Last Updated : 18 Sep, 2014 02:55 PM

 

Published : 18 Sep 2014 02:55 PM
Last Updated : 18 Sep 2014 02:55 PM

புதுமையான ஒரு வழி

குரு இக்கியு மரணத்திற்கு முன்னால் தன் சீடர்களை அழைத்தார். “ நான் இந்த உலகத்திலேயே இதுவரை யாரும் முயற்சிக்காத வகையில் மரணத்தைத் தழுவ வேண்டும். மரணமடைவதற்கு ஒரு புதுமையான வழியைச் சொல்லுங்கள் சீடர்களே. மக்களில் பெரும்பாலானவர் படுக்கையிலேயே இறக்கின்றனர்.

எனக்கு படுக்கையில் இறக்க விருப்பமில்லை. படுக்கை இடுகாட்டுக்கு மிக அருகில் உள்ள இடம்.” என்றார்.

இக்கியு மிகவும் வினோதமானவர் என்று அவரது மாணவர்களுக்குத் தெரியும். யாராவது வித்தியாசமாக சாக நினைப்பார்களா? என்று மனதுக்குள் நினைத்தனர். இருந்தாலும் குருவின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே!

“நீங்கள் பத்மாசனத்தில் அமர்ந்தபடியே இறந்துபோகலாம்” என்றான் ஒரு சீடன். ஆனால் இக்கியுவுக்கு முன்பே நிறைய குருக்கள் அவ்வாறான மரணத்தைத் தழுவியுள்ளனர். அதனால் அந்த முறையை இக்கியு தேர்ந்தெடுக்கவில்லை.

இன்னும் கொஞ்சம் புதுமையாக யோசியுங்கள் என்றார் இக்கியு. நின்றுகொண்டே இறக்கலாமே என்றான் இன்னொரு சீடன்.

“யோசனை பரவாயில்லை. ஆனால் ஏற்கனவே ஒரு ஜென் குரு இந்த முறையைப் பின்பற்றியுள்ளார். நான் இரண்டாமவனாக இருக்க விரும்பவில்லை” என்று நிராகிரித்துவிட்டார்.

தலைகீழாக நின்றுகொண்டு சிரசாசனத்தில் இறப்பது புதுமையாக இருக்கும் என்றான் மூன்றாமவன். இந்த யோசனை இக்கியுவை மிகவும் கவர்ந்துவிட்டது. “இது எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்” என்று குஷியில் துள்ளிக் குதித்தார் இக்கியு.

பின்னர் சிரசாசனத்திலேயே இறந்தார். சிஷ்யர்களுக்குத்தான் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர்.

ஒருவர் படுக்கையில் இருந்து இறந்துபோனால் அவருக்கான இறுதிக் கடன்களை எப்படிச் செய்யவேண்டும் என்பது தெரியும்.

இப்படியான ஒரு நிலையில் இறந்திருக்கும் குருவை என்ன செய்வது? குருவோ இறந்த பின்னும் தலைகீழாகவே நின்றார்.

உண்மையிலேயே தங்கள் குரு இறந்துவிட்டாரா என்று பரிசோதிக்க பலவிதமான சோதனைகளையும் சீடர்கள் செய்து பார்த்தார்கள்.

திகைத்த நிலையில் அவர்கள் இருந்தபோது, ஒருவர் சொன்னார். “எனக்கு இக்கியுவின் அக்காளைத் தெரியும். பக்கத்தில் உள்ள பௌத்த மடத்தில்தான் துறவியாக இருக்கிறார்.

அவரிடம் இக்கியு மிகவும் மரியாதையாக இருப்பார். அவரிடம் ஏதாவது தீர்வு இருக்கும்” என்றார்.

இக்கியுவின் அக்கா ஆசிரமத் துக்கு அழைத்து வரப்பட்டார். அவர் தனது தம்பியின் செயலைப் பார்த்து மிகுந்த கோபத்துடன், “ உனது வாழ்க்கை முழுக்க குறும்புத்தனமாக இருந்தாய்.

செத்த பிறகாவது திருந்தக் கூடாதா? ஒழுங்காக சவம் போலப் படு” என்றார்.

இக்கியுவின் உடல் துள்ளிக் குதித்து படுக்கையில் படுத்தது. அங்கிருந்து இக்கியுவின் அக்கா வெளியேறினார்.

இக்கியு போன்ற ஒரு நபருக்கு இறப்பும்கூட விளையாட்டுதான். இக்கியுவின் அக்காவோ அவரது இறுதிச்சடங்குக்குக்கூட காத்திருக்கவில்லை.

இறப்பு என்பது உடலுக்கு மட்டும்தான், பிரக்ஞைக்கு அல்ல என்று தெரிந்தவர்களுக்கு மரணம் ஒன்றுமேயல்ல. அது ஒரு திருவிழாவுக்கான தருணம். அவ்வளவுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x