் கடைந்தபோது, திரண்டு வந்த ஆலாகால விஷத்தை உண்ட சிவ பெருமான் திருநீலகண்டனாக சுருட்டப்பள்ளியில் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை இன்றும் காணலாம்.
தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் பள்ளி கொண்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு சிவபெருமான், பார்வதிதேவியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கும் திருக்கோலத்தை காணும்போது நெஞ்சம் நெக்குறுகிறது. என் ஐயனே மக்களைக் காக்கும் மகேசா என்று உள்ளம் உருகுகிறது.
பள்ளி கொண்டுள்ள இந்த ஈசனுக்கு அருகே மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், பிருகு மகரிஷி, பிரம்மா, சூரியன், சந்திரன், குபேரன், சப்த ரிஷிகள் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர், கிம்புருடர் ஆகிய அனைவரும் சிவனை வணங்கிப் பிரார்த்தனை செய்கிறார்கள்.
இத்திருக்கோவில் தல வரலாறு வைணவ சைவ ஒற்று மையைக் காட்டுகிறது. அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனர். ஆனால் அமுதம் வருவதற்கு முன் ஆலாகால விஷம் வந்தது. அப்போது அருகில் சென்றார் மகாவிஷ்ணு. விஷத்தில் இருந்து கிளம்பிய வாயு தாக்கியதால் அவரது மேனி நீல நிறமானது. இதனைக் கண்ட சிவபெருமான் அந்த ஆலாகால விஷத்தை முழுவதுமாக விழுங்கிவிட்டார். அருகில் இருந்த பார்வதி தேவி பதறினாள். தன் கைகளால் கணவனின் கழுத்தை இறுக்கிப் பிடித்தாள். இதனால் ஆலாகால விஷம் அவரது கழுத்தைத்திலேயே உறைந்து விட்டது. கழுத்து என்னும் கண்டத்தில் நீல நிறத்தில் விஷம் தோய்ந்து விட்டதால், சிவன் திருநீலகண்டன் என்ற திருநாமம் கொண்டார்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழி லில் அழிக்கும் தொழில் கொண்ட சிவபெருமான் இவ்வுலகத்தோரைக் காக்க விஷம் என்னும் தீமையை அழித்தார். பின்னர் பார்வதி தேவியும் சிவனும் கைலாயம் நோக்கிச் சென்றார்கள். செல்லும் வழியில் சோலைகள் நிறைந்த இன்றைய சுருட்டப்பள்ளியில் இருவரும் தங்கினார்கள். விஷ மயக்கம் தீராமல் இருக்கவே சிவபெருமான், பார்வதி தேவியின் மடியில் தலை வைத்துச் சிறிது நேரம் கண் அயர்ந்தார்.
அதிசயமாக பரமன் பள்ளி கொண்டது தெரிய வந்ததும் இத்திருக்கோலத்தைக் கண்டு மகிழ தேவர்கள் அனைவரும் சுருட்டப்பள்ளிக்கு விரைந்து வந்துவிட்டார்கள். தன்னை நாடி வந்தோருக்காக சிவபெருமான் அந்த மாலை நேரத்தில் ஆனந்த நடனம் ஆடிக்காட்டினார். தேவர்கள் அவரை தரிசித்து மகிழ்ந்தார்கள் என்கிறது இத்திருகோவில் ஸ்தல புராணம்.
அரிய காட்சியாகப் பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனைத் தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். சுருட்டப்பள்ளியில் மட்டுமே சிவன் பள்ளி கொண்ட கோலத்தைக் காண முடியும்.
இத்திருக்கோவிலில் தெய்வங்கள் தம்பதி சமேதராகக் காட்சியளிக்கின்றனர். சர்வ மங்களாம்பிகை உடனுறை பெருமான் பள்ளி கொண்ட பரமேஸ்வரன், மரகதாம்பிகையுடன் வால்மீகிஸ்வரர், சித்தி, புத்தி சமேத விநாயகர், பூரணா, புஷ்கலாவுடன் சாஸ்தா, கவுரிதேவியுடன் குபேரன் தாராவுடன் தட்சிணாமூர்த்தி ஆகியோர் இங்கே வீற்றிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT