Published : 15 Jun 2017 09:53 AM
Last Updated : 15 Jun 2017 09:53 AM
இஸ்ரவேலின் பேரரசன் சவுலின் படையில் தாவீதின் மூத்த அண்ணன்மார் மூவர் போர் வீரர்களாக இருந்தனர். அவர்களுக்கு வீட்டின் உணவைக் கொடுத்துவர, போர்க்களம் சென்றான் தாவீது. போர் தொடங்கி 40 நாட்களைக் கடந்திருந்த நிலையில் பெலிஸ்தியர்களின் முகாமை நோக்கி முன்னேறிச் செல்ல எந்த இஸ்ரவேலிய வீரனுக்கும் துணிவு இல்லை.
அதற்குக் காரணம் கோலியாத் என்னும் மாவீரன். அவனைக் கண்டு இஸ்ரவேல் வீரர்கள் பயந்துபோய் நடுங்கிக்கிடந்தார்கள். மலைகளால் சூழ்ந்த ஏலா என்ற பள்ளத்தாக்கில் இருந்தது அந்தப் போர்க்களம். ஒரு பக்கத்திலுள்ள மலையில் பெலிஸ்தியர்கள் நின்றார்கள், இன்னொரு பக்கத்திலுள்ள மலையில் இஸ்ரவேலர்கள் நின்றார்கள். பள்ளத்தாக்கின் நடுவில் திமிராக ஒருவன் இறங்கி நின்றான். இவ்வளவு பெரிய போர் வீரனைத் தாவீது இதற்கு முன் பார்த்ததே இல்லை. அவன் மகா பலசாலி என்பதும் போரில் பெரும் அனுபவசாலி என்பதும் தாவீதுக்கு சக வீரர்கள் மூலம் தெரிகிறது.
யார் இந்த கோலியாத்?
காத் என்ற நகரத்தைச் சேர்ந்தவன் கோலியாத். அவனுடைய உயரம் 9 அடி, 6 அங்குலம். செம்பால் செய்யப்பட்ட தலைக்கவசத்தையும், செதில் செதிலாக வடிவமைக்கப்பட்ட உடல் கவசத்தையும் அவன் அணிந்திருந்தான். அந்தச் செம்பு உடல் கவசத்தின் எடை 5,000 சேக்கல் (57 கிலோ). கால்களிலும் அவன் செம்புக் கவசங்களைப் போட்டிருந்தான், செம்பால் செய்யப்பட்ட சிறிய ஈட்டியை முதுகுக்குப் பின்னால் வைத்திருந்தான்.
அவன் கையில் வைத்திருந்த பெரிய ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல் இருந்தது. அந்த ஈட்டியின் இரும்பு முனை 600 சேக்கல் (6.5கிலோ) எடையுள்ளதாக இருந்தது. அவன் உருவத்துக்கென்று விஷேசமாகச் செய்யப்பட்ட ஈட்டி அது. அவனது கேடயத்தைச் சுமக்கவே தனியாக ஒரு போர் வீரன் நியமிக்கப்பட்டிருந்தான். அவன் கோலியாத்துக்கு முன்னால் அதைச் சுமந்துகொண்டு நடந்து வந்தான். இப்படிப்பட்ட பிரம்மாண்ட உருவம் கொண்ட பலசாலியைக் கண்டு இஸ்ரவேல் வீரர்கள் நடுங்காமலா இருப்பார்கள்.
ஏலா போர்க்களத்துக்கு இருதரப்பு வீரர்களும் வந்து அணிவகுப்பை முடித்து 40 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், போரைத் தொடங்க துணிவற்று இஸ்ரவேலர்கள் பயந்துபோய்க் கிடந்தார்கள். தாவீதுடைய அண்ணன்களும் அந்தப் பயந்தாங்கொள்ளி வீரர்களின் கூட்டத்தில் இருந்தார்கள்.
தினசரி மலையிலிருந்து கீழே இறங்கிப் பள்ளத்தாக்கின் நடுவில் நின்று கர்ஜித்தான் கோலியாத். அவன் இஸ்ரவேல் படையைப் பார்த்து, “எதற்காகப் போருக்கு அணிவகுத்து நிற்கிறீர்கள்? நான் ஒரு பெலிஸ்திய வீரன். ஆனால், நீங்கள் சவுலின் அடிமைகள். என்னோடு மோதுவதற்கு உங்களில் சரியான ஒரு ஆளை அனுப்புங்கள். அவன் என்னோடு சண்டைபோட்டு என்னைக் கொன்றுவிட்டால், பெலிஸ்தியப் படை முழுவதும் உங்களுக்கு அடிமையாக இருக்கும். ஆனால், நான் அவனைக் கொன்றுவிட்டால், நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமைகளாக இருப்பீர்கள்” என்று கத்தினான்.
அப்படியும் இஸ்ரவேல் தரப்பில் ஈயாடவில்லை. இப்படியே ஒவ்வொரு நாளும் சவுல் அரசனையும் இஸ்ரவேலர்களையும் ஏளனத்துடன் எள்ளி நகையாடிவந்தான் கோலியாத். தாவீது உணவு கொண்டுவந்திருந்த தினத்தில் கொஞ்சம் அதிகமாகவே கத்தினான். “இஸ்ரவேல் படைக்கு மீண்டும் சவால் விடுகிறேன். என்னோடு மோதுவதற்கு ஒருவனை அனுப்புங்கள், இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம்!” என்றான். அவனது சவால் ஏலாவின் மலைகளில் எதிரொலித்தது.
கடவுளின் பெயரால் வருகிறேன்
கோலியாத்தின் ஆணவம் தாவீதை உசுப்பியது. 40 நாட்களாக பெலிஸ்தர்களில் ஒருவன் மட்டும் வந்து இப்படிச் சவால் விடுகிறான். அதை ஏற்று அவனுடன் மோதுவதற்கு ஒரு இஸ்ரவேலன்கூட இல்லையா எனக் கேட்டுக்கொண்டான். கடவுளை நம்பினால் முடியாதது இல்லை என்ற முடிவுக்கு வந்த தாவீது, கோலியாத்துடன் சண்டையிட விரும்பினான். இதை அவன் சக வீரர்களிடம் கூறியபோது அவர்கள் முதலில் சிரித்தார்கள். ஆனால், தாவீது உறுதியாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர்கள், அரசன் சவுலிடம் சென்று தாவீது பற்றிச் சொன்னார்கள். சவுலுக்கு முதலில் நம்பிக்கை வரவில்லை. அதனால் தாவீதைப் பார்த்து, “இந்த பெலிஸ்தனோடு மோத உன்னால் முடியாது.
நீயோ பொடியன், அவனோ தன் வாழ்நாளில் பாதியைப் போர்க்களத்திலேயே கழித்திருக்கும் ராட்சசன்” என்கிறார். அதற்கு தாவீது: “என் தந்தையின் ஆடுகளில் ஒன்றைக் கவர்ந்துசென்ற கரடியையும் ஒரு சிங்கத்தையும் நான் கொன்று போட்டிருக்கிறேன். அப்படியிருக்க இந்த பெலிஸ்தியன் எனக்கு எம்மாத்திரம்; நம் கடவுளாகிய யகோவா எனக்கு உதவுவார்” என்று கூறினான். தாவீதின் பதிலைக் கேட்டு சவுலுக்கு நம்பிக்கை பிறந்தது. “தாவீதே, உன்னை நம்புகிறேன். கடவுள் உன்னோடு இருப்பாராக” என்றுகூறி அவனை வாழ்த்தி அனுப்பினார்.
ஒரு கவணும் ஐந்து கற்களும்
அரசனின் அனுமதி கிடைத்ததும் அருகிலிருந்த ஓடையை நோக்கி ஓடோடிச் சென்றான் தாவீது. அங்கே தண்ணீரில் உருண்டு உருண்டு திடமாகிக் கிடந்த கூழாங்கற்களிலிருந்து சிறந்த ஐந்தைத் தேர்வுசெய்து எடுத்தவன், அவற்றைத் தன் பைக்குள் போட்டுக் கொண்டான். பின்பு தன் கச்சை வாரிலிருந்து கவணைக் கையில் எடுத்துக்கொண்டு ஏலா பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் மலைபோல் நின்றுகொண்டிருந்த கோலியாத்தை நோக்கி நடந்து சென்றான்.
ஒரு சிற்றெறும்பைப் போல் துணிவுடன் கோலியாத்தை நேருக்கு நேராக தாவீது நெருங்கிச் செல்வதை இஸ்ரவேலர்களாலும், பெலிஸ்தியர்களாலும் நம்ப முடியவில்லை. தன்னை நோக்கி உருவத்தில் சிறுத்த இளவட்டப் பையன் கையில் கவணுடன் வருவதைக் கண்டபோது கோலியாத்தாலும் நம்ப முடியவில்லை. ‘வீரன் ஒருவனை அனுப்பக் கூறினால் ஒரு சின்னப் பையனை அனுப்பியிருக்கிறார்களே, இவனைக் கொல்வது எத்தனை எளிது’ என நினைத்துக்கொண்டு குறுநகை புரிந்தான்.
கோலியாத், 50 அடி தூரத்தில் தன் அருகில் வந்து நின்றதும் அவனைப் பார்த்து, “சிறுவனே என் அருகில் வா, உன்னைக் கொன்று பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாக வீசியெறிகிறேன்” என்று நக்கலாகக் கொக்கரித்தான். ஏளன வார்த்தைகளுக்கு தாவீது சிறிதும் சினம் கொள்ளாமல், “நீ உனது வாளுடனும், ஈட்டியுடனும், கேடயத்துடனும் என்னிடம் போரிட வருகிறாய். நானோ பரலோகத் தந்தையாகிய கடவுளின் பெயரால் உன்னிடம் சண்டையிட வந்தேன்.
இன்று கடவுள் உன்னை என் கையில் ஒப்படைத்து விடுவார், நான் உன்னைக் கொல்லப் போகிறேன்” என்று கூறினான். இப்படி கூறிக்கொண்டே கோலியாத்தை நோக்கி ஓடினான். தனக்கும் கோலியாத்துக்கும் மத்தியில் தாக்குவதற்கு இணக்கமான இடைவெளி என அனுமானித்ததும் சட்டென்று தன் பையிலிருந்து ஒரு கூழாங்கல்லை எடுத்த தாவீது, அதைத் தன் கவணில் வைத்தான். கண் இமைப்பதற்குள் முழு பலத்துடன் அதைச் சுழற்றி கோலியாத்தின் நெற்றியைக் குறிவைத்து வீசினான்.
அந்தக் கல் காற்றைக் கிழித்துக்கொண்டுபோய் கோலியாத்தின் நெற்றிப்பொட்டைச் சடாரென்று தாக்கிப் பதம் பார்த்தது. அந்த ஒரு கல் தாக்கியவுடனே மூளை கலங்கி உயிரைவிட்டபடியே மலைசரிவதுபோல் கீழே சரிந்தான் கோலியாத்! பல போர்களில் வெற்றிகளைத் தேடித் தந்தவன், மலைபோல் நம்பியிருந்த தங்களின் மாவீரன் விழுந்துவிட்டதை பெலிஸ்திய வீரர்கள் கண்டபோது, அதை நம்ப முடியாமல் அவர்களுக்குத் தொண்டை அடைத்தது.
கீழே விழுந்து மாண்ட கோலியாத்தை நெருங்கிய தாவீது சிதறிக்கிடந்த அவனது வாளை எடுத்து அதன் மூலமே அவனது தலையைத் தனியே கொய்தான். இதைக் கண்டு பெலிஸ்தியர் அனைவரும் தலைதெறிக்க ஓடத் தொடங்கினார்கள். அவர்களைத் தேசத்தின் எல்லைக்கு அப்பால் துரத்தியடித்த இஸ்ரவேலர்கள் போரில் வெற்றியடைந்தார்கள். தாவீதின் புகழ் நாடெங்கும் பரவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT