Published : 13 Sep 2018 10:34 AM
Last Updated : 13 Sep 2018 10:34 AM
ஆண்டாளின் பெயர் கூறும் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். பெரியாழ்வாரின் தலமும்கூட. ஆக, இரண்டு ஆழ்வார்களால் புகழடைந்த தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். வராக ஹேத்திரம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இடம்தான் ஸ்ரீவில்லிபுத்தூர்.
திருமாலின் அழகில் சொக்கிய பெரியாழ்வார் மதுரையில் ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்திருந்தார் அரசர் வல்லபதேவ பாண்டியன். அவருக்கு எழுந்த சந்தேகம் ஒன்றைத் தீர்த்துவைத்தார் விஷ்ணுசித்தர் என்ற இயற்பெயரைக் கொண்ட பெரியாழ்வார். அதில் மகிழ்ந்த மன்னன் அவரைத் தனது பட்டத்து யானையின்மீது அமரவைத்து அனுப்பினார்.
திருமாலின் அழகில் சொக்கிப் போய் அவருக்கே திருஷ்டி கழிக்க முயன்றவர் விஷ்ணுசித்தர். இந்த நோக்கத்தில் இவரால் இயற்றப்பட்டதுதான் ‘திருப்பல்லாண்டு’!
ஒரு நாள் தன் நந்தவனத்தில் உள்ள மலர்ச் செடிகளுக்கு அவர் நீருற்றிக்கொண்டிருந்தபோது துளசிச் செடிகள் அமைந்த பகுதியிலிருந்து ஒரு குழந்தையின் அழுகை ஒலி கேட்டது. பதற்றத்துடன் அங்கே சென்று பார்த்தார் விஷ்ணுசித்தர். அங்கே ஒரு சிறு பெண் குழந்தை அழுதுகொண்டிருந்தது. திருமணம் செய்து கொண்டிருந்தபோதும் இறைத்தொண்டுதான் தன் வாழ்க்கை என்று முடிவெடுத்திருந்த விஷ்ணு சித்தருக்குள் ஓர் ஆழ்ந்த உணர்வு பெருகியது. பாசத்துடன் அந்தக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டார். தன் வீட்டுக்குச் சென்று மனைவி விரஜையிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்தார்.
கோதை என்று அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டார்கள். பெரியாழ்வாரைத் தன் தந்தையாகவே கருதி வளர்ந்தாள் கோதை. திருமால் பக்தியில் தந்தையை மிஞ்சும் அளவுக்கு அவருக்குள் எண்ணங்கள் காணப்பட்டன. "எந்த மனிதனுக்கும் நான் மனைவி ஆக மாட்டேன். திருமாலைத்தான் என் மணாளன் ஆக்கிக்கொள்வேன்’’ என்று மனதுக்குள் உறுதி பூண்டாள்.
பெரியாழ்வார் பூக்களைக் கொய்வதும், அந்தப் பூக்களைக் கோதை மாலையாகத் தொடுப்பதும், அந்த மாலையைப் பெரியாழ்வார் ஆலயம் சென்று திருமாலுக்குச் சாத்துவதும் வழக்கமாயின.
ஸ்ரீரங்கத்தில் காட்சி கொடுத்த பெருமாள்
ஒரு நாள் கனவில் வந்து பெருமாள் ஆணையிட்டதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கத்துக்குத் தன் மகளை அழைத்துச் சென்றார் விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வார். அங்கு ஆண்டாளின் உருவம் ஜோதியாக மாறி திருவரங்கனின் திருவுருவத்தில் கலந்தது. மெய்சிலிர்க்க ஸ்ரீரங்கனைச் சேவித்தார் பெரியாழ்வார். பின்பு பெரியாழ்வாரே ஆண்டாளையும் மணவாளரையும் பெரிய திருவடியையும் திருவுருவங்களாக அங்கே எழுந்தருளச் செய்தார். தன் சொத்துகளை எல்லாம் ஆலயத்துக்கு எழுதிவைத்தார்.
கல்வெட்டுகளில் ‘சூடிக்கொடுத்த நாச்சி’’ என்று ஆண்டாள் அறியப்படுகிறார். விஷ்ணுசித்தர் பெரியாழ்வார் எனப்படுவதுடன் அவர் கருடரின் அம்சமாகவும் கருதப்படுகிறார்.
மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்த ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மிகப் பிரபலம். அந்த மாதத்தில் ஆண்டாளின் எண்ணெய் காப்புக்காக 61 வகை மூலிகைகள் அடங்கிய காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகிறது. மார்கழி முடிந்ததும் பக்தர்களுக்கு இந்தத் தைலம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இதை நோய் தீரும் மருந்தாக எண்ணுகிறார்கள் பக்தர்கள்.
இடையில் 18 ஆண்டுகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் பெரிய தேர் ஓடாதிருந்தது. இந்தத் தேர் கலைநயம் மிக்கது. ஒன்பது மரச் சக்கரங்களைக் கொண்டது. உச்சியில் கும்பக் கலசம் கொண்டது. கம்பீரத்தின் அடையாளமாக இருக்கும்.
பின் பெரிய தேர் சீர் செய்யப்பட்டது. பாதுகாப்பு அம்சங்கள் 1974-ல் சேர்க்கப்பட்ட பிறகு பெரிய தேர் மீண்டும் வலம்வரத் தொடங்கியிருக்கிறது. வராக ஹேத்திரம், செண்பகராய ஹேத்திரம், வடேஸ்வரபுரம், விக்ரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஆலய வளாகத்துக்குள் குழந்தை கோதையை விஷ்ணுசித்தர் கண்டெடுத்த நந்தவனமும் காணப்படுகிறது.
ராஜகோபரம் 192 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. தமிழக அரசின் முத்திரையில் காணப்படும் கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலய கோபுரம்தான். மதம் குறித்த விவாதங்களில் வெற்றிபெற்று அப்படிக் கிடைத்த பரிசுத் தொகையைக் கொண்டு பெரியாழ்வார் எழுப்பிய கோபுரம் இது என்கிறார்கள்.
ஆண்டாள் சன்னிதியைச் சுற்றியுள்ள சுவரில் அவரது வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியங்களாகக் காட்சியளிக்கின்றன. நுழைவுப் பகுதியிலிருந்து கருவறைவரை படர்ந்திருக்கும் மண்டபத்தில் மோகினி, மன்மதன், ரதி மற்றும் பல திருவுருவங்கள் சிலைகளாகக் காட்சியளிக்கின்றன.
வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஒரே இடம் ஸ்ரீவில்லிபுத்தூர்தான். ஒரே பெண் ஆழ்வார் பிறந்த இடமும்கூட.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவ்வடி செவ்விதிருக் காப்பு.
திருமால் பெருமையோடு அவரது இருபெரும் பக்தர்களின் பெருமையையும் எடுத்துரைக்கும் தலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் விளங்குகிறது.
(நிறைவடைந்தது)
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT