Last Updated : 22 Sep, 2016 11:01 AM

 

Published : 22 Sep 2016 11:01 AM
Last Updated : 22 Sep 2016 11:01 AM

பக்தி இலக்கியம்: உந்தி பறத்தல் என்னும் விளையாட்டு

அன்பு, பரிவு, பாசம், வாத்சல்யம், பரவசம், சரணாகதி என பக்தியின் ஒவ்வொரு நிலையையும் தமிழில் பக்தி இலக்கியமாக வடித்துள்ளனர் பெரியோர். அதில் பெண்களின் விளையாட்டும் விதிவிலக்கல்ல.

பக்தி வெளிப்படும் விளையாட்டுக்களம்

பெண்கள் பூப்பந்து விளையாடுதல், ஊஞ்சலாடுதல் போன்றவற்றை விளையாடியதாக நாம் இலக்கியங்களில் இருந்து அறிகிறோம். அது போல ஒன்று தான் உந்திபறத்தல் என்பது. அதில் பெண்கள் எம்பி குதித்து, தலைவனின் சிறப்புகளைப் பாடி விளையாடுவர் எனக் கூறுவர்.

உளைந்தன முப்புரம் உந்தீபற

எட்டாம் திருமுறையான திருவாசகத்தில் மாணிக்கவாசகர், திருஉந்தியார் எனும் தலைப்பில், சிவபெருமானின் சிறப்புகளைப் பாடி, மகளிர் ஆடுவதாக ஒரு பதிகம் பாடியுள்ளார்.

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்

உளைந்தன முப்புரம் உந்தீபற!

ஒருங்குடன் வெந்தவாறுந்தீபற!

எனத் தொடங்கும் பாட்டில் சிவபெருமான் முப்புரம் எரித்த திருவிளையாடலை சொல்லிப் பாடுகின்றனர். தொடர்ச்சியாக, தக்கன் வேள்வியை அழித்ததைப் பற்றி

தக்கனாரன்றே தலையிழந்தார் தக்கன்

மக்களைச் சூழ நின்றுந்தீபற!

மடிந்ததுவேள்வியென்றுந்தீபற!

எனக்கூறி, சிவபெருமானைப் பிழைத்தவர் உய்யமாட்டார் எனப் பாடி ஆடுவதாக பாடுகிறார். ராவணன் அகந்தையை அழித்தது பற்றியும், முனிவர்களைக் காத்தருளும் பேரருளாளன் சிவபெருமான் என்றும் பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.

என்நாதன் வன்மையைப் பாடிப்பற

ஸ்ரீ மந்நாராயணனின் கல்யாணகுணங்களை ஆழ்ந்து அனுபவித்த ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார், உந்திபறத்தல் எனும் விளையாட்டை, இராமவதாரம் மற்றும் கிருஷ்ணாவதாரப் பெருமைகளை எடுத்துக் கூறி இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் எதிர்நின்று பாடி, ஆடி உந்தி பறப்பதாக மூன்றாம் பத்து, ஒன்பதாம் திருமொழியில்

(பதிகத்தை வைணவமரபில் திருமொழி என்றழைக்கிறார்கள்) விவரிக்கிறார்.

என்நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூஈயாதாள்

தன்நாதன் காணவே தண்பூமரத்தினை

வன்நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட

என்நாதன் வன்மையைப் பாடிப்பற!

எம்பிரான் வன்மையைப் பாடிப்பற!

எனத் தொடங்கும் திருமொழியில், இந்திரன் துணைவியான இந்திராணி, கண்ணனுடைய தேவியான சத்தியபாமாவுக்கு பாரிஜாதமலரைக் கொடுக்கவில்லை. அதனால், கருடாழ்வாரைக் கொண்டு அம்மரத்தை வலுவிலே பிடுங்கிக்கொண்டு வந்த என் தலைவனான கண்ணனது வலிமையைப் பாடிக்கொண்டு உந்திபற என்று பாடியுள்ளார். தொடர்ச்சியாக கண்ணனின் லீலைகளை விவரித்துச்சொல்லி ஒரு பெண் பாடுவதாகவும், மற்றொருத்தி ராமபிரான் பெருமையைக் கூறி அவற்றைப் பாடிப்பற என்று பாடுவதாகவும் அமைத்துள்ளார்.

என் வில்வலி கண்டு போஎன்று எதிர்வந்தான்

தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி

முன் வில்வலித்து முதுபெண் உயிருண்டான்

தன் வில்லின் வன்மையைப் பாடிப்பற!

தாசரதி தன்மையைப் பாடிப்பற!

அதன் பலனையும் கடைசிப் பாசுரத்தில்

நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று

உந்திபறந்தஒளியிழையார்கள்சொல்

செந்தமிழ்த்தென் புதுவை விட்டு சித்தன் சொல்

ஐந்தினோடும் ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே!

கண்ணனின் பெருமையையும், ராமனின் பெருமையையும் சொல்லி, உந்திப்பறத்தலாகிய விளையாட்டினை அனுபவித்த பெண்களது சொல்லை செந்தமிழால், பெரியாழ்வார் அருளிச்செய்த பத்துப்பாசுரங்களையும் பாடவல்லவர்களுக்கு சம்சாரதுக்கம் ஒன்றும் உண்டாகாது என்றுகூறி முடிக்கிறார் பெரியாழ்வார்.

“அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்று மாணிக்கவாசகர் துதித்ததைப் போலவும், “உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்” என்று நம்மாழ்வார் அனுபவித்ததைப் போலவும் தினசரி வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் பக்தி இரண்டறக் கலந்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x