Published : 06 Sep 2018 10:20 AM
Last Updated : 06 Sep 2018 10:20 AM
கம்பீரமான பிலஹரி ராகத்தின் ஆலாபனையைத் தொடர்ந்து ஒலித்தது `சேனைகளின் கர்த்தரே! நின் திருவிலம் அளவற இனிதினிதே…’ - எனும் பல்லவி. தொடர்ந்து நிரவல் பாடி, தனி ஆவர்த்தனத்துக்கு இடம் கொடுத்து, ராகம்-தானம்-பல்லவி பாடிய கல்பனா ராகவேந்தரின் இசையில் மெய் மறந்திருந்தது கூட்டம்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் மெல்லிசையில் முகிழ்ந்த பாடல்களும், மேற்கத்திய பாடல்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பாமாலைகளுமே பெரிதும் ஒலிக்கும். முழுக்க முழுக்க கர்னாடக இசையில் கிறிஸ்தவ கீர்த்தனை கச்சேரியை அருளாளர்களின் துணையுடன் சென்னை, எம்.சி.சி. பள்ளி அரங்கத்தில் சமீபத்தில் நடத்தினார் டாக்டர் டி. சாமுவேல் ஜோசப்.
திரைப்பட இசையமைப்பாளர் ஷியாமாக இவரை நிறையப் பேருக்குத் தெரியும். தமிழில் சில திரைப்படங்களுக்கும் மலையாளத் தில் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்திருப்பவர் ஷியாம்.
செல்வபிரசாத் (வயலின்), ஆம்பூர் பத்மநாபன் (மிருதங்கம்), ஹரிஹரன் (கடம்), நாகராஜ் (மோர்சிங்), கிரிதர்பிரசாத் (கஞ்சிரா) ஆகியோரின் பக்க பலத்துடன் பாரம்பரியமான கச்சேரி பத்ததியில் நிகழ்ச்சியை நடத்தினார் கல்பனா ராகவேந்தர். ஆலாபனை, விருத்தம், துக்கடாக்கள், தில்லானா, மங்களம்வரை ஆபிரகாம் பண்டிதர் போன்ற முன்னோடிகள் எழுதிய கிறிஸ்தவ கீர்த்தனைகளைக் கொண்டே நிகழ்ச்சியை அவர் நடத்தினார். வைரமுத்து, கிருதியா, குளோரியா உட்பட தற்கால கவிஞர்களின் பாடல்களும் பாடப்பட்டன.
கிறிஸ்தவ கீர்த்தனைகளின் முன்னோடிகள்
இசை குறித்த ஆராய்ச்சியாளர்களில் முன்னோடி தஞ்சை ஆபிரகாம் பண்டிதர். மனோதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட கர்னாடக இசையின் வேர்மூலத்தை நோக்கிப் பயணித்ததுதான், ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி சிறப்பு. இசை மாநாடுகளை நடத்தி பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலமாக `கருணாம்ருத சாகரம்’ என்னும் இசை நூலை பதிப்பித்தவர் ஆபிரகாம் பண்டிதர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இன்னொரு கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர், வேதநாயகம் சாஸ்திரியார் போன்ற பெரியவர்களின் பாடல்களைக் கொண்டே நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர். ஆபிரகாம் பண்டிதர், வேதநாயக சாஸ்திரியார், அருள்திரு ஞா. சாமுவேல், ஜான் பால்மர், எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை ஆகியோர்களின் ஒளிப்படங்கள் நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டன.
கேள்வி பிறந்தது அன்று
ஒரு தயாரிப்பாளரோடு திரைப்படம் தயாரிப்பது தொடர்பாக ஷியாம் இங்கிலாந்துக்கு சென்ற போது, லண்டனில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆராதனையில் கலந்துகொண்டார். அந்த ஆராதனையில் 15 பேருக்கும் குறைவாகவே பங்கேற்றிருந்த போது, அந்த காட்சியைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஷ்யாம், அந்த சபை உறுப்பினர்களிடம் கவலையோடு பேசினார்.
அதற்கு அவர்கள், “உங்கள் ஊரில் ஆராதனையில் எப்படி இறைவனைத் துதிக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கின்றனர். தேவாலயங்களில் மேற்கத்திய இசைக் கருவிகள் ஒலிக்க பாடப்படும் மொழியாக்கம் செய்யப்பட்ட பாடல்கள் பற்றி ஷ்யாம் கூறியிருக்கிறார்.
அதற்கு அவர்கள், “இவையெல்லாம் எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்டது. இறைவனை ஆராதிப்பதற்கு உங்களுக்கென்று இசை மரபோ பாடல்களோ கிடையாதா?” என்று கேட்டிருக்கின்றனர்.
“இந்தக் கேள்விக்கு பிறகுதான் தமிழ்க் கீர்த்தனைகளுக்கு முறையான நொட்டேஷன்களை எழுதி கர்னாடக இசையில் கச்சேரி செய்ய வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியது. தமிழ் மொழியை அவர்கள் பயன்படுத்தியிருக்கும் விதத்தை இப்போது இருக்கும் தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
இந்திய இசையான கர்னாடக இசையை கற்றுக்கொள்வது கடினம். அதைவிட அதை சரியாக ரசிப்பது கடினம். அந்த ரசனையை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சியே இது. மொழிபெயர்க்கப்பட்ட பாடல்களுக்குப் பதில், நம்முடைய தமிழில் தமிழர்களே எழுதிய பாடல்களை கேட்க கேட்கத்தான், அதன் அருமை புரியும். தமிழ்க் கீர்த்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான எளிய வழியாகவே இதைப் பார்க்கிறேன்” என்றார் ஷியாம்.
சுவிசேஷ கீதங்கள்
உலகின் பல நாடுகளிலும் அவரவர்களுக்கு உரிய சுவிசேச கீதங்களை பாடிவருகின்றனர். மே ற்குலக நாடுகளில் இயேசு வழிபாட்டுக்கு என்றே உருவானது காஸ்பல் இசை. இயேசுவின் போதனைகளையும் பிரசங்கங்களையும் உள்ளடக்கியது. மேத்யூ, மார்க், லூக், ஜான் ஆகியோரின் படைப்புகளைக் கொண்டது. ஏகக் கடவுளைப் போற்றும் ‘சங்கீதம்’ பழைய ஏற்பாடு விவிலியத்தில் ஒரு முக்கிய அங்கம். இவை முழுவதும் இசைப் பாடல்களே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT