Published : 06 Sep 2018 10:19 AM
Last Updated : 06 Sep 2018 10:19 AM
வாசித்தவுடன் வாழ்க்கையையே புரட்டிப்போடும் வலிமையுடன் சில புத்தகங்களே எழுதப்படுகின்றன. ஆஸ்திரிய உளவியல் மருத்துவர் விக்டர் ஃபிராங்கல் எழுதி 1946-ம் ஆண்டு வெளிவந்த ‘வாழ்வின் அர்த்தம் – மனிதனின் தேடல்’ (Man’s Search for Meaning) புத்தகம் அதற்கு ஓர் உதாரணம். இரண்டாம் உலகப் போரின்போது, நாஜி வதை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு உளவியல் மருத்துவரின் அனுபவங்கள் இவை.
எப்போது வேண்டுமானாலும் வாழ்க்கை பறிபோகும் என்ற சூழலில் ஒவ்வொரு நாளையும் கடக்கும் ஒரு சராசரிக் கைதியின் மனநிலை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கான பதிலைத் தேடுகிறது இந்தப் புத்தகம். வதை முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கைதி, தன் வருங்காலத்தை எப்படிக் கற்பனை செய்கிறான் என்பதை வைத்து அவன் வாழ்நாள் தீர்மானிக்கப்படுவதாகச் சொல்கிறார் விக்டர் ஃபிராங்கல்.
இந்தப் புத்தகம், முதல் பாதியில் வதை முகாமில் ஃபிராங்கலுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இரண்டாம் பாதியில், வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் ‘லோகோதெரபி’ என்று அவர் கண்டறிந்த உளவியல் சிகிச்சை முறை கோட்பாட்டையும் விளக்குகிறது. 24 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கும் இந்தப் புத்தகம் 1.2 கோடிப் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தமிழில் ச. சரவணன் மொழிபெயர்த்திருக்கிறார்.
எதற்காக வாழ வேண்டும்?
எதற்காக வாழ வேண்டும் என்ற கேள்விக்கான பதிலைத் தெரிந்துவைத்திருக்கும் மனிதன், எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் வைராக்கியத்துடன் வாழ்ந்துவிட முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறார் ஃபிராங்கல். வாழ்வதற்காக ஒரு வலிமையான நோக்கத்தை உருவாக்கி வைத்திருப்பவர்கள், தங்கள் இருப்புக்கு எவ்வளவு ஆபத்து வந்தாலும் அந்த ஆபத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள் என்று நிறுவுகிறது இந்நூல்.
அதற்கு மாறாக, வாழ்வதற்கான எந்த நோக்கமும் லட்சியமும் இல்லாதவர்கள் வாழ்க்கையை உள்ளூரத் தொடர விரும்புவதில்லை. அதனால் அவர்கள் சீக்கிரமே இந்த உலகத்தைவிட்டுக் காணாமல் போய்விடுகிறார்கள். ‘எதற்காக வாழ வேண்டும்?’ என்ற கேள்விதான் வதை முகாமில் தன்னை வழிநடத்தியதாகச் சொல்கிறார் அவர். இந்தக் கேள்விக்கான பதிலைத் தேட முயலாத வதைமுகாம் கைதிகள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது விரைவில் உயிரிழந்திருக்கிறார்கள்.
எந்தக் குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்ற சூழலில், நேசம், பணி, துன்பத்திலும் கைவிடாத கண்ணியம் என்ற மூன்று வாழ்க்கை நோக்கங்கள்தாம் தன்னையும் இன்னும் பல வதைமுகாம் வாசிகளையும் காப்பாற்றியதாகச் சொல்கிறார் ஃபிராங்கல்.
அன்பே விமோசனம்
ஒருபுறம், வதை முகாம் அனுபவங்களை எழுதிவைக்கும் தன் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு படியெடுப்பது எப்படி என்ற சிந்தனை. இன்னொருபுறம் நீண்ட நாட்களுக்குமுன் தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்டு பெண்கள் வதை முகாமுக்கு அனுப்பப்பட்ட தன் மனைவியைப் பற்றிய சிந்தனை வதை முகாமில் அன்றாடம் தூக்கமில்லாமல், சுமையுடனும், பசியுடனும் மோசமானதாகக் கடந்தாலும், தன் மனைவியின் மீது வைத்திருந்த நேசமே அவருக்கு விமோசனம் அளித்ததாகக் குறிப்பிடுகிறார்.
தன் மனைவியின் பிம்பத்தைத் தனக்குத் துணையாக எப்போதும் தன் மனத்தில் பதிந்து வைத்திருந்ததாகச் சொல்கிறார் அவர். வலிக்கு மாற்றுமருந்தாகக் காதல் இருந்தது என்கிறார் அவர். “மனிதன் நேசத்தின் வழியாகவோ, காதலில் இருப்பதன் வழியாகவே விமோசனத்தை அடைகிறான். இந்த உலகில் எதுவுமே மிச்சமில்லாமல் தீர்ந்த நிலையில் கூட, ஒரு மனிதனால்கூடத் தன்னை நேசிப்பவரைப் பற்றிச் சிந்திக்கும்போது பேரின்பத்தை உணர முடியும் என்பதை அப்போது உணர்ந்துகொண்டேன்” என்கிறார் ஃபிராங்கல்.
தன் மனைவி உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதைக் கூடத் தெரிந்துகொள்ள முடியாத சூழலில், அவர் மீது தான் வைத்திருந்த அளவற்ற அன்புதான் தன்னை வழிநடத்தியதாகச் சொல்கிறார் அவர்.
எதையும் தாங்க முடியும்
வதை முகாமில் தானும் தன் சக கைதிகளும் அனுபவித்த கொடுமையான தண்டனைகளைப் பற்றி விவரிக்கும்போது, மனித உடலும் மனமும் நாம் நினைப்பதைவிட உறுதியானது என்ற கருத்தை முன்வைக்கிறார் அவர்.
“ஆஷ்விட்ஸ் வதை முகாமில் அடைக்கப்பட்டிருந்த மருத்துவர்களாகிய நாங்கள் அனைவரும் புத்தகங்கள் பொய்களைக் கற்பிக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டோம். குறிப்பிட்ட காலம்வரை தூக்கம் இல்லாமல் கடக்கும் ஒரு மனிதன் இறந்துவிடுவான் என்று எங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது எதுவுமே வதைமுகாமில் எடுபடவில்லை.
இந்த விஷயமில்லாவிட்டால் என்னால் வாழ முடியாது, இது இல்லாமல் என்னால் தூங்க முடியாது, இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்ற எதுவும் அங்கே எடுபடவில்லை. முகாமில் ரயில் பெட்டி இருக்கைகளைப் போல அடுக்கடுக்காக கட்டில்கள் ஆறரை அடியிலிருந்து எட்டு அடிவரை நீளம் இருந்தன.
அதில் ஒவ்வோர் அடுக்கிலும் ஒன்பது பேர் தூங்கினோம்” என்கிறார். இதுபோன்ற மிக மோசமான சூழ்நிலைகளிலும் மனிதனால் ஆன்மிக சுதந்திரத்தையும், மனத்தின் சுதந்திரத்தையும் உணர முடியும் என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.
துன்பத்தின் அர்த்தம்
மனிதன் எதிர்கொள்ளும் துன்பத்துக்கு அர்த்தம் இருப்பதாகச் சொல்கிறார் ஃபிராங்கல். வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதைப் போல துன்பத்துக்கும் அர்த்தம் இருக்கும். மரணத்தைப் போல வாழ்க்கையின் அழிக்க முடியாத பகுதியாக இருக்கிறது துன்பம். துன்பமும் மரணமும் இல்லாமல் மனித வாழ்க்கை முழுமையடையாது என்கிறார் அவர்.
வாழ்க்கையில் மனிதன் எப்படிப்பட்ட துன்பங்களைக் கடந்தும் வாழமுடியும் என்பதற்கான நம்பிக்கையையும் அதற்கு உதாரணமான பல அனுபவங்களையும் இந்தப் புத்தகம் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறது.
விக்டர் ஃபிராங்கல் 1905-ம் ஆண்டு ஆஸ்திரியாவில் பிறந்த இவர், பிரபல ‘லோகோதெரபி’ என்ற உளவியல் சிகிச்சைமுறையை உருவாக்கிய நரம்பியல் நிபுணரும், மனநல மருத்துவரும் ஆவார். யூதப் படுகொலையிலிருந்து தப்பிப் பிழைத்தவர். 1938-ம் ஆண்டில் ஆஸ்திரியா நாஜிக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு, இவரின் யூத அடையாளத்தால் ஆரிய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. 1940-ம் ஆண்டில் இவர் பணியாற்றிவந்த ரோத்ஸ்சைல்ட் மருத்துவமனையில் மட்டும்தான் அப்போது யூதர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அந்தக் காலகட்டத்தில் நாஜி கருணைக்கொலைத் திட்டத்திலிருந்து இவர் பல நோயாளிகளைக் காப்பாற்றினார். 1942-ம் ஆண்டிலிருந்து 1945-ம் ஆண்டுவரை, மூன்று ஆண்டுகளை இவர் நாஜி முகாமில் கழித்திருக்கிறார். ஆரம்பத்தில் நாஜி முகாமில் பொது மருத்துவராகப் பணியாற்றி வந்த இவர், பின்னர் உளவியல் துறை நிபுணத்துவத்தால் முகாமுக்கு அழைத்துவருபவர்களுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். இவர் நாஜி முகாமில் தற்கொலை, உளவியல் தொடர்பான விழிப்புணர்வை தனது உரைகளின் வழியாக தொடர்ந்து ஏற்படுத்திவந்தார். 1944-ம் ஆண்டு, ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்கு அனுப்பப்பட்ட இவர், அங்கே ஐந்து மாதங்கள் அடிமைத் தொழிலாளியாகப் பணியாற்றினார். இந்த முகாம் வாழ்க்கையில் இவர் தன் குடும்பத்தில் தங்கையைத் தவிர அனைவரையும் பலிகொடுத்தார். ‘தி வில் டு மீனிங்’, ‘மேன்’ஸ் ஸர்ச் ஃபார் அல்டிமேட் மீனிங்’, ‘தி டாக்டர் அண்ட் தி சோல்’ போன்றவை இவரது படைப்புகளில் சில. இவர் 1997-ம் ஆண்டு மறைந்தார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT