Published : 03 Nov 2016 09:13 AM
Last Updated : 03 Nov 2016 09:13 AM
எகிப்தியருக்கு அடிமையாக வாழ்ந்துகொண்டு பெரும் துன்பத்தை அனுபவித்துவந்த இஸ்ரவேலர்களை விடுவிடுவிக்க கடவுள் சித்தம் கொண்டார். அதற்காக மோசேயை எகிப்தின் மன்னனாகிய பார்வோனிடம் அனுப்பினார். 80 வயது மோசே, தனது சகோதரர் ஆரோனுடன் பார்வோன் மன்னனைச் சந்தித்து கடவுள் அருளிய அடையாளங்களை அற்புதங்களாகச் செய்து காண்பித்தார். அதற்கெல்லாம் அசைந்துகொடுக்காத மன்னன், மக்களை விட மறுத்தான். இனி எகிப்தியரைத் தண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார் கடவுள்.
எகிப்தியருக்குப் பத்து விதமான கஷ்டங்களை உண்டாக்கியதன் மூலம் பார்வோன் மன்னனை நிலைகுலையச் செய்தார் கடவுள்.
ரத்தமாய் மாறிய நதி
எகிப்தியர்கள் நைல் நதியைத் தங்கள் உதிரமெனப் போற்றிவந்தவர்கள். அப்படிப்பட்ட நைல் நதியின் பளிங்குபோன்ற தண்ணீர் முழுவதும் ரத்தமாக மாறினால் அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா? கடவுள் உத்தரவிட்டபடி ஆரோன் தன் கைத்தடியால் நைல் நதியில் அடிக்க, அடுத்த நொடியே நதியின் தண்ணீர் ரத்தமாக மாறியது. மீன்கள் கொத்துக் கொத்தாய் செத்து மிதந்தன. இதனால் நதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. எகிப்தியர்கள் திகைத்துப் போனார்கள். ஆனால் மன்னன் பயப்படவில்லை.
அதனால் நைல் நதியிலிருந்து தவளைகள் கூட்டங்கூட்டமாகப் படையெடுத்து நகரத்துக்குள் வரும்படி செய்தார் கடவுள். ஒவ்வொரு வீட்டிலும் தவளைகள் நிறைந்தன. அடுப்புகளிலும் சமையல் பாத்திரங்களிலும் படுக்கைகளிலும் கூட தவளைகள் தாவி ஏறின. இப்படி வந்த தவளைகள் செத்து மடிந்தபோது நாடே நாறியது. அவற்றை அள்ளிப் போட்டு அப்புறப்படுத்துவதில் எகிப்தியர்கள் களைத்துப்போனார்கள்.
பூச்சிகளும் ஈக்களும்
தவளைகளால் தன் மக்கள் பட்ட துன்பத்தைக் கண்டும் துவளாமல் இருந்தான் மன்னன். இதனால் ஆரோனை மேற்கொண்டு வழிநடத்தினார் கடவுள். ஆரோனைத் தனது கைத்தடியால் தரையை அடிக்கும்படி செய்தார். அப்போது கிளம்பிய புழுதியும் தூசிகளும் அந்துப் பூச்சிகளாய் மாறின. அவை நாடெங்கும் நிறைந்து மக்களுக்குப் பெரும் தொல்லையாக அமைந்தன.
இந்த மூன்று வாதைகளையும் எகிப்தியர்களோடு இஸ்ரவேலர்களும் சேர்ந்து அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆனால் கடவுள் நான்காவது வாதையில் தொடங்கி அதன் பிறகு எகிப்தியரை மட்டுமே வாட்டும்படியாக ஏழு கஷ்டங்களைக் கொடுத்தார். நான்காவதாகப் பெரிய ஈக்களைப் பெருகச் செய்த கடவுள், அவற்றை எகிப்தியரின் வீடுகளில் மட்டுமே ஆயிரக்கணக்கில் படையெடுக்கும்படி செய்தார். இப்படி வந்து மொய்த்த ஈக்களால் அவர்கள் தூக்கம் இழந்தார்கள்.
வெட்டுக்கிளிகளும் கல் மழையும்
கடவுள் ஐந்தாவது வாதையை எகிப்தியரின் கால்நடைகளின் மீது தொடுத்தார். இதனால் எகிப்தியரின் பெரும் செல்வங்களில் ஒன்றாயிருந்த அவர்களின் ஆடு மாடுகள் அத்தனையும் செத்து விழுந்தன. பிறகு மோசேயும் ஆரோனும் கொஞ்சம் சாம்பலை எடுத்து அதைக் காற்றில் ஊதினார்கள். இதனால் எகிப்தியர் மீதும் எஞ்சியிருந்த விலங்குகள் மீதும் கொடும் வேதனைத் தரக்கூடிய கொப்புளங்கள் தோன்றின. இதனால் எகிப்தியர் கதறித் துடித்தனர். ஆனால் மன்னன் கலங்கவில்லை.
அதன் பிறகு மோசே தன் கையை வானத்தை நோக்கி நீட்டினார், அப்போது கடவுள் இடி முழக்கத்துடன் கூடிய கல் மழையை பொழியச் செய்தார். கல் மழையைக் கண்டதும் நடுங்கிப் போனான் மன்னன். ஆனால் மனமாற்றம் ஏற்படவில்லை.
இதனால் கடவுள் எட்டாவது வாதையை உருவாக்கும்படி ஆனது. பெரும் கூட்டமான வெட்டுக்கிளிகள் எகிப்தை நோக்கிப் படையெடுக்கும்படி செய்தார். ஒருபோதும் இப்படி கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகளை எகிப்தியரோ இஸ்ரவேலர்களோ கண்டதில்லை. கல் மழை அழிக்காமல் விட்டுவைத்த எகிப்தியரின் வயல்களில் இருந்த விளைச்சல் அனைத்தையும் தோட்டங்களையும் வெட்டுக்கிளிகள் தின்று தீர்த்தன.
இருளில் மூழ்கிய தேசம்
இத்தனை கொடிய வாதைகளைக் கடவுள் கொண்டுவந்தபோதும் மன்னன், எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று திடமாக இருந்தான். ஆனால் அவனது எண்ணத்தை இருண்டுபோகும்படிச் செய்தார் கடவுள். அவர் தேசம் முழுவதையும் மூன்று தினங்கள் கடும் இருளில் தள்ளினார். ஆனால் இஸ்ரவேலர் வசித்து வந்த பகுதிகளில் மட்டும் வெளிச்சம் ஒளிர்ந்தது. கும்மிருட்டால் மன உளைச்சலுக்கு ஆளான மன்னன், அப்படியும் துணிச்சல் காட்டவே கடைசியாகப் பத்தாவது வாதையைத் தந்தார் கடவுள்.
நிலைகுலைந்த மன்னன்
ஓர் இளம் செம்மறியாட்டின் ரத்தத்தைத் தங்கள் வாசல் நிலைக்கால்களில் தடவி அடையாளம் செய்துகொள்ளும்படி, தனது மக்களாகிய இஸ்ரவேலர்களிடம் சொன்னார் கடவுள். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் கடவுளுடைய தூதன் எகிப்து தேசத்தை வீதிவீதியாகக் கடந்து சென்றார். அப்போது எந்தெந்த வீடுகளின் நிலைக்கால்களில் ரத்தம் காணப்பட்டதோ அந்த வீட்டிலிருந்த எவரையும் அவர் எதுவும் செய்யவில்லை. ஆனால் ரத்தமில்லாதிருந்த எல்லா வீடுகளிலும் சாவு விழுந்தது. அந்த வீடுகளில்
இருந்த தலைப் பிள்ளையையும், எஞ்சியிருந்த கால்நடைகளில் தலைச்சன் குட்டிகளையும் கடவுளின் தூதன் கொன்றுபோட்டார்.
பத்தாவது வாதைக்குப் பின், பார்வோன் மன்னன் இனியும் இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருக்கும்படி கட்டாயப்படித்தினால் இங்கே எல்லாம் அழிந்துபோகும் என்பதை உணர்ந்துகொண்டார். எனவே இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து செல்லலாம் என்று உத்தரவிட்டான். எகிப்தியரின் வீடுகளில் மரணம் நிகழ்ந்த அதே இரவில் எகிப்தை விட்டு இஸ்ரவேலர்கள் புறப்பட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT