Published : 13 Sep 2018 10:35 AM
Last Updated : 13 Sep 2018 10:35 AM
மேற்குலகின் சிறந்த சூபி ஞானாசிரியர்களில் ஒருவராக அறியப்படுபவர் ரெஷத் ஃபீல்ட். இவரது சுயசரிதையின் முதல் பகுதியான ‘தி லாஸ்ட் பேரியர்’ (The Last Barrier – A Journey into the Essence of Sufi Teachings) புத்தகம் 1976-ம் ஆண்டு வெளியானது.
சூபி மெய்ஞ்ஞானப் பாதையில் பயணம் செய்யும் ஒருவரின் அனுபவங்களை சாகசக் கதை போல இந்தப் புத்தகம் பதிவுசெய்திருக்கிறது. சூபி ஆசிரியர் ஒருவருக்கும் அவருடைய மாணவருக்கும் இருக்கும் ஆழமான அன்பையும் நட்பையும் ரெஷத் ஃபீல்டின் புத்தகம் பேசுகிறது.
பயணம் கற்றுத்தரும் பாடம்
லண்டனில், பாரம்பரியப் பொருட்களை விற்பனைசெய்யும் கடை வைத்திருக்கும் ரெஷத், ஒரு புதிரான சூழலில் 1969-ம் ஆண்டு சூபி ஆசிரியர் ஹமித்தைச்(அவரது இயற்பெயர்: ப்யூலென்ட் ரவுஃப்) சந்திக்கிறார். அவர் தன்னிடம் சூபி மெய்ஞ்ஞானத்தைக் கற்க விழையும் ரெஷத்தைத் துருக்கிக்கு அனுப்புகிறார். வெவ்வேறு மெய்ஞ்ஞானத் தேடல் முறைமைகளிலும், ஆற்றுப்படுத்தல் முறைகளிலும் இயல்பாகவே ஆர்வம்கொண்ட ரெஷத், லண்டனில் தனது கடையை விற்றுவிட்டு, தன் வாழ்க்கையையே மாற்றப்போகும் பயணத்துக்குத் தயாராகிறார்.
“நீங்கள் பல ஆண்டுகளாகப் பல விஷயங்களைப் படித்திருப்பீர்கள். நீங்கள் படித்த கருத்தாக்கங்களால் உங்கள் மூளை நிரம்பியிருக்கும். இந்தப் பயணத்தில் மற்றவர்களுக்குக் கிடைத்த அதே அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படலாம். உங்களது உண்மையான இயல்பைப் புரிந்துகொள்வதற்குமுன், உங்களுக்குள் ஏற்கெனவே இருக்கும் கருத்தாக்கங்கள் கரைந்துபோக வேண்டும்.
இதற்குப் புத்தகங்கள் இல்லை. இயற்கையே நம்முன் உள்ள ஒரே கையெழுத்துப் பிரதி. வாழ்க்கைதான் அது சொல்லும் பாடம். பேரார்வத்துடன் வாழ்க்கையை வாழுங்கள்! இந்தப் பாதை இறுக்கமாக இருக்கும்; மகிழ்ச்சியானதாக இருக்காது என்று கருத வேண்டாம். இது ஆனந்தம் நிறைந்த சாகசப் பயணமாக இருக்கும்” என்று இந்தப் பயணத்தை மேற்கொள்ள தொடங்குவதற்குமுன் ரெஷத்திடம் விளக்குகிறார் ஹமித்.
இந்தப் பயணத்தில், சில அபூர்வமான சூபி துறவிகளைச் சந்திக்கும் ரெஷத், ஒரு புதுமையான தெய்வீக அன்பு நிறைந்த உலகத்துக்குள் நுழைகிறார். இந்தப் பயணத்தில், தனக்குள் இருக்கும் பலவீனங்களையும் போலித்தனங்களையும் தப்பிதங்களையும் துறக்க வேண்டிய சூழலை எதிர்கொள்கிறார் ரெஷத். அவரது ஆசிரியரான ஹமித், கடினமான வழிகளில் வாழ்வின் போலித்தனங்களிலிருந்து அவரை விடுவிக்க முயல்கிறார்.
இறைவனிடம் சரணடைதல்
வாழ்வின் உண்மையைத் தேடும் இந்தப் பயணத்தில், தன் ஆசிரியரான ஹமித்திடம் இருந்து தொடர் ஊக்கம் கிடைத்தாலும், தன் கருத்தாக்கங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இறைவனிடம் சரணடைவது அவருக்குக் கடினமாகவே இருந்துள்ளது. சூபி மூச்சுப் பயிற்சியை அவருக்குக் கற்றுத்தரும் ஹமித், “ஒரு நாளில் எத்தனை முறை இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற நினைவு வரும்? நீங்கள் இறைவனை முழுமையாகச் சார்ந்திருக்கிறீர்கள்.
அவருக்குத்தான் எல்லா நன்றிகளையும் கொடுக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் இறைவனுக்கு நன்றியுள்ளவராக மாறும்வரை, இறைவனிடமிருந்து பிரிந்துதான் இருக்கிறீர்கள்” என்கிறார். வாய்ப்புகளால் எதுவும் நடைபெறுவதில்லை, அனைத்துக்கும் பின்னால் இறைவன் இருப்பதாகவும், மனிதர்கள் அனைவரும் இந்தத் தெய்வீக இருப்பையும் செயலையும் நம்ப வேண்டும் என்று ரெஷத்துக்குக் கற்பிக்கிறார் ஹமித்.
அன்னை மரியாள் வசித்த இடம்
இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்த பிறகு, அன்னை மரியாள் எபேசஸ் நகரத்தில் வசிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த இடத்துக்கு ரெஷத்தை அழைத்துச் செல்கிறார் ஹமித். “மரியாள் ஒரு தெய்வீக அன்னை. இந்த உலகத்தில் இருக்கும் அனைத்துவிதமான தெய்வீக சாத்தியங்களுக்கும் தளம் அமைப்பவராக அன்னை மரியாள் இருக்கிறார். அவரை நாம் அடையாளம் காண வேண்டும்” என்று எடுத்துரைக்கிறார் ஹமித்.
“ஒரு சூபி, அந்தத் தருணத்தின் குழந்தையாக இருக்கிறார். ஒவ்வொரு முறை அன்னை மரியாளுக்குள் உருகி கரையும்போதும், ஏதோவொன்று புத்துயிர்ப்பை அடைகிறது. எது பிறக்கிறதோ, அது அந்தத் தருணத்தின் குழந்தையாக மாறுகிறது. அந்தக் குழந்தை இறைவனை உணர்ந்ததாக ஆகி சூபி என்று அழைக்கப்படலாம்” என்று விளக்குகிறார் ஹமித்.
ரூமியின் கல்லறையில் மறுபிறப்பு
இந்தப் பயணத்தின் உச்சகட்டமாக ரெஷித், கோன்யா நகரத்தில் உள்ள மெய்ஞ்ஞானியும் கவிஞருமான ஜலாலூதீன் ரூமியின் கல்லறையை அடைந்தார். “அலைக்கழித்த புயலுக்குப் பிறகு வரும் அமைதியின் குளிர்மை ரூமியின் கல்லறையைப் பார்த்த பிறகு, என் வாழ்க்கை முழுவதும் நீடித்தது” என்று சொல்கிறார் ரெஷத். அங்கே மௌலவி ஷேக் சுலைமான் டிடியைச் சந்திக்கிறார் அவர்.
“இறைவனின் வழிகள்தான் எவ்வளவு அற்புதமாக இருக்கின்றன, அவர் யாருக்கு எந்தத் தருணத்தில் என்ன தேவையோ அதை அந்தத் தருணத்தில் வெளிப்படுத்துகிறார்” என்ற கருத்தை ரெஷத்துடன் பகிர்ந்துகொள்கிறார் மௌலவி ஷேக் சுலைமான்.
சூபி உலகத்துக்குள் பயணம் செய்ய விரும்பும் ஒரு மாணவன், தன் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் எப்படி அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கிறான் என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. “வாழ்வதற்கு முதலில் இறக்க வேண்டும், அப்படி இறப்பதன் அர்த்தம் என்னவென்றால், உங்கள் லட்சியங்கள், ஆசைகள் அனைத்தையும் கைவிடுவதாகும்” என்ற கருத்தை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.
ரெஷத் ஃபீல்ட் இவர் 1934-ம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்தார். இவர் இசைக் கலைஞராகவும் பாரம்பரிய பொருட்கள் விற்பனையாளராக இருந்தவர். சூபி ஞானிகளுடன் இவரது வாழ்வின் பிற்பகுதியில் ஏற்பட்ட அனுபவத்தில் சூபி ஞானாசிரியராகவும் எழுத்தாளராகவும் மாறியவர். சூபி போதனைகளைப் பற்றிய முக்கியமான புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார். வாழ்வின் மெய்மையைத் தேடிய ஆயிரக்கணக்கான மேற்கத்தியர்களுக்கு இவர் வழிகாட்டியிருக்கிறார். 1960-களில் பிரபலமாயிருந்த ‘தி ஸ்பிரிங்ஃபீல்ட்ஸ்’ இசைக்குழுவின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். ஜப்பானின் ஜென் மடாலயங்கள், நேபாளத்தின் இமய மலை, துருக்கி போன்ற இடங்களுக்குத் தொடர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். குர்ட்ஜிப், பி.டி. அவுஸ்பென்ஸ்கி, சோக்யம் ட்ருங்பா போன்ற ஞானாசிரியர்களின் தாக்கம் இவரிடம் இருந்தது. இவரை சூபி பாதையில் வழிநடத்தியவர்களில் முக்கியமானவர் ப்யூலென்ட் ரவுஃப் என்ற துருக்கிய ஆன்மிக ஆசிரியர். உளவியல் ஆலோசனையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் மறைஞானப் பள்ளிகளை நிர்வகித்துவந்தார். ‘டு நோ வி ஆர் லவ்டு’ ‘கோயிங் ஹோம்’, ‘தி அல்கெமி ஆஃப் தி ஹார்ட்’ போன்றவை இவரது படைப்புகளில் சில. 2016-ம் ஆண்டு இவர் மறைந்தார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT