Published : 22 Dec 2016 09:53 AM
Last Updated : 22 Dec 2016 09:53 AM
அடிமைத் தளையிலிருந்து தங்களை விடுவித்து, பாலைவனத்தில் தங்களுக்கு உணவளித்துக் காத்த கடவுள் மீது நம்பிக்கையற்று விரக்தியடைந்தனர் இஸ்ரவேல் மக்கள். எகிப்துக்கே திரும்பச் சென்று வாழ்வதே சரியென்று பெரும்பாலான மக்கள் நினைத்தனர். இதனால் கோபமடைந்த கடவுள், கானான் நாட்டுக்குள் அவர்கள் செல்ல முடியாதவாறு சபித்து 40 ஆண்டுகள் பாலைவனத்திலேயே வாழ்ந்து மடியும்படியான வாழ்க்கையை அவர்களுக்குக் கொடுத்தார். இவ்வாறு பாலைவன வனாந்தரத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவர்கள், கடவுளின் சாபத்திலிருந்து நம்மைக் காக்க வழியற்ற மோசே இனி நமக்குத் தலைவராக இருக்க வேண்டாம்; அந்தத் தகுதியை அவர் இழந்துவிட்டார் என்று கடுகடுத்தார்கள்.
தங்களுக்குத் தலைவராக மோசேயோ, தங்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்து பிரதான தலைமை குருவாக இருந்த மோசேயின் சகோதரர் ஆரோனோ இனி அந்த அந்த அந்தஸ்தில் இருக்க வேண்டியதில்லை என்றார்கள். இப்படிக் கூறிய கூட்டத்துக்கு கோராகு, தாத்தான், அபிராம் ஆகிய மூன்று பேர் தலைமை வகித்தார்கள். இந்த மூவரின் பேச்சைக் கேட்ட்ட 250 மூன்றாம் கட்டத் தலைவர்களும்கூட மோசேயையும் ஆரோனையும் நிராகரிக்கத் தொடங்கினார்கள். இவர்கள் கூட்டமாகத் திரண்டு வந்து மோசேயிடம் “எங்கள் அனைவருக்கும் தலைவர்போல் ஏன் உம்மைக் காட்டிக்கொள்கிறீர்?” என்று கேட்கிறார்கள்.
கடவுள் நடத்திய தேர்தல்
அதற்கு மோசே மிக அமைதியாகப் பதில் அளித்து அவர்களை ஒரு உடன்பாட்டுக்குள் கொண்டுவந்தார். “நாளைக் காலை தூப கலசங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் தூப வர்க்கத்தைப் போடுங்கள். பின்னர் எதிர்ப்பவர்கள் அனைவரும் நம் கடவுளும் பரலோகத் தந்தையுமாகிய யகோவா தேவனின் ஆசரிப்புக் கூடாரத்துக்கு வாருங்கள். அப்போது நம் கடவுள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்று நீங்களே பாருங்கள். இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார். கடவுள் தேர்தெடுப்பார் என்றால் எவ்வகையான அடையாளத்தைக் கொண்டு நாங்கள் தெரிந்துகொள்வது என்று அவர்கள் எதிர்க்கேள்வி கேட்டனர். அதையும் நம் கடவுளே வெளிப்படுத்துவார். அதை உங்களைப் போலவே இப்போதைக்கு நானும் அறியேன் என்றார். சமாதான மடைந்து கலைந்து சென்றனர்.
மறுநாள் நாள் கோராகுவின் தலைமையில் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன் குழுமினர். நேற்று மோசேயுடன் விவாதித்த போது இருந்த கூட்டத்தைவிட தற்போது மேலும் அதிகமான பேர் திரண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் மோசே, ஆரோன் ஆகியோருக்கு ஆதரவானவர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். இவர்களைக் கண்டு யகோவா கோபம் கொண்டார். அந்தப் பொறாமைக் கூட்டத்தாரை நோக்கி மோசே தைரியமாகப் பேசும்படி கடவுள் செய்தார். கூட்டத்தாரை நோக்கி மோசே, “ இந்தக் கெட்ட மனிதர்கள் தங்கியிருக்கிற கூடாரங்களின் அருகில் நிற்காதீர்கள். அவற்றை விட்டு விலகி நில்லுங்கள். அவர்களுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் தொடாதீர்கள்” என்றார். மோசே இப்படிக் கூறியதும் நம்பிக்கையான மக்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து எதிர்ப்பாளர்களை விட்டு விலகி நின்றார்கள்.
விழுங்கிய பூமி
இப்படி அவர்கள் விலகி நின்றதும் மோசே மீண்டும் பேசினார். “ கடவுள் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை இப்போது நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். இந்த நிலம் பிளந்து இங்குள்ள கெட்ட மனிதர்களை விழுங்கிவிடும்” என்றதும் சில நொடிகள் அங்கே சலசலப்பும் பீதியும் ஏற்பட்டது. மோசே சொல்லி முடித்ததுமே நிலம் பிளந்தது. எதிர்ப்பாளர்களுக்குத் தலைமையேற்றவர்கள் கூடாரங்களும் அவர்களது உடைமைகளும் கூக்குரல் பீறிட பூமிக்குள் புதைந்துபோனார்கள்.
இப்போது ஆசாரிப்பு கூடாரத்தின்மேல் வெள்ளை மேகமாய் இறங்கிவந்த கடவுள் மோசேயிடம் பேசினார். “இஸ்ரவேல் மக்களின் ஒவ்வொரு கோத்திரத்திலுமுள்ள தலைவர்கள் அனைவரையும் தலா ஒரு கோலைக் கொண்டு வரச் சொல். அந்தக் கோல்களை ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக வை. யாரை ஆசாரியனாக (தலைமை குரு) நான் தேர்ந்தெடுக்கிறேனோ, அவனது கோல் மட்டும் பூ பூக்கும்” என்று பேசினார். அவ்வாறே 12 கோல்களை ஆசாரிப்புக் கூடாரத்தின் உடன்படிக்கைப் பெட்டி முன்பாக வைத்துவிட்டுக் கலைந்து சென்றனர்.
மறுநாள் காலை கூடாரத்தின் மேல் வெள்ளை மேகமாய் கடவுள் இறங்கி வருவதைக் கண்ட மக்கள் புனிதக் கூடாரத்தின் முன்னாள் திரண்டனர். பின்னர் மோசே, ஆரோன் ஆகியோரின் பின்னால் கூடாரத்தின் உள்ளே சென்று பார்த்தனர். இப்போது ஆரோனின் கோலில் பூக்கள் மலர்ந்து, பழுத்த வாதுமைப் பழங்களும் கொத்துக்களுடன் காட்சியளித்தன. ஆரோனின் கோலை மட்டும் பூக்கும்படி செய்து அவரை இஸ்ரவேல் ஜனங்களின் தலைமை குருவாகக் கடவுள் தேர்தெடுத்தார். அதன் பிறகு அந்தக் கூட்டத்தாரின் மத்தியில் எதிர்ப்பு என்பதே இல்லாமல் போயிற்று.
(பைபிள் கதைகள் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT